மிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்

மிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.  

படத்தில் கதையின் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார் ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் ஈ.ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவணசக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’,  ஆகிய படங்களின் இயக்குநரான ஜெகன்நாத் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன், இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

தினமும் எத்தனையோ பெண் காவலர்களை அவர்களது பணியின்போது பார்த்திருக்கிறோம். முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதைகளில் கால் கடுக்க தனித்து நின்று கொண்டிருக்கும் அவர்களைக் கடந்துதான் நாமும் சென்று வந்திருக்கிறோம். ஆனால் அவர்களைப் பற்றி, அவர்களது பணியைப் பற்றி.. ஒரு பெண்ணாக இந்தப் பணியில் அவர்களுக்கு இருக்கும் இடையூறுகள், சிரமங்களைப் பற்றியெல்லாம் நாம் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. ஏன் நினைத்துக்கூட பார்த்ததில்லை..

ஆனால் இப்போது அதை நினைக்க வைத்திருக்கிறார்கள் இந்தப் படத்தின் கதாசிரியரான ஜெகன்நாத்தும், இயக்குநர்-தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்..!

ஈரோடு மாவட்டம் பவானியில் பெண் காவலராகப் பணியாற்றி வருகிறார் சாமந்தி என்னும் ஸ்ரீப்ரியங்கா. இவருக்கு மேலதிகாரியாக இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருப்பவர் முத்துராமன். இவருக்கு சாமந்தி மீது ஒரு கண். அவரைத் தன் வலையில் வீழ்த்த தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஆனால் அது நடக்காமல் போகிறது. இதனால் கோபமடையும் முத்துராமன், சாமந்தியை திட்டமிட்டு பழி வாங்குகிறார்.

அன்றைய தினம் இலங்கையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் பவானி பகுதியில் சுற்றுப் பயணம் வருகிறார். அவர் பவானி கூடுதுறை பாலம் வழியாக செல்வதால் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க தன்னுடைய ஸ்டேஷனில் இருந்து கான்ஸ்டபிள்களை அழைத்துக் கொண்டு வருகிறார் முத்துராமன்.

ஒவ்வொருவருக்கும் பொஸிஸனை சொல்லி நிற்க வைக்கும் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சாமந்தியை மட்டும் அந்தப் பாலத்தின் நடுப் பகுதியில் நிற்க வைத்துவிட்டுப் போகிறார்.

கடும் வெயிலில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் சாமந்திக்கு தண்ணீர் பாட்டிலும், இளநீரையும் வேண்டுமென்றே அனுப்பி வைக்கிறார் முத்துராமன். வெயிலின் தாக்கத்தால் அதிகப்படியான தண்ணீரை அருந்திவிடுகிறார் சாமந்தி.

ஆனால் சிறிது நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டி அவஸ்தைப்படுகிறார் சாமந்தி. இதனை எதிர்பார்த்த முத்துராமன், சாமந்தியை அவருடைய இடத்தில் இருந்து விலக அனுமதி மறுக்கிறார்.

இயற்கை உபாதையின் தொந்தரவை சகித்துக் கொண்டு, முத்துராமனின் டார்ச்சரையும் சமாளித்துக் கொண்டிருக்கிறாள் சாமந்தி. இதன் முடிவு என்ன என்பதுதான் இந்தச் சின்னக் கதையில் கிடைக்கும் மிகச் சிறப்பான அனுபவம்.

படத்தின் மொத்தத்தையும் தான் ஒருத்தியாகவே தாங்கியிருக்கிறார் ‘சாமந்தி’யாக நடித்திருக்கும் ஸ்ரீப்ரியங்கா. அவருடைய கண்களே ஆயிரம் கதைகளைச் சொல்லும். அப்படிப்பட்ட கண்களையும் ஒரு கதாபாத்திரம்போல பல காட்சிகளில் நடிக்கவும், பேசவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

வீட்டில் தனியே இருக்கும் குழந்தைக்கு பள்ளிக்குப் போவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை போனிலேயே அழகாகச் சொல்லி கிளப்பிவிடும் காட்சியில் இப்படியொரு அம்மா அனைவருக்கும் அமைந்துவிடாதா என்கிற ஏக்கத்தைக் கொடுக்கிறார் ஸ்ரீப்ரியங்கா.

