full screen background image

“தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் சரியில்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை

“தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் சரியில்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீபிரியங்கா நாயகியாக பெண் காவலர் கதாபாத்திரத்திலும், நடிகர் அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன்,  மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்தப் படத்தை உலகம் முழுவதும் இன்று வெளியிடுகிறார்.

இந்தப் படம் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சில திரைப்படங்கள் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென இதே தேதியில் ரிலீஸாகின. அதனால் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால், அந்த தேதியில் இத்திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை.

miga miga avasaram-poster-1

அதன் பிறகு தீபாவளி முடிந்து தியேட்டர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது சுமூகமாக இன்று நவம்பர் 8-ம் தேதி, இந்த படம் தமிழகம் முழுக்க 125 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.

இதற்கு  பின்னணியில் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் அரசு தரப்பு கமிட்டி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் கே.ராஜன், இந்தப் படத்தை வெளியிடும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன், படத்தின் நாயகன் அரீஷ்குமார், நாயகி ஸ்ரீபிரியங்கா மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் நாயகன் அரீஷ்குமார் பேசும்போது, “இந்தப் படத்திற்கு பத்திரிக்கையாளர்களிடம் ரொம்பவே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இப்படிப்பட்ட ஒரு படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என சந்தோசமாக இருக்கிறது.. ஒரு போராட்டத்திற்கு பிறகு ரிலீசாக இருக்கும் இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரிய படங்களைவிட, நன்றாக இருக்கும் சிறிய படங்களை பார்ப்பதற்கு நிறைய பேர் வருகின்றனர். இந்த ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இன்னும் மக்களின் மவுத் டாக் மூலம் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என நம்புகிறேன்…” என்று கூறினார்.

sripriyanka

படத்தின் நாயகியான ஸ்ரீபிரியங்கா பேசும்போது, “இந்தப் படத்தை வெளியிடுவதற்காக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ரொம்பவே போராடியிருக்கிறார்.. ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோது, சிலர் இப்படியே ரிலீஸ் செய்துவிடலாம்; இனி ஏன் தேதியை மாற்ற வேண்டும் என்றுகூட அவரிடம் சொல்லி இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தின் மீது உள்ள நம்பிக்கையில் இதை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியாக அவர் எடுத்த முடிவுக்கு நான் தலைவணங்குகிறேன்…” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “தியேட்டர்காரர்களை குறை சொல்வதைவிட பெரிய படங்கள் வரும்போது சிறிய படங்கள் போட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தியேட்டர்களை நடத்துவதற்கான நடைமுறை செலவுகளுக்கு பெரிய படங்களிலிருந்து கிடைக்கும் பணம் தேவைப்படுகிறது.

வருடத்திற்கு சுமார் 25 முறை மட்டுமே அந்த சூழல் அமையும்.. இருந்தாலும் வருங்காலத்தில் பண்டிகை நாட்களில் பெரிய படங்களுடன் ஒன்று இரண்டு சிறிய படங்களையும் ரிலீஸ் செய்யும் முறையை கொண்டுவர வேண்டும்” என்றார்.

ரோகிணி தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வம் பேசும்போது, “திரையுலகில் எந்த விழாக்களிலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படுவதில்லை என்கிற வருத்தம் எனக்கு மிக நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது இந்த விழாவின் மூலம் அது நீங்கியுள்ளது.

rohini pannerselvam

அரசாங்கத்தில் பல விருதுகள் வழங்குகிறார்கள். நன்றாக பராமரிக்கப்படுகின்றன திரையரங்குகள் என்கிற விருது ஒன்றை வழங்கினால் நன்றாக இருக்கும்.

எந்தப் படமாக இருந்தாலும் அதை இணையத்தளத்திலும் ஆன்லைனிலும் பார்க்காமல் தியேட்டரில் பார்த்தால் மட்டுமே அது பெரிய படமாக கருதப்படும். சின்ன படங்கள் ஓட வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். திரையரங்குகளுக்கு வருவதற்கு முன் இந்தப் படம் ஓடும்… ஓடாது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது.

