“இந்தப் படத்தின் ஷூட்டிங் பள்ளி சுற்றுலா சென்றது போல் இருந்தது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் சந்தோஷ பேச்சு..!

“இந்தப் படத்தின் ஷூட்டிங் பள்ளி சுற்றுலா சென்றது போல் இருந்தது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் சந்தோஷ பேச்சு..!

கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் S.P.B. சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’.

அறிமுக நாயகன் அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை’ புகழ் வெங்கி, அதிதி, S.P.பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, கே.பாக்யராஜ், M.S. பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘கொலை கொலையா முந்திரிக்கா’, ‘வல்லமை தாராயோ’ ஆகிய படங்களை இயக்கியவர்.

பொங்கல் பண்டிகையின் கடைசி தினமான காணும் பொங்கல் திருநாளில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற ஷாப்பிங் திருவிழாவில் ரசிகர்களின் மத்தியில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.

படக் குழுவினரின் flash-mob நடனத்துடன் விழா ஆரம்பித்தது. இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் அனைத்து கலைஞர்களையும் ரசிகர்களுக்கு அறிமுக படுத்தி, இந்த படத்தில் நடித்து இளைஞர்களை வழி நடத்திய மூத்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார் தயாரிப்பாளர் SPB சரண்.

புதுமுக இசையமைப்பாளர் கார்த்திகேயமூர்த்தியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மதுமிதா. உருவத்தில் இசையமைப்பாளர் AR ரஹ்மான் சாயலில் இருப்பதை கண்டு வியத்திருந்த ரசிகர்களை, இப்படத்தில் ‘சுட்ட கதை’ சுப்பு எழுதிய ‘ கேட்ட நியூஸ்’ என்ற பாடலை பாடி அசத்தினார் கார்த்தியேகமூர்த்தி.

பின்னர் பேசிய கார்த்திகேயன் ”இந்தப் படத்தில் SPB சார் பாடணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், கதையில் அதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தது. படத்தின் பின்னணி இசை பணியில் இருந்தபோது ஒரு இடத்தில பாடல் இருந்தே ஆகவேண்டும் என்று கூறி ‘வாழும் காலம்’ பாடலை S.P.B. ஸாரை பாட வைத்தோம். என் கனவை நினைவாக்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

“காதலிக்காக எதையும் செய்வேன் என்று சொல்லும் காதலன், காதல் ரொம்ப எளிமையானது.. உன் உண்மை காதல் போதும் என்று கூறும் காதலி இவர்களின் உரையாடலாக ஒரு பாட்டு வேண்டும் என்றார் இயக்குனர் மதுமிதா. அதுதான் ‘சையோரா சையோரா’ பாடல்…” என்றார் அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மதன் கார்கி.

படத்தின் இசைத் தட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் சுவாமிநாதன் இருவரும் இணைந்து வெளியிட்டனர். “கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் மூலம் அறிமுகமான அனைத்து கலைஞர்களும் இன்று உச்சத்தில் உள்ளனர் . அதேபோல் இந்த குழுவினரும் வளர வாழ்த்துகிறேன்..” என்றார் தயாரிப்பாளர் சுவாமிநாதன்.

“இப்படத்தில் முற்றிலும் இளைஞர்களோடு சேர்ந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பள்ளி சுற்றுலா போல் அமைந்தது. ஒவ்வொரு முறையும் புதுப்புது கலைஞர்களை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் S.P.B. சரணை கண்டு பெருமையாக உள்ளது..” என்றார் பாக்கியராஜ்.

Our Score