இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த நேரடி தமிழ்ப் படங்கள் 160. இதில் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தந்தவை வெறும் 6 படங்களே என்பது கசப்பான உண்மை.
மிச்சமெல்லாம் தோல்வி படங்கள்தான்.. நஷ்டத்தில் பெரும் நஷ்டம், ஓரளவு நஷ்டம்.. சுமாரான நஷ்டம் என்று சகலவிதங்களிலும் பிரித்து தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இதில் பெரும் நஷ்டம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே.. கோடிகளில் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள். போஸ்டர் ஒட்டின காசுகூட வரலை என்றால் அது சின்ன பட்ஜெட் படங்களுக்குத்தான்..! இந்த மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர்கள்கூட அடுத்த வருடமே வேறொரு படத்தைத் தயாரிக்க வருகிறார்கள். இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது..? யாரால் கொடுக்கப்படுகிறது..? இதுதான் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களை பார்த்து ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்வி..
நடிப்பவர்கள் பணம் கொடுக்கிறார்கள். இயக்குநரும் பணம் போடுகிறார்.. இசையமைப்பாளரும் பணம் போடுகிறார். அதிக பணம் போடுபவர் தயாரிப்பாளராகிறார். இப்படி பலரும் பணம் போட்டு ஒரு படத்தில் தங்களுடைய பங்களிப்பையும் கொடுத்து படத்தை உருவாக்கி வெளியிடுகிறார்கள். இந்த முறையில் உருவான படங்கள் தோல்வியடைந்தால் அவரவர்க்கு சிறிய அளவிலான பணமே நஷ்டமாகிறது என்பதால் கவலையில்லாமல் போய்விடுகிறார்கள்.
இப்போது ஒரே நபர் 1 கோடி ரூபாய் கொடுத்து படத்தைத் தயாரிப்பதைவிட.. 100 பேர் 1 லட்சம் கொடுத்தோ அல்லது 200 பேர் 50000 ரூபாய் கொடுத்தோ ஒரு படத்தைத் தயாரிக்கலாம் என்கிற Crowd Funding முறை சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறது.
கன்னடத்தில் கடந்தாண்டு வெளியான ‘லூசியா’ திரைப்படமும், ஹிந்தியில் வெளியான ‘முனீர்’ திரைப்படமும், சென்ற வாரம் தமிழில் வெளியான ‘குறையொன்றுமில்லை’ திரைப்படமும் இது போன்ற Crowd Funding முறையைப் பயன்படுத்தி பணம் பெற்று அதன் மூலம் தயாரிக்கப்பட்டன.
இந்தப் புதிய முறையை தமிழ்ச் சினிமாவிற்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்த எண்ணியிருக்கிறார்கள் தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களான முத்துராமலிங்கனும், ஜெய்லானியும்.
ஜெய்லானி ஏற்கெனவே ‘கேள்விக்குறி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். முத்துராமலிங்கன் ‘சிநேகாவின் காதலர்கள்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த இருவரும் இணைந்து தங்களது அடுத்த படம் பற்றி பேசியபோது நமக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காத பட்சத்தில் வேறு எந்த வகையில் முதலீட்டை பெறுவது என்று யோசித்திருக்கிறார்கள்.
அப்போது அவர்களது சிந்தனையில் உதித்த இந்த யோசனையின்படி ‘மூவி பண்டிங் நெட்வொர்க்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் மூலமாக திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் பணம் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அவர்களையும் தயாரிப்பாள பங்குதாரர்களாக்கி படத்தை தயாரித்து, இயக்கலாம் என்று திட்டம் வகுத்துள்ளனர்.
இதன் முதல் கட்டமாக ஜெய்லானி ‘சவுண்ட் கேமிரா ஆக்சன்’ என்னும் படத்தையும், முத்துராமலிங்கன் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ என்னும் படத்தையும் இயக்கவுள்ளனர். இந்த இரண்டு படங்களுக்கான தயாரிப்புச் செலவில் பாதி இப்போதே அவர்களது கையில் கிடைத்தும், மீதமான முதலீட்டை இந்த ‘மூவி பண்டிங்’ முறையில் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில் உள்ளார்கள்.
இந்த திட்டத்தின் அறிமுக விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
துவக்கத்தில், இயக்குநர் ஜெய்லானி நடத்திவரும் ‘www.soundcameraaction.com’ நடத்திய சிறந்த திரைக்கதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
150 பேர் போட்டியிட்ட இந்தப் போட்டியில் முழு நீள திரைப்படத்துக்கான 5 திரைக்கதைகள் மற்றும் குறும் படத்துக்கான 5 திரைக்கதைகள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. சிறந்த திரைக்கதையை எழுதிய அந்த கதாசிரியர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமார் மற்றும் இயக்குனர் மீரா கதிரவன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
இத்திரைக்கதைப் போட்டியில் வென்றவர்களுக்கும் அந்த திரைக்கதையைப் படமாக்குவதற்கான முயற்சிகளிலும் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் நிறுவனம் வரும் காலத்தில் நிச்சயம் உதவி செய்ய உள்ளதாக இயக்குநர் ஜெய்லானி தெரிவித்தார்.