ஆனால், வரும் அத்தனை படங்களும் ஓடவேண்டும் என மற்றவர்களைவிடவும் திரையரங்கு உரிமையாளர்களாகிய நாங்கள் மட்டுமே நினைக்கின்றோம்.

இந்த படம் ரிலீஸ் ஆகாதபோது சுரேஷ் காமாட்சி எங்களையெல்லாம் திட்டி பேட்டி கொடுத்திருந்தார். அதில் எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு எங்களுக்கு எந்தப் படம் என்ற பாரபட்சம் எதுவுமில்லை. தற்போதுள்ள அமைச்சரிடம் பெரிய திரையரங்குகளை, சிறிய திரையரங்குகள் ஆக மாற்றுவதற்கு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். அப்படி செய்துவிட்டால், அதன் பிறகு உங்கள் படத்தை எங்களுக்கு தாருங்கள் என உங்கள் வாசலில் நாங்கள் வந்து நிற்போம். ஆகவே எங்களை தயவு செய்து திட்டாதீர்கள்…” என்று கூறினார்,

தயாரிப்பாளரும், தியேட்டர் உரிமையாளருமான அபிராமி ராமநாதன் பேசும்போது, “நெல்லிக்காய் போல சிதறிக் கிடந்த எங்களை ஒன்று சேர்த்து, ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டுக்கோப்பாக கொண்டு வந்தவர் ரோகிணி பன்னீர் செல்வம்தான். இந்த 45 வருடங்களில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி சொல்வதற்கு என ஒரு கூட்டம் நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. இதுதான் முதல்முறை.

stage-1

நன்றி சொல்லும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்றால் அதற்கு சின்ன படங்கள்தான் காரணம்.. எப்போதும் பெரிய படங்களைவிட சிறிய படங்கள் ஓட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் அதிகம் விரும்புகிறோம். காரணம்.. எங்களுக்கு சின்ன படங்களில்தான் வருமானம் அதிகம் கிடைக்கிறது..

தற்போது இந்த சிறிய படங்களுக்கு இன்னும் உதவி செய்யும் விதமாகத்தான் என்னுடைய நான்கு தியேட்டர்களையும் இடித்துவிட்டு புதிதாக சிறிய அளவிலான தியேட்டர்களை கட்டிக் கொண்டிருக்கிறேன். பெரிய தியேட்டர்களின் சிரமங்களை கூறி அவற்றை சிறிய தியேட்டர்கள் ஆக மாற்றுவதற்கு பெரிய கட்டுப்பாடுகள், நடைமுறை சிக்கல்கள் இன்றி அனுமதி தரவேண்டும் என கேட்டோம். உடனே சம்மதித்துவிட்டார்.

அதேசமயம் பெரிய படங்களில் சம்பாதித்தால்தான் சிறிய படங்களை திரையிடும் அளவிற்கு தாக்குப் பிடிக்க முடியும். அது போன்ற நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக தியேட்டர்கள் ஒதுக்க முடியாது.

இதோ, இப்போது ‘மிக மிக அவசரம்’ படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்த ஒரு வாரம் 125 தியேட்டர்களில் ஓடினாலே இந்த படத்திற்கு நான்கு மடங்கு லாபம் கிடைத்துவிடும்.

தற்போது இணையதளத்தில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி படங்களை எடுத்து நேரடியாக ரிலீஸ் செய்கிறார்கள். நானும்கூட தற்போது இதில் ஈடுபட்டு உள்ளேன் ஆனால் இந்த இப்படி ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்குக்கூட கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்…” என்று கூறினார்.

raveendhar chandrasekar

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பேசும்போது, “இந்தப் படத்தை கடந்த அக்டோபர் 11-ம் தேதி ரிலீஸ் செய்வதாக நான் அறிவித்தபோது எனக்கு வெறும் 7 தியேட்டர்கள் மட்டும்தான் கிடைத்திருந்தன.

