full screen background image

நந்திவர்மன் – சினிமா விமர்சனம்

நந்திவர்மன் – சினிமா விமர்சனம்

ஏ.கே.பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடித்திருக்கிறார். ஆஷா கவுடா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் போஸ் வெங்கட், ‘நிழல்கள்’ ரவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், ‘மீசை’ ராஜேந்திரன், ‘அசுரன்’ அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன், 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘நந்திவர்மன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

செஞ்சிப் பகுதியில் புதையுண்டு போன பல்லவ சாம்ராஜியத்தின் மன்னன் நந்திவர்மனின் வரலாற்றையும், மண்ணோடு மூழ்கிப் போன பெரும் சிவாலயத்தையும் வெளிக்கொணர வேண்டும் என்கின்ற முனைப்புடன் கிளம்பும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவினர் ஒருபுறம், செஞ்சியில் கோவில் புதையுண்டு போன இடத்தில் நிகழும் மர்ம மரணங்கள் மறுபுறம் என இந்த இரண்டிற்கும் விடை சொல்லும் முயற்சிதான் இந்த நந்திவர்மன் திரைப்படம்.

செஞ்சி பகுதியில் பல்லவ ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நந்திவர்மன் என்னும் மன்னன் வாழ்ந்ததாகவும், அவனிடம் கண்ணிற்குப் புலப்படாத ஒரு ஆயுதம் இருந்ததாகவும், அதைக் கொண்டு அவன் பல போர்களில் வெற்றி வாகை சூடியதாகவும், அவன் ஊரைக் கொள்ளையடிக்க வந்த ஒரு கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற மன்னன் இறந்து போனதும், அந்த ஊரும் கோவிலும் மண்ணோடு புதைந்து போயின என்று நம்பப்படுகிறது. 

எனவே அந்த ஊரில் போய் அகழ்வாராய்ச்சி செய்தால் பல்லவ மன்னன் நந்திவர்மனின் வரலாறு மற்றும்  பழமை வாய்ந்த புராதான சிவன் கோவில் போன்றவற்றை மீட்கலாம் என்கின்ற நம்பிக்கையில் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு வருகிறது. ஆனால், அந்த ஊர் மக்கள் கோவில் புதையுண்டு போனதாக அஞ்சப்படும் பகுதியில் தோண்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணம், அப்பகுதிக்கு சென்ற ஊர்க்காரர்கள் மர்மமாக இறந்து போவதாகவும் இதனால் ஊருக்குள் ஆறு மணிக்கு மேல் அப்பகுதிக்கு செல்ல தடை இருப்பதாகவும், இங்கு ஆராய்ச்சி செய்வதால் தங்கள் ஊருக்கு ஏதாவது பாதிப்பு நேரும் என்றும் நம்புகிறார்கள். 

இதனை மீறி அங்கு தொல்பொருள் பணி நடந்ததா…? நந்திவர்மன் வரலாறு மீட்கப்பட்டதா..? அந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன..? என்பதை விவரிக்கிறது திரைக்கதை.

தொல்பொருள் குழுவினருக்கு பாதுகாப்பு கொடுக்க வந்து, பின்னர் அங்கு நிகழும் மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரிக்கத் துவங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில்  சுரேஷ் ரவி நடித்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரிக்கு ஏற்ற உடல்வாகுவுடன் ஆஜானுபாகுவாக இருக்கிறார். விசாரணை, துப்பறிதல், சண்டைக் காட்சிகள் ஜொலிக்கும் அளவிற்கு காதல் காட்சிகளிலோ எமோஷ்னல் காட்சிகளிலோ சோபிக்கவில்லை.

நாயகியாக வரும் ஆஷா வெங்கடேஷ் அழகாக இருக்கிறார். தொல்பொருள் குழுவில் மாணவியாக வரும் வந்த வேலையை மறந்துவிட்டு, நாயகனான இன்ஸ்பெக்டரை காதல் செய்வதில் பெரும் பொழுதைக் கழிக்கிறார். நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லாத கதாபாத்திரம் என்பதால் நடிப்பை கணிக்க முடியவில்லை.

தொல்பொருள் ஆராய்ச்சி குழுவின் தலைமைப் பொறுப்பில் போஸ் வெங்கட். சீனியர் நடிகர் என்பதால் நடிக்க வாய்ப்பிருக்கும் இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  இவரோடு சேர்ந்து மற்றொரு சீனியர் நடிகராக வரும் நிழல்கள் ரவியும் நடிப்பு தொடர்பான டிப்பாட்மெண்டை தூக்கி பிடிக்கிறார்கள். ஊர் தலைவராக வரும் கஜராஜ் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.  கே.எஸ்.கே.கோபி, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் அம்பானி சங்கர் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

ஜெராட்டு ஃபெலிக்ஸ்-ன் இசை காட்சிகளின் மர்மத்தைக் கூட்ட பயன்பட்டிருக்கிறது.  கனிராஜன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சியான் முத்து மூவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். செஞ்சி பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்களின் ஏரியல் ஷாட்கள் நிலப்பரப்பின் அழகை கவர்ந்து வந்திருக்கின்றன.

வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய ஒரு மர்மக் கதை என்னும் ஐடியா சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருக்கிறது. ஆனால் அக்கதையை படமாக்கியவிதமும், காட்சிகளின் மூலமும் கதாபாத்திரங்களின் மூலமும் ஏற்படுத்திய தேவையற்ற எதிர்பார்ப்புகளும் திருப்பங்களும், சந்தேகங்களும் திரைக்கதை செல்லும் போக்கிற்கு நியாயம் சேர்க்கவில்லை.

உதாரணமாக போஸ் வெங்கட்டின் கதாபாத்திர சித்தரிப்பும், சங்கு ஊதும் சாமியார் “அவன் வந்தால்தான் இந்தக் கதை முடியும்..” என்று கொக்கரிப்பதும், திடீரென்று காலுக்கு கீழாக பூமி உடைந்து செல்வதும், தலைக்கு மேலாக கரும் மேகங்கள் சூழ கொட்டும் மழை அடிப்பதும் என நம்பகத் தன்மையற்ற பல காட்சிகள் நம்மை படத்தின் மையத்தில் இருந்து விலகலடையச் செய்கின்றன.

மேலும் இது போன்ற வரலாற்றுப் பின்னணியும் கிராபிக்ஸ் காட்சிகளும் நிறைந்த திரைப்படங்கள் கோரும் பட்ஜெட், இது போன்ற சிறு பட்ஜெட் படங்களுக்கு பொருந்தாது என்பதால், பானையைக் கட்டி யானையை இழுத்தக் கதையாக ஆகி இருக்கிறது.

நேர்த்தி இல்லாத சி.ஜி. காட்சிகள், கோவில் இடிபாடுகள் காட்சிகள் போன்றவை படத்தின் நம்பகத் தன்மையை கெடுத்து விடுகின்றது. மேலும் வரலாற்றுப் பின்புலம், மர்மமான மரணங்கள், கண்ணுக்குத் தெரியாத போர் ஆயுதம் போன்ற சுவாரஸ்யமூட்டும் விசயங்கள் இருந்தாலும்கூட  அதன் பின்னணியில் கூறப்படும் காரணங்கள் சலிப்பை ஏற்படுத்தி, இந்தப் பின்புலத்தில் வந்த பத்துப் படங்களுடன் இதுவும் ஒன்று என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது.

மொத்தத்தில் இந்த ‘நந்திவர்மன்’ முழுமையான தரிசனத்திற்கு இடையூறாக சில பல நந்திகளைக் கொண்டிருக்கிறான்.

மதிப்பெண் : 2.5 / 5

Our Score