பழைய வெற்றி படங்களை ரீமேக் செய்வதை திரையுலகத்தில் இருக்கின்ற பலர் ஆதரித்தாலும் ரசிகர்கள்தான் அதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்..
என்ன இருந்தாலும் அதே கதையில் எடுக்கப்பட்ட ஒரே படமாக தங்களுடைய ஆதர்ச படமே இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் கல்லாப் பெட்டி ஒன்றே முக்கியம் என்று விரும்பும் தயாரிப்பாளர்கள் எதையாவது செய்து கல்லாவை நிரப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதுவரையில் எடுக்கப்பட்ட ரீமேக் படங்களில் நிறைய தோல்விகள் கிடைத்தன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மாப்பிள்ளை’ மரண அடி வாங்கியது.. ஆனாலும் இப்போதும் அசராமல் பழைய படங்களுக்கு பலரும் அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் இப்போது ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம்..
சத்யா மூவிஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து ஏ.ஜெகந்நாதன் இயக்கிய இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரது கேரியரில் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது.. இதில் மூன்று கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ‘டிஎஸ்பி அலெக்ஸ் பாண்டியன்’ என்ற கேரக்டர்தான் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் நிற்கிறது..
இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்யப் போகிறார்களாம்.. ஹீரோ யார் என்று இன்னமும் முடிவாகவில்லை.. இயக்குநர் யார் என்பதும் முடிவாகவில்லை..
பழைய படங்களின் கதைகளை மீண்டும் ரீமேக் செய்வது அந்த உன்னதமான படங்களை சிதைப்பதற்குச் சமம் என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் பழைய படங்களின் ரசிகர்கள்..!
ஏழைச் சொல் அம்பலம் ஏறாதே..?