full screen background image

மூத்தக்குடி – சினிமா விமர்சனம்

மூத்தக்குடி – சினிமா விமர்சனம்

1985-ம் ஆண்டில் நடக்கும் கதை என்று படத்தில் சொல்கிறார்கள். ஆனால் படமாகப் பார்க்கும் போது இது 1965-ம் ஆண்டில் வந்திருக்க வேண்டிய படம் அல்லவா என்று தோன்றுகிறது.! கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்து எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள் போலும்..!   

கதையின் நாயகர்களாக தருண் கோபி, பிரகாஷ் சந்திரா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களோடு கே.ஆர்.விஜயா, ஆர்.சுந்தர்ராஜன், சிங்கம் புலி, இயக்குநர் ராஜ்கபூர், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரகாஷ் சந்திரா கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு தயாரித்தும் இருக்கிறார். ரவி பார்கவன் எழுதி இயக்கி இருக்கிறார்.

கள்ளச் சாராயம், உயிர் பலி, கட்டுப்பாடான கிராமத்துப் பெரிய குடும்பம், சாராய ஆலை திறக்க விரும்பும் தொழிலதிபர், தனியான ஒரு காமெடி டிராக், இதனோடு அண்ணன் தம்பிக்கு இடையேயான முக்கோணக் காதல். இந்தப் புள்ளிகளை எல்லாம் கோடு போடுவது போல் எளிதாக இணைத்தீர்கள் என்றால் அதுதான் இந்த ‘மூத்தக்குடி’ படத்தின் கதை. குடி பற்றிய மற்றொரு கதை.

1985-ம் ஆண்டிலேயே தமிழகத்தின் கிராமத்தின் பெரிய குடும்பத்தில் லிப்ஸ்டிக் மற்றும் கண் மை போடக் கூடிய பாட்டியாக கே.ஆர்.விஜயா.  இந்த ஒற்றைக் கதாபாத்திர வடிவமைப்பே மொத்த படமும் எப்படி இருக்கும் என்று சொல்லிவிடுகிறது.  

நடிக்கும் நடிகர் நடிகைகள் பெயருக்கு நடித்தால் பரவாயில்லை. கதை எழுதி இயக்கும் இயக்குநரே பெயருக்கு எழுதி, பெயருக்கு படப்பிடிப்பு நடத்தி, பெயருக்கு இயக்கிவிட்டுப் போனால் படம் இப்படித்தான் வரும்.

இயக்குநர் கதையாக எழுதும்யோதும், காட்சியாக எழுதும் போதும் இதில் என்ன இருக்கிறது என்று சற்றும் யோசிக்கவில்லை என்று தெரிகிறது.  மிக சாதாரணமானக் கதை, மிக மோசமான திரைக்கதை, மிக மிக மோசமான நடிப்பு என்று படம் நிமிடத்திற்கு நிமிடம் நம்மை வகை வகையாக சித்ரவதை செய்து கொல்கிறது.

கதை போகிற போக்கை வைத்துப் பார்த்து, இதிலும் இறுதியில் தருண் கோபியின் தியாகத்தைத்தான் பார்க்கப் போகிறோம். இதை வேறு பார்க்க தனித் தைரியம் வேண்டுமே என்று மனதை திடப்படுத்திக் கொண்டு காத்திருந்தால், ட்விஸ்ட் அடிக்கிறோம் பேர்வழி என்று தருண் கோபியின் தியாகக் காட்சிகளுக்கு எண்ட் கார்டு போட்டு, அவரின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் டைட்டில் கார்ட்டு போடுகிறார்கள்.  அவர் கையால் சண்டை செய்கிறாரோ இல்லையோ, கத்தி கத்தி வாயால் சண்டை செய்து நம்மை இரத்த வாந்தி எடுக்க வைக்கின்றனர்.

ஏதோ புரட்சி செய்கிறோம் என்கின்ற நினைப்பில் படத்தின் நாயகி என்று நம்ப வைக்கப்பட்ட ஒருவரைக் கொண்டு கொலையெல்லாம் செய்கிறார்கள்.

கந்தா ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் பெரும்பாலான படம் இருட்டாகவே இருக்கிறது. முருகானந்தின் இசை ஏதோ சில இடங்களில் நமக்கான இரங்கல் இசையாகவும், பல இடங்களில் இரைச்சலாகவும் மட்டுமே மனதில் நிற்கிறது. 

நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கின்ற படங்கள் எல்லாம், நல்ல படங்களாக முடியாது என்பது நன்றாகவே தெரியும். அந்த வகையில் சமீபத்திய உதாரணம்தான் இந்த “மூத்தகுடி” திரைப்படம்.

‘மூத்தக்குடி’ – குடிப் பழக்கத்தை எப்படி மறக்க வேண்டுமோ, அதைவிட வேகமாக மறந்துவிட வேண்டிய திரைப்படம்.

மதிப்பெண் : 1.5 / 5

 

Our Score