தமிழ்ச் சினிமாவில் கதை பஞ்சம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் சில நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கமர்ஷியல் ஹிட்டை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி போன்றவர்களும், நகைச்சுவை ஒன்றையே மையமாக வைத்து சிவகார்த்திகேயன், ஜெய், மிர்ச்சி சிவா போன்றவர்களும் வலம் வந்து கொண்டிருக்க.. இப்போது இயக்குநர்கள் மட்டுமே கதையை நம்பி களத்தில் இருக்கிறார்கள்..
இந்த வருடம் வரவிருக்கும் புதிய கதைப் படைப்புகளில் தமிழ்ப் பாரம்பரியத்தை சுட்டிக் காட்டும்விதமாக பரதக் கலை, நாடகக் கலை, கூத்துக் கலை, இசையை மையமாக வைத்து சில படங்கள்.. அதிலும் குறிப்பிட்டத்தக்க பெரியவர்களின் படங்களே வரவிருப்பது தமிழ்ச் சினிமா உலகத்திற்கு சந்தோஷத்தையே கொடுக்கும்..
இயக்குநர் பாலா தன்னுடைய அடுத்தப் படத்திற்கு கரகாட்டம் என்னும் கலையை மையமாக வைத்து எடுக்கப் போகிறாராம். சசிகுமார் நடிக்கவிருக்கிறார். ஹீரோயின்தான் யார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. முதலில் ஷ்ரேயா என்றார்கள். இப்போது வரலட்சுமி என்கிறார்கள். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இசை இளையராஜா என்பது உறுதியாகிவிட்டது.
சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவனைக்குச் சென்ற இசைஞானி, அங்கிருந்து திரும்பிய மறுநாளே பாலாவின் படத்திற்குத்தான் இசையமைத்தார். தமிழ் இசைக் கலைஞர்களை வரவழைத்து அவர்களது இன்னிசையில் பாலாவின் படமும் துவங்கியுள்ளது.
அடுத்து ‘காவியத்தலைவன்’. இது நாடகக் கலையை மையமாக வை்தது எடுக்கப்பட்டுள்ளது. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரும்பாடுபட்டு வளர்த்த தமிழ் நாடகக் கலையின் ஒரு பகுதியையும், தெய்வப் பாடகி திருமதி கே.பி.சுந்தராம்பாள்-நடிகர் கிட்டப்பாவின் காதல் வாழ்க்கையையும் கலந்து ஒரு அற்புதமான படமாக வெளிவர காத்திருக்கிறது.
பிருத்விராஜ், சித்தார்த், நாசர், பொன்வண்ணன், வேதிகா ஆகியோர் நடிக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் வசந்தபாலன்.
மூன்றாவதாக இன்றைக்கு ஷூட்டிங் துவங்கிய உலக நாயகன், கலைஞானி கமலஹாசனின் ‘உத்தமவில்லன்’.
இந்தப் படம் ‘தெய்யாட்டம்’ என்ற கேரளாவின் மலபார் கடற்கரை பகுதியில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டியத்தின் பின்னணியில் இருக்குமென்று தெரிகிறது. அது மட்டுமில்லாமல் வில்லுப்பாட்டின் பின்னணியிலும் இது இருக்கலாம் என்றும் போஸ்டர் டிஸைன் சொல்கிறது.. ஆக.. இதுவும் தமிழ் இசைக் கலையின் தொடர்ச்சியான படமாகவே தென்படுகிறது.
கமல் ஆழம் தெரியாமலோ.. அல்லது விஷயம் அறியாமலோ எந்த விஷயத்திலும் இறங்க மாட்டார். ஆக.. இந்தப் படத்தின் கதை நிச்சயமாக நம்மால் யூகிக்க முடியாததாகவும், பெருமைப்படக் கூடியதாகவும் இருக்கும் என்றே நம்பலாம்.
இது மூன்றுமில்லாமல்.. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே துவங்கப்பட்ட ‘தரணி’ என்றொரு திரைப்படமும் கிராமங்களில் நடத்தப்படும் கூத்து என்னும் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
குமரவேல், சண்ட்ரா எமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். குகன் சம்பந்தம் இயக்கியிருக்கும் இந்தப் படம், என்ன காரணத்தினால் இன்னமும் திரைக்கு வராமல் இருக்கிறதென்று தெரியவில்லை..
கதை இல்லை.. கதை இல்லை என்பவர்கள்.. இது போன்ற ஒரு கலையின் பின்னணியில் கதை அமைத்து களம் கண்டால்.. வித்தியாசத்தை வேண்டி நிற்கும் ரசிகர்களின் ஆதரவு அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்..!
கோடம்பாக்கத்து படைப்பாளிகள் இதன் உண்மையை உணர வேண்டும்..!