அந்தச் சமயத்தில் இந்த நல்ல படத்திற்காக மிகப் பெரிய அளவில் செலவு செய்து, விளம்பரம் செய்தும் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையே என்கிற மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. இதை அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிலும் வெளிப்படுத்தி இருந்தேன்.

ஆனால், அதன் பிறகு இது பற்றிக் கேள்விப்பட்ட இங்கு அமர்ந்திருக்கும் திரையுலக முக்கியஸ்தர்கள் எனக்கு ஆறுதல் கூறியதோடு, ‘கொஞ்ச நாள் காத்திரு; இந்த படத்திற்கு சரியான நிறைய தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்’ என்று என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார்கள்.

அவர்கள் சொன்னபடி இதோ எனக்கு இப்போது இன்றைக்கு 125 தியேட்டர்கள் ‘மிக மிக அவசரம்’ படத்திற்காக கிடைத்துள்ளது. உண்மையிலேயே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சொல்வதைப்போல அவர்கள் வழிகாட்டுதலின்படி நாம் நடந்தால், சரியான நேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்து தருவதற்கு அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை இந்த நன்றி அறிவித்தல் கூட்டம் மூலமாக வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம்.

ஏனென்றால் ஒருவர் மீது பழி போடுவது சுலபம். ஆனால், அதையும் தாண்டி அவர்கள் உதவி செய்தார்கள் என்கிறபோது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதும் நம் கடமை. என்னைப் போன்ற வளரும் நிலையில் உள்ள ஒரு திரைப்பட வெளியீட்டாளருக்கு இவர்கள் கொடுத்துள்ள ஆதரவு மகத்தானது…” என்றார்.

suresh kamatchi

இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தை நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 11-ம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை. அந்த வருத்தத்தில் நான் கொஞ்சம் காரசாரமாக அறிக்கை எல்லாம் கொடுத்திருந்தேன்.

அந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு கமிட்டியினர் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என எங்களை அழைத்து ஆலோசனை நடத்தியதில், இந்த தேதியில் நவம்பர் 8-ம் தேதியன்று ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்தோம். நான் எனது படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசவில்லை. எப்போதுமே நான் சின்ன படங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்றுதான் பேசி வருகிறேன்.

சிறிய படங்கள்தான் இன்று தமிழ் சினிமாவை வாழ வைக்கின்றன. பெரிய படங்கள் வருடத்திற்கு பத்து படங்கள்தான் வெளியாகும். அவை இந்த தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்களை காப்பாற்றி விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சிறிய படங்கள் ஓடும், ஓடாது என்பதை நாம் முடிவு செய்ய தேவையில்லை.. அதை தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.. படம் நன்றாக இல்லை… ஓடவில்லை என்றால் அதை தியேட்டரில் இருந்து எடுத்துவிட வேண்டியதுதான்.. அதற்காக ஓடாத படத்தை வைத்துக் கொண்டு தியேட்டர்காரர்களும் கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை.  

எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.. படம் ஓட வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக இருந்தது.

எங்களுக்கு இந்த அளவிற்கு தியேட்டர்கள் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.. இதற்கு முன்பு இதே போன்று ஒரு படம் விஷயமாக ரோகிணி தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, அவர் சிறிய படங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகத்தான் கூறினார்.

ஆனால், இங்கே நமது தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து படங்களை ரிலீஸ் செய்வதில், இந்தப் படங்களுக்கு இத்தனை தியேட்டர்கள்தான் கொடுக்கவேண்டும் என்கிற ஒரு சிஸ்டம் வைத்திருந்தால் அவர்களிடம் நாம் முறையாக கோரிக்கை வைக்கலாம். ஆனால், நம்மிடம் சிஸ்டம் இல்லை என்பதுதான் இப்போதைய பிரச்சனை. இதற்கு தியேட்டர்காரர்களை குறை சொல்ல முடியாது. இதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைக்கிறோம்.

உதவி செய்யவில்லையே என்கிறபோது அவர்களை திட்டுகிறோம். ஆனால் உதவி செய்யும்போது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழாவில் அவர்களை வாழ்த்துகிறோம்…” என்றார்.

Our Score