இப்படியெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும் என்று பொதுமக்கள் நினைத்திருந்த ஒரு கதை, தற்போது நிஜமாகவே கேரளாவில் நடந்தேறியிருக்கிறது.
ஒரு வருடத்திற்கு முன்பாக கேரளாவில் சங்கனாச்சேரி என்ற இடத்தில் தீபு என்கிற 29 வயது இளைஞன் படுகொலை செய்யப்பட்டார். அவர் இருந்த இடத்திற்கு காரில் வந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல்தான், அவரை கொலை செய்தது என்று நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தார்கள்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின் கொலையாளிகள் என்று சொல்லி 4 பேரின் முக ஓவியத்தையும் வெளியிட்டது கேரள போலீஸ். அத்தோடு சரி.. ஆள் சிக்கவில்லையென்று விட்டுவிட்டார்கள்.
2 நாட்களுக்கு முன்பாக அந்த முக ஓவியத்துடன் கிட்டத்தட்ட பொருந்தும் அளவுக்கான ஒரு புகைப்படம் கேரளா முழுவதும் ஒரு பெரிய பத்திரிகையின் சார்பில் போஸ்டராக ஒட்டப்பட்டிருந்தது. அந்த போட்டோவில் இருந்த நபரின் பெயர் சங்கீத் லூயிஸ். இவர் ஒரு சினிமா இயக்குநர்.
மூத்த நகைச்சுவை நடிகரான சலீம்குமாரின் நடிப்பில் ‘Ennu Swantham Elanjikkavu PO’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் சங்கீத். அந்த பேட்டிக்காக சங்கீத்தின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகளை கேரளா முழுவதும் ஒட்டியிருந்தது அந்தப் பத்திரிகை.
அந்த புகைப்படத்தை பார்த்து யாரோ ஒருவர் போலீஸிற்குத் தகவல் கொடுக்க அவர்களும் தங்களிடமிருந்த ஆதாரத்தை வைத்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தாங்கள் தேடி வரும் கூட்டணியின் தலைவன் இந்த சங்கீத் லூயிஸ்தான் என்பது தெரிய வர.. பிறகென்ன..?
நேற்றைக்கு சங்கீத் லூயிஸ் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த இடத்திற்கே வந்து வளைகாப்பு நடத்தி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். விசாரணையில் அந்தக் கொலையைச் செய்தது தான்தான் என்று ஒத்துக் கொண்டாராம் சங்கீத்.
இது எப்படி இருக்கு..?