full screen background image

ஆக்சன்-ரொமான்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் ‘மைக்கேல்’ படம்

ஆக்சன்-ரொமான்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் ‘மைக்கேல்’ படம்

Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் மைக்கேல்’.

இப்படத்தில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத் தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார்.

ரொமான்ஸ், ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக் குழுவினர் நேற்று பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, “சந்தீப்தான் மாநகரம்’ படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்தப் படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித்  ஜெயக்கொடி பயணிக்கிறார். அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக் குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப்பின் எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும்.  இப்படத்தில் பங்கு பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா  பேசும்போது,  “எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக் கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்க மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன். சாமி சிறப்பான இசை மற்றும் ரஞ்சித்தின் உழைப்பு இரண்டும் இந்த படத்தைச் சிறப்பாக  மாற்றியுள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

இசையமைப்பாளர் சாம் C.S. பேசும்போது, “ரஞ்சித், லோகேஷ்  போன்ற இயக்குநர்களுடன்  பயணிக்கும்போது  எனக்குச் சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது, நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்தப் படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில்  அம்மா செண்டிமெண்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித்தின் அனைத்து படங்களிலுமே எமோஷன்ஸ் நிறையவே  இருக்கும். இந்தப் படத்தில் ஆக்சன், எமோஷன், காதல் என அனைத்தும் இருக்கிறது.  இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும்.” என்றார்.

நடிகை தீப்சிகா பேசும்போது, “இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் சாம் C.S.-ன் இசைக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  அவர் சிறப்பான இசையைக் கொடுத்து இருக்கிறார்.  படம் சிறப்பாக வந்து  இருக்கிறது. உங்களது ஆதரவு தேவை.” என்றார்.

நடிகை திவ்யான்ஷா பேசும்போது, “எங்களது உழைப்பிற்குக் கிடைத்த காதலாக இதை நான் பார்க்கிறேன்.  படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள்  அனைவரும், ரஞ்சித் உருவாக்கிய அற்புதமான கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.  சாம் C.S. சார் அதை மேம்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் படம்  பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும்.” என்றார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசும்போது, “எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர்கள்  தயாரிப்பாளர்கள்தான். அவர்களால்தான் இந்த ‘மைக்கேல்’ படம் இப்படி உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் ‘மைக்கேல்’ கதாபாத்திரம் அனைத்தும் எமோஷன்களையும்,  வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்தப் படத்தில் ஆழமாகவும், யதார்த்தமாகவும் இருக்கக் கடின உழைப்பை சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார். 

சாம் C.S.  எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார் அவர் இந்தப் படத்திலும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்குதான் இந்தப் படத்தை மேம்படுத்தியுள்ளது. 

விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள என்னுடைய நல்ல நண்பர்.  இந்த படத்தில்  ஒரு கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்டபோது, அவர் உடனே ஒத்துக்கொண்டார். 

கௌதம் சார் படங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது.  அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். இந்த மைக்கேல்’ திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்…” என்றார்.

நடிகர் சந்தீப் கிஷன் பேசும்போது, “இந்தப் படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத்துதான் எங்களுக்கு உத்வேகம்  அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார்.

சாம் CS-க்கு இன்னும்  பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவரின் உழைப்பு அளப்பரியது. ரஞ்சித் ஒரு மனிதராக, நல்ல குணம் கொண்டவர். அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. ‘மைக்கேல்’ படத்தை எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. மொழி தாண்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி  வழங்கியுள்ளார். 

கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன்.  இப்போது அவருடன் இணைந்து இந்தப் படத்தின் மூலமாகத் திரையைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.  விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர்.  பிஸியான நேரத்திலும் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள்.

நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி..” என்றார்.

இப்படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ளது.

சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

Our Score