full screen background image

“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..!

“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர்.சி, தற்போது இயக்கியிருக்கும் படம் ‘ஆக்‌ஷன்’.

இப்படத்தில் ‘சுபாஷ்’ என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

மற்றும் அகான்ஸா பூரி  பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக டூயல் ரோலில் நடித்துள்ளார். மேலும், ராம்கி, யோகி பாபு மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதை , இயக்கம் – சுந்தர்.சி., திரைக்கதை – சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி., இசை – ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவு – டியூட்லீ DUDLEE, படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், வசனம் – பத்ரி, கலை இயக்கம் – துரைராஜ், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – பிருந்தா, தினேஷ், பாடல்கள் – பா.விஜய் , ஹிப் ஹாப் தமிழா, தயாரிப்பு மேற்பார்வை – P.பால கோபி, தயாரிப்பு – ட்ரைடென்ட் ரவீந்திரன்.

‘மத கஜ ராஜா’ மற்றும் ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குநர் சுந்தர்.சி.யும், நடிகர் விஷாலும் இணையும் மூன்றாவது படம் இந்த ‘ஆக்‌ஷன்’ திரைப்படம்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால், இயக்குநர் சுந்தர்.சி. நடிகைகள் தமன்னா, அகான்ஸா பூரி, சாயாசிங், நடிகர் சாரா, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, வசனகர்த்தா பத்ரி மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

IMG_9445

இந்த நிகழ்ச்சியில் வசனகர்த்தா பத்ரி பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே இந்தப் படத்திற்கு வைத்திருக்கும் ஆக்ஷன் என்ற பெயர் பொருத்தமானதுதான் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். இந்தப் படத்திற்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று வைத்திருந்தால்கூட பொருத்தமாகத்தான் இருந்திருக்கும். அந்த அளவுக்கு தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும்விதமாக இருக்கும்…” என்றார்.

actor saaraa

நடிகர் சாரா பேசும்போது, “சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அவர் படங்களில் பொதுவாகவே நட்சத்திரக் கூட்டமாகவே இருக்கும். ஒரே நேரத்தில் 2, 3 காட்சிகள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும். ஆனால், எதைப் பற்றியும் கவலை இல்லாமல், அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பார் இயக்குநர் சுந்தர்.சி.” என்றார்.

akansha puri

நடிகை அகன்ஷா பூரி பேசும்போது, “டிவி தொடரில் பலரும் என்னை பார்வதியாகத்தான் பார்த்திருப்பார்கள். இப்படம் மூலம் என்னை எல்லோரும் வெள்ளித் திரையில் காண்பார்கள். படத்தின் டிரெயிலை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு மிகுந்த ஒத்துழைப்பை கொடுத்த விஷாலுக்கு எனது நன்றி. இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு நான் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்…” என்றார்.

hip hop aadhi

இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ ஆதி பேசும்போது, “இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இப்படத்தைப் பொறுத்தவரையில் பாடல்களைவிட பின்னணி இசைதான் முக்கியமானதாக இடம் பெறும். இந்த ‘ஆக்ஷன்’ படத்தின் புரோமோ பாடலில் இரண்டு கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். எனக்கு எல்லோரும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து ஆதரவு கொடுத்து வருவதற்கு நன்றி…” என்றார்.

actress tamannah

நடிகை தமன்னா பேசும்போது, “ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்து வருகிறீர்கள். இயக்குநர் சுந்தர்.சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது. அவருடன் பணி புரிய மிகவும் விருப்பமாக இருந்தேன். ‘பாகுபலி’ படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்குமென்று ஆவலாக இருந்தேன். அந்த கனவை ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் சுந்தர்.சி நிறைவேற்றியுள்ளார்.

மற்ற படங்களைவிட இப்படத்தில் தனித்தன்மையாக நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது. ஏனென்றால், ஆக்ஷன் கதாபாத்திரமென்பதால் வசனங்கள் கொண்ட பேப்பர் இருக்காது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ‘அந்த இடத்திற்கு செல்லுங்கள். இந்த இடத்தில் நில்லுங்கள்’ என்றுதான் சொல்வார்கள். அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஷாலுக்கு பின்னால்தான் நிற்பேன். விஷாலுடன் நடித்ததில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. விஷாலுக்கென்று மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி…” என்றார்.

இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது, “இந்தப் படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் கிராம பின்னணி கொண்ட ஒரு படத்தை இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் ‘இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே…?’ என்றார்கள்.

sundar.c

இந்தக் கேள்வியை எனது ஒவ்வொரு படத்திலும் நான் சந்தித்தேன். எதுதான் என்னுடைய படம் என்று எனக்கே தெரியவில்லை. என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்… என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இதுதான் என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன்.

இது போன்ற பெரிய படங்களுக்கு ரவீந்திரன் மாதிரியான தயாரிப்பாளர்கள் அமைவது வரம்.

தமன்னாவை எனக்கு மிகவும் பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இந்தப் படத்தில்தான் நிறைவேறியது. ‘பாகுபலி’ படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர்தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன்.

சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார். இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பார்களா என்று சந்தேகம்தான்.

அகன்ஷா பூரியை ஒரு நிகழ்ச்சியில் பார்த்துதான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அகன்ஷா மாதிரிதான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடுதான் போவார்கள்.

இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும் இப்படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிப் படங்கள்தான். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரத்தைக் கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார்.

மேலும், இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற சண்டை இயக்குநர்களான அன்பறிவ் இருவரும்தான். அடுத்து ஹிப் ஹாப் ஆதி. முதலில் நான் இந்தப் பட வாய்ப்பை ஆதிக்கு கொடுக்கக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஆதி ஓடோடி வந்து என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி.

ராணுவம், தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன்தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

இப்படத்தில் CG பணி செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள்தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா என்ற அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டார்கள்.

மேலும், விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தமாகிவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்…” என்றார்.

actor vishal

நடிகர் விஷால் பேசும்போது, “நமக்குள் சமூக சிந்தனைகள் இருந்தாலும், சம்பாத்தியம்தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சிதான்.

நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஸார் செய்திருக்கிறார். ‘சங்க மித்ரா’தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம்.

என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், நான் அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் இந்த ‘ஆக்ஷன்’ படத்தில்தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன்.

ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது. அதன் பிறகு ஒரு கட்டத்தில்  இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை.

இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா லக்ஷமி அனைவரிடமும் பேசப்படுவார் என்றார். அவர் நிச்சயமாக தமிழ்ச் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது.

அகன்ஷா பூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அகன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அகன்ஷா அதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட அன்றே படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார்.

சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். யூ டியூப்-ல் சாராவின் குறும் படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர்.

மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர்கள் பலர் திரைத்துறைக்குள் வர வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் போதும். நமக்கு உடல்நிலை நன்றாகவே இருக்கும். ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணி புரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம்.

என் குருநாதர் அர்ஜூன் ஸார்தான். ஒரு உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன்.

அனைவரிடமும் ஒரேயொரு வேண்டுகோள்.. ஒவ்வொருத்தரும், மற்றவர்க்கு ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும். நான் தத்தெடுத்த கிராமத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கு எத்தனை தடங்கல்கள் வரப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் அதையும் தாண்டி நான் சொன்னதை நிச்சயமாக செய்து முடிப்பேன்..” என்று சொல்லி முடித்தார் விஷால். 

Our Score