குடும்பச் சூழல் தெரியாமல் குடித்தே வாழ்க்கையை நரகமாக்கும் மாமன்.. தன்னுடைய சிச்சுவேஷன் புரியாமல் அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்யும் காதலன்.. தன்னுடைய இயலாமையை அருகில் வந்து பார்த்து ரசித்துவிட்டுப் போகும் இன்ஸ்பெக்டர் முத்துராமன்.. இடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வரும் ஈழத் தமிழரையும் விசாரித்து அவரையும் சமாளித்து.. தனது பணியையும் செய்யும் லாவகம்.. என்று படத்தின் உயிர்நாடியான காட்சிகளில் தனது நடிப்புத் திறனை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீப்ரியங்கா. பல விருதுகள் இவருக்காகக் காத்திருக்கிறது.

முத்துராமனின் இறுக்கமான முகமே அவருடைய கேரக்டர்களை தீர்மானிக்கின்றன. இதிலும் அப்படியே.. பொறுக்கித்தனமான அவருடைய கேரக்டருக்கு ஏற்றாற் போன்று அவர் காட்டியிருக்கும் நடிப்பும், பேசியிருக்கும் வசனங்களும்.. ‘அப்படியே என் பீச்சாங்கையை உன் மூஞ்சில வைச்சுத் தேய்க்க…’ என்று படம் பார்க்கும் அத்தனை பேரையும் தன் மீது கோபப்பட வைத்திருக்கிறார் முத்துராமன்.

குணச்சித்திர கேரக்டர்கள் என்ற பெயருக்கே ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நடிகரும், இயக்குநருமான ஈ.ராம்தாஸ் இந்தப் படத்திலும் அந்தப் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார்.

பாத்ரூமை தயார் செய்துவிட்டு சாமந்தியை அழைத்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் முத்துராமன் வந்து நிற்க.. நொடியில் தனது உடல் மொழியை மாற்றிக் கொண்டு லாவகமாக அவரை சமாளிக்கும்போது, “பாவம்யா இந்த வயசான போலீஸுக…” என்று உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

காதலனாக அரீஷ் குமார் பெரும்பாலும் போனிலேயே பேசிக் கொண்டிருந்தாலும் காதலியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸில் வரும்போது ஒரு கேஸ் சிக்கிக் கொள்ள.. தன்னுடைய இயலாமையை முகத்திலேயே காண்பித்தபடி வண்டியோட்டும் அந்தக் காட்சியில் தனது பெயரை பதிவு செய்திருக்கிறார்.

இதேபோல் படம் முழுவதும் ஒருவித கோபத்துடனும், அடிமைத்தனம் பிடிக்காத அடிமை போலவும் நடித்திருக்கும் டிரைவர் கம் கான்ஸ்டபிளான பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது முதல் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். இவரை வைத்து இயக்குநர் கடைசியில் எதையோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்தால்… கடைசியில் எடுத்தக் காட்சிகள் கத்திரிக்கு பலியாகிவிட்டதாம்.

‘செந்தமிழன்’ சீமான் துணை கமிஷனர் கதாபாத்திரத்தில் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். முத்துராமனின் உண்மை குணம் அறிந்து அவரை அழைத்துக் கண்டிக்கும் காட்சியில் கொஞ்சம்கூட சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதுவே அந்தக் கேரக்டருக்கு மிகப் பெரிய மரியாதையைக் கொடுக்கிறது.

