நாகிரெட்டியாருக்கு தபால் தலை வெளியிட வேண்டும்-ஏவி.எம்.சரவணன் கோரிக்கை

நாகிரெட்டியாருக்கு தபால் தலை வெளியிட வேண்டும்-ஏவி.எம்.சரவணன் கோரிக்கை

தமிழ்த் திரையுலக ஜாம்பவானான நாகிரெட்டியின் நினைவாக தபால் தலை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமத்தில் பிறந்தாலும் தமிழ்நாட்டில் சென்னையில் கால் பதித்து தமிழ்த் திரையுலகம் வளர தானும் ஒரு தூணாக இருந்தவர் விஜயா-வாஹினி ஸ்டூடியோ அதிபரான பி.நாகிரெட்டி.

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றிருக்கும் இந்தப் பெரியவரின் பெயரில் ஆண்டு தோறும் சிறந்த மக்கள் விரும்பிய படத்திற்கு விருதளித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சென்ற ஆண்டு சிறந்த மக்கள் விரும்பிய படமாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், நாகிரெட்டி பற்றிய தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது, “நாகிரெட்டி போன்ற பெரியவர்களின் தபால் தலை வெளியிடுவது மத்திய அரசின் வழக்கமாக இருக்கிறது. ஆனால் நாகி ரெட்டியார் இறந்து 10 வருடங்களாகியும் இன்னமும் அது செய்யப்படவில்லை. யாராவது இதனை முன்னெடுத்து முயற்சி செய்தால் நானும் இதற்கான உதவிகளைச் செய்வேன். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தமிழ்த் திரையுலக பெரிய மனிதருக்கு தபால் தலை வெளியிடுவது தமிழச் சினிமாவுக்கே பெருமைக்குரிய விஷயம்.. இதனை சமப்ந்தப்பட்ட அரசுகளிடம் கோரிக்கையாகவே நான் வைக்கிறேன்..” என்றார்.

தபால் தலை வெளியிடுவது மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்டது என்றாலும், இதனை முன்னெடுத்துச் சொல்ல வேண்டியது தமிழ்த் திரைப்படத் துறைதான். ஆனால் அவர்கள்தா்ன் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருக்கிறார்களே.. பின்பு யாருக்கு இந்த யோசனையெல்லாம் வரும்..?

Our Score