7 Miles Per Seconds நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Samuel Mathew இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பாலசரவணன்,, லொள்ளுசபா மாறன், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், சரத் லோகித்ஸ்வா,, அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், படத்தொகுப்பு – பொன்ராஜ், இசை- ஜிப்ரான், எழுத்து, இயக்கம் – என்.ராஜசேகர்.
நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக வந்திருக்கிறது ‘மிஸ் யூ’ திரைப்படம். இளம் தலைமுறையை கவரும் தலைப்புடன் வந்துள்ள இந்த திரைப்படம் தலைப்புக்கு நியாயம் சேர்க்கிறதா? சித்தார்த்துக்கு கம்பேக் கொடுக்குமா? என்பதை பார்ப்போம்.
சினிமாவில் இயக்குநராகும் கனவில் உள்ளார் வாசு என்ற சித்தார்த். விட்டோத்தியான அவர் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். கொஞ்சம் முன்கோபியும்கூட.
அவர் மலைப்பிரதேசம் ஒன்றுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்புகையில் விபத்தொன்றில் சிக்குகிறார். இதில் அவருக்கு நினைவு இழப்பு ஏற்படுகிறது. சிகிச்சையில் உடல் தேறினாலும் நினைவு திரும்பவில்லை.
இந்தச் சூழலில் நண்பர் கருணாகரனுடன் பெங்களூர் செல்கிறார் சித்தார்த். அங்குதான் நாயகி சுப்புலட்சுமி என்ற ஆஷிகாவைப் பார்க்கிறார். அவரின் அழகிலும், நேர்த்தியிலும் மயங்கி காதலில் விழுகிறார். தன் காதலுக்கு ஓகே வாங்குவதற்காக சித்தார்த் தன் அம்மாவிடம் ஆஷிகாவின் போட்டோவை காண்பிக்கிறார்.
ஆஷிகாவை போட்டோவில் பார்த்த சித்தார்த்தின் அம்மா ஷாக்காகிறார். இந்த பேரதிர்ச்சிக்கு என்ன காரணம்? சித்தார்த் நினைவு இழப்பால் அவர் எதையெல்லாம் மறந்தார் என்பதற்கான பதிலை சொல்வதுதான் படத்தின் மீதிக் கதை.
‘இந்தியன்-2’-வில் பார்த்த அதே சித்தார்த்துதான் முதல் பாதியில் புயலாகவும், இரண்டாம் பாதியில் பூ-வாகவும் வருகிறார். காதல் காட்சிகளில் அசத்தியுள்ளார். இவருக்கு இணையாக நடித்துள்ளார் அஷிகா. முதல் பாதியில் பயந்த சுபாவம் கொண்டவராகவும் இரண்டாம் பாதியில் முதிர்ச்சியை வெளிக்காட்டக் கூடியவராகவும் இருக்கிறார். இந்த மாற்றத்தை தன்னுடைய உடல்மொழியிலும் பேச்சிலும் கச்சிதமாக வெளிகாட்டியுள்ளார்.
காமெடி காட்சிகள்தான் இந்தப் படத்துக்கு பெரிய பலம். நண்பர்களாக வரும் கருணாகரன், பால சரவணன், லொல்லு சபா மாறன் செய்யும் கூட்டுக் காமெடிகள் சுமார் ரகம்தான் என்றாலும், இதில் மாறன் பேசும் சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.
‘நான் டெல்லியில் காலில் விழுகிறேன்… சென்னையில் என் கால்ல விழுறான்” என வசனம் பேசும் வில்லன் கேரக்டருக்கு படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை. நாயகன் – நாயகியை மட்டுமே மிரட்ட வருகிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசை கை கொடுத்த அளவுக்கு பாடல்கள் எதுவும் ஒட்டவில்லை. ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ் காதல் காட்சிகளை அழகாக காட்டியுள்ளார். தினேஷ் பொன் ராஜின் படத்தொகுப்பு கச்சிதம்.
‘நீ கேட்கிற பொண்ணை செஞ்சி கொண்டு வர முடியாது… பெண்ணுடா… கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கும்’ என்று கதைக்கு தேவையான வசனங்களை எழுதியுள்ளார் அசோக்.
இந்த ‘மிஸ் யூ’ காதல் படம்தான் என்றாலும், கதைக்களம் ரொம்ப புதுசு. முதல் பாதி கதை கொஞ்சம் போர் அடித்தாலும், இரண்டாம் பாதி உருக வைக்கிறது. கெளதம் மேனன் ஸ்டைலில் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ராஜசேகர்.
முதல் பாதி திரைக்கதையும், நாயகனின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் பயங்கர வீக். காதல் படம் ஒன்றால் ஒன்றிரண்டு பாடல்கள் அசை போடும் அளவுக்காவது இருக்கும். அதுவும் இந்த படத்தில் மிஸ்ஸிங். வித்தியாசம் இல்லாத சித்தார்த்தின் கேரக்டர் நமக்கு ஈர்ப்பைக் கொடுக்கவில்லை.
ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக வந்திருக்கும் இந்த ‘மிஸ் யூ’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
RATING : 3 / 5