இயக்குநர் மீரா கதிரவன் பேசுகையில், “இப்போது வெற்றி பெற்றவர்களின் கதைகளில் ஒன்றை நிச்சயம் தான் தனது அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வேன்…” என்று உறுதியளித்தார்.
இயக்குநர் ஜெய்லானி பேசுகையில், “தமிழில் திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எவ்வித முன் அனுபவமும் இல்லாமல் படம் தயாரிக்க வருவதால்தான் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. அதோடு இப்போதெல்லாம் எடுக்கப்படும் படங்களில் 5 சதவிகிதப் படங்கள்கூட ஜெயிப்பதில்லை. லாபத்தை சம்பாதிப்பதில்லை.. ஆனாலும் கூட்டம் வந்து கொண்டுதான் இருக்கிறது..
ஆக.. தோல்வியடையும் படங்களை தயாரிப்பவர்கள் வேறு ஒரு துறையில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. ஒவ்வொரு துறைக்கும் அத்துறையைப் பற்றி முன் உதாரணத்துடன் சொல்லிக் கொடுக்க ஆட்கள் உண்டு. ஆனால் திரைப்படத் துறையில் அது போன்று இல்லை.. இதனாலேயே பல குழப்பங்கள் உருவாகுகின்றன.
முதலில் அன்னியோன்யமாக பழகி படத்தை துவக்கும் தயாரிப்பாளரும், இயக்குநரும் படம் முடியும்போது சண்டையில் ஈடுபடுகிறார்கள்.. படத்தயாரிப்பை முறைப்படுத்துவது எப்படி என்று இங்கே யாரும் யோசிக்கவே இல்லை.. இப்போது கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘லூசியா’, ஹிந்தி ‘முனீர்’ ஆகிய படங்கள் இது போன்ற வெளி ஆட்களிடமிருந்து பணத்தைப் பெற்று படத்தைத் தயாரித்து வெற்றி பெற்றிருக்கின்றன.
அதைப் பார்த்து.. அதேபோல் தமிழிலும் முயற்சி செய்தால் என்ன என்று நினைத்துத்தான் இதனை ஆரம்பித்திருக்கிறோம்.. எங்களை நம்பி பணம் முதலீடு செய்பவர்களுடன் முறைப்படியான, நியாயமான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கும் போட்ட காசு திரும்பக் கிடைக்கும்படியான வகையில்தான் நாங்கள் படத்தை உருவாக்க இருக்கிறோம். இந்த எங்களது ‘மூவி பண்டிங் நெட்வொர்க்’ திட்டம் வெற்றி பெற்றால், பலரும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படுவார்கள்..” என்றார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது, “இந்த கான்செப்ட் நல்லாயிருக்கு.. சினிமால நம்ம இயக்குநர், தயாரிப்பாளர் இவர்களையும் தாண்டி டிஸ்டிரிபியூட்டர், தியேட்டர்காரர்கள் என்று மெயின் ஆட்களும் இருக்கிறார்கள். உண்மையாக சினிமா துறையை கன்ட்ரோல் செய்றது அவங்கதான்.. கண்ணுக்குத் தெரியாமல் பல செலவுகள் நடப்பதும் அங்கேதான்.
தமிழ்நாட்டில் முதல் ரவுண்டில் திரையிடுவதற்கு ஏற்ற 800 தியேட்டர்களில்கூட நமக்கு லாபம் தராத தியேட்டர்களும் இருக்கின்றன. இந்த மாதிரியான தியேட்டர்களில் ஒவ்வொரு தியேட்டரிலும் புரமோஷன் செலவுகளையும் தாண்டி, ‘க்யூப்’ மற்றும் ‘ஃப்ளெக்ஸ்’களுக்காக 25,000 ரூபாயாவது தனியாக ஒதுக்க வேண்டும். என் தயாரிப்பில் வெளியான ‘பீட்ஸா’ தமிழகம் முழுக்க நன்கு ஓடினாலும், 35 தியேட்டர்களில் இந்த 25,000 ரூபாய் கூட வசூலாகவில்லை. அப்போ அது எனக்கொரு நஷ்டம்தானே..?
நானும் தொடர்ச்சியா படம் எடுக்கிறேன்னு சொன்னாலும் முழுக்க, முழுக்க என்னுடைய சொந்தப் பணத்துல எடுக்கல.. எனக்கு சில பேர் படம் எடுக்க பணம் கொடுக்குறாங்க. நான் அதை செலவழிச்சு படம் எடுத்திட்டு.. அவங்களுக்கு திருப்பிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். திருப்பிக் கொடுத்தால்தானே நாளைக்கு அவங்ககிட்ட வாங்க முடியும்..? ஸோ.. இது மாதிரி மூவி பண்டிங்லேயும் பணத்தைத் திருப்பிக் கொடுக்குற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்திட்டா நிறைய பேர் இது மாதிரி சினிமா துறைல பணத்தை முதலீடு செய்ய முன் வருவார்கள். இத்திட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.
ஒரு நல்ல, புதுமாதிரியான முயற்சியை இயக்குநர்கள் இருவரும் முன் வைத்திருக்கிறார்கள்.. வெற்றி பெற்றால் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு புதிய திருப்பம் கிடைத்ததுபோல இருக்கும். வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!
‘மூவி ஃபண்டிங் நெர்வொர்க்’ பற்றிய தொடர்புக்கு www.moviefunding.in