இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு இயக்குநர் மணிரத்னம் தனது அஞ்சலியை இன்றைய ஆனந்தவிகடனில் எழுதியிருக்கிறார்.
“உங்கள் முன்னால் நின்று சொல்ல முடியாததை, இன்று தைரியமாகச் சொல்கிறேன். இன்று எனக்கு என ஒரு பெயரும் இடமும் உண்டு என்றால், அது உங்களுடைய திறமையால், என் போன்றவருக்காகப் பல வருடங்கள் நீங்கள் உழைத்து உருவாக்கிய ராஜபாட்டையால் மட்டுமே சாத்தியமானது.
என் 12 வயதில் சினிமா என்றால், கதையும், நடிகர்களும் கலக்கினால் சினிமா படம் வீழ்படிவாகத் தெறித்து விழும் என ஒரு கணிப்பு எனக்கு. எப்படி கல்யாணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் மொட்டை மாடியில் கொக்கு கொண்டுவந்து போட்டு குழந்தைகள் பிறக்கும் என யூகித்ததுபோல..!
‘இரு கோடுகள்’ படத்தின் பெயர் செங்குத்தாக இரண்டு வரிகளில் தொடங்கி, படத்தின் இறுதி வரை என்னைக் கொண்டுபோனது நான் அறிந்திராத ஒரு புது உலகுக்கு.. அன்று எனக்கு புரிந்தது, சினிமா உருவாகத் தேவை ஒரு மனமும் புத்திசாலி மூளையும். அன்று அறிந்தேன் ‘இயக்குநர்’ என்ற கலைஞனை. சிறுவனான என்னை மனிதனாக்கியது உங்கள் படைப்புகள்தான்..!
நீங்கள் என்னை அறிந்ததைவிட, பல வருடங்களாக உங்கள் படைப்புகளை நான் பின் தொடர்ந்தேன்; மெச்சினேன்; வியந்தேன். மற்றவர் உங்கள் படங்களைப் பாராட்டியபோது, என் உரிமைபோல நினைத்துப் பெருமிதம் கொண்டேன்.
கவிதாலயாவுக்கு என்னைப் படம் இயக்க வேண்டும் எனச் சொன்ன உங்களை, நான் காலம்காலமாகத் தெரிந்ததுபோல, அறிந்ததுபோல உணர்ந்தேன். நீங்கள் என் மானசீகக் குரு; வழிகாட்டி. சினிமா என்ற கலையை எனக்குச் சுட்டிக்காட்டிய ஆசான். நீங்கள் எங்களைப் போன்றவர்களுடன் வசித்தாலும், மிக உயரமான அபூர்வ மனிதர்.
வெகு உயரத்தில் வலம்வந்த உங்களின் படைப்புகளை, எங்கோ ஒரு மூலையில் இருந்து வியந்து ரசித்த எண்ணற்ற இயக்குநர்களில் நானும் ஒருவன். என் வாழ்க்கையிலேயே நீங்கள் எனக்கு மிக முக்கியமான ஓர் அங்கம்; முக்கியமான மனிதர்; முக்கியமான ஒரே ஒரு கலைஞன், படைப்பாளி..!
உங்கள்,
மணி.”