இதேபோல் திரைக்கதையின் ஒரு சஸ்பென்ஸை கூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு கதையில் பத்திரிகையாளர்கள் குணாவும், காவேரி மாணிக்கமும் அழுத்தமாக தங்களது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

குடிகார மாமனாக நடித்தவரும், ஈழத் தமிழராக நடித்தவரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். அந்த ஈழத் தமிழர் பேசும் ஒவ்வொரு வசனமும் இன்று தமிழகத்தில் அகதிகளாகத் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

பாலபரணியின் ஒளிப்பதிவு சுட்டெரிக்கும் சூரியனை அப்படியே பதிவாக்கியிருக்கிறது. பகல் பொழுதுகளில் வெயிலின் கடுமைக்காகவே அந்த நடு பாலத்தில் கடும் சிரமத்திற்கிடையில் படமாக்கியிருக்கிறார்கள். இறுதிக் காட்சியிலும் ‘மழையே.. மழையே.. வந்துவிடு’ என்று நம்மையும் அழைக்க வைப்பதுபோல மழையின் வருகையை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் பாலபரணி. பாராட்டுக்கள்.

இஷான் தேவின் இசையில் பின்னணி இசை மட்டுமே ஒலிக்கிறது. கொஞ்சம் சஸ்பென்ஸூக்காக வைக்கப்பட்டிருக்கும் சில காட்சிகளில் அதற்கான அழுத்தத்தை சரியானவிதத்தில் கொடுத்து நமது கவனத்தைத் திசை திருப்பியிருக்கிறார் இசையமைப்பாளர்.

ஒட்டு மொத்தமாய் இந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் ஒரு பெண் காவலரின் வலியைக் குறிப்பிட்டாலும் மறைமுகமாக அது சொல்வது ஆண்களின் காம வெறியையும்.. ஆணாதிக்கம் சார்ந்த திமிரையும்தான்.

படத்தின் துவக்கத்திலேயே ஒரு தொலைபேசி உரையாடல் ஒலிக்கிறது. அது 2015-ம் ஆண்டில் சென்னையில் ஒரு போலீஸ் உதவி கமிஷனரும், பெண் காவலரும் போனில் பேசி பரபரப்பான சம்பவத்தை ஒத்திருந்தது.

பணி உயரதிகாரி என்ற தோரணையில் தனக்குப் பணிந்து செல்லும்படி ஒரு பெண்ணிடம்.. அதுவும் காவல்துறையில் பணியாற்றும் காவலரிடமே தைரியமாக சொல்லும் ஒரு மேலதிகாரிதான் இந்த முத்துராமன் என்று முதலிலேயே சொல்லித்தான் படத்தைத் துவக்கியிருக்கிறார்கள். இதிலேயே படத்தின் கதையைத் தாமதமில்லாமல் துவக்கியது பாராட்டுக்குரியது.

இடையிடையே பவானி அம்மன் கோவிலில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை போன்ற உணர்வில் சில காட்சிகளை வைத்திருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. அவைகளை அடியோடு நீக்கிவிட்டு, மேலும் பல காட்சிகளை சேர்த்திருந்தால் படம் இதைவிடவும் அழகாக இருந்திருக்கும். நேரம் மிகக் குறைவாக இருப்பதால் இன்னும் 20 நிமிட காட்சிகளை சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால், இந்தக் காட்சிகளைக் கோர்வையாக் கொண்டு போயிருக்கும் திரைக்கதை சபாஷ் போட வைக்கிறது. அதிலும் சின்னப் பையன்கள் இரண்டு பேர் செல்போனில் படம் பிடித்து அதை சீமானுக்கு அனுப்பி வைக்கும் திரைக்கதை ‘சபாஷ்’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

காவல் பணியிலேயே இருந்தாலும் அவர்கள் பெண்கள்தான். நமது வீட்டில் இருக்கும் பெண்கள் போல அவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கும். சங்கடங்கள் இருக்கும். அவர்களுடைய சூழலை நாம்தான் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் இனிமேல் வெளியிடங்களில் காவல் பணியில் இருக்கும் பெண் காவலர்களைப் பார்க்கும்போது மரியாதையுடன் பாசத்தையும், அன்பையும் காட்டுவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்தப் படம் சொல்லியிருக்கும் நீதியை ஒட்டு மொத்தக் காவல்துறையும் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. படக் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!!!

Our Score