இந்தப் படத்தை 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரும் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஶ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேக்கா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – ஜோதிகா, சூர்யா, இணை தயாரிப்பு – ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு, படத் தொகுப்பு – ஆர்.கோவிந்தராஜ், புரொடக்ஷன் டிசைனர் – ராஜீவன், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமாதேவி, ஒப்பனை – வி.முருகன், VX – எஸ்.அழகிய கூத்தன், சுரேன்.ஜி, VFX – பாந்தம் ஸ்டுடியோஸ், DI : ஐஜின், கலரிஸ்ட் – ராஜசேகரன்.K.S, Sync Sound – ராகவ் ரமேஷ், புகைப்படங்கள் – ஆகாஷ், பத்திரிக்கை தொடர்பு – ஜான்சன்.
இப்போதைய உலக நடைமுறையில் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருமே, பிறந்த ஊரைத் துறந்து வேறொரு ஊரில் பணம் சம்பாதிப்பதற்காக சாக்காடாய் உழைத்துக் கொண்டிருக்கிறவர்கள்தான்.
பிறந்த மண்ணைவிட்டு, பெற்ற தாய் தந்தையரை விட்டு, உற்றார், உறவுகளைவிட்டு.. மண்ணின் கலாச்சாரத்தைக் கைவிட்டு.. இயற்கையையும், சுவாசித்த காற்றையும்கூட விட்டுவிட்டு அசலூரில் மாதச் சம்பளத்திற்காக மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் இன்றைய மக்களை “திரும்பவும் சொந்த ஊருக்குப் போங்கடா.. ஊர், சனத்தைப் பாருங்கடா.. சொந்தப் பந்தங்களோடு உறவாடுங்கடா…” என்று தூண்டிவிட்டிருக்கிறது இத்திரைப்படம்.
தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆசிரியரான ஜெயப்பிரகாஷ் 20 வருடங்களுக்கு முன்பு உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட சொத்துப் பிரச்சினையால் அந்த ஊரைவிட்டு குடும்பத்துடன் கிளம்பி சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டார்.
அவருடைய மகன் ‘அருண்மொழி வர்மன்’ என்ற அரவிந்த்சாமிக்கு இப்போது வயது 40. இவருடைய சித்தி மகளுக்கு நீடாமங்கலத்தில் கல்யாணம். சின்ன வயதிலிருந்தே மிக நெருங்கிய நட்பு என்பதால் தட்ட முடியாமல் இந்தக் கல்யாணத்துக்காக சென்னையில் இருந்து 20 வருடங்கள் கழித்து நீடாமங்கலத்திற்கு வருகிறார் அரவிந்த்சாமி.
கல்யாண மண்டபத்தில் நுழைந்த அரவிந்த்சாமியை சந்திக்கும் பெயர் தெரியாத இன்னொரு ஹீரோவான கார்த்தி, அரவிந்த்சாமியை பேசியே கொல்கிறார். கார்த்தி யார், நமக்கு சொந்தமா.. அந்நியமா.. நம்மை எப்படி அவருக்குத் தெரியும் என்றெல்லாம் யோசிக்கும் அரவிந்த்சாமி கார்த்தியை தவிர்க்கும்படியாக பல வேலைகளை செய்தும் அவரால் அது மட்டும் முடியவில்லை.
அன்றைய இரவிலேயே ஊரைவிட்டுக் கிளம்ப வேண்டிய அரவிந்த்சாமியின் பேருந்து போய்விட்டதால், அன்றைய தினம் இரவில் கார்த்தியுடன் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அரவிந்த்சாமிக்கு.
இருவரும் மது அருந்தியபடியே குடும்பம், உள்ளூர் நிலவரம், உலக அரசியல், அரசர்கள் காலத்து போர், நீடாமங்கலத்தின் வரலாறு என்று அனைத்தையும் அலசி ஆராய்கிறார்கள். போகப் போக கார்த்தியின் வெள்ளந்தியான பேச்சில் மனதைப் பறி கொடுக்கும் அரவிந்த்சாமிக்கு கார்த்தி கடைசியாகப் பேசும் ஒரு விஷயம் அவருடைய மனதைப் பெரிதும் பாதிக்கிறது. அன்றைய இரவிலேயே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அந்த வீட்டில் இருந்து வெளியேறி சென்னைக்குக் கிளம்புகிறார்.
இதன் காரணம்தான் என்ன..? சென்னை வந்து சேர்ந்தாரா அரவிந்த்சாமி..? கார்த்தி அவரைத் தேடினாரா..? இருவரும் மீண்டும் சந்தித்தார்களா…? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள நெஞ்சைத் தொடும் கதை.
நீடாமங்கலத்தில் ஓடும் வெண்ணாறு போலவே படம் நெடுகிலும் பேசிக் கொண்டேயிருக்கிறார் கார்த்தி. “அத்தான்..” “அத்தான்..” என்று பாசத்தோடு அரவிந்த்சாமியிடம் பேசுமிடத்திலெல்லாம் ஒரு பாச அலை வந்து வந்து விழுகிறது.
கார்த்தியின் பாச வலைக்குள் அரவிந்த்சாமி வீழ்ந்த பின்புதான் கதையே சூடு பிடிக்கிறது. “அத்தான்..” என்று கொஞ்சிக் கொண்டிருக்கும் கார்த்தி கொஞ்சம், கொஞ்சமாக தன் வீடு, ஊர், உறவுகள், வயல், தொழில், விவசாயம், நீடாமங்கலத்தின் வரலாறு, அழையா விருந்தாளியாக தோட்டத்தில் வசிக்கும் பாம்பு என்று அனைத்தையும் சொல்லிக் கொடுக்கும்போது ரொம்பவே போரடித்தாலும் இப்படியொரு சொந்தக்காரன் நமக்கிருந்தால் எப்படியிருக்கும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அரவிந்த்சாமி காட்டியிருப்பது டவுன் டூ எர்த்துக்கு வந்து நிற்கும் நடிப்பு. முதலில் எரிச்சலாகி, பின்பு கடுப்பாகி, சலிப்பாகி, கோபமாகி, ரெளத்ரமாகி, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பாசக் கனலில் சிக்கி தீயில் கருகும் சருகாய் மாறி, பாசப் பிணைப்பில் சிக்கித் தவிக்கும் தனது கதாப்பாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
“என் மகளுக்கு நீங்கதான் பேர் வைக்கணும்” என்று உச்சபட்சமாக கார்த்தி பாசத்தைக் கொட்டும்போது அடக்கமாட்டாமல் அழுதுவிட்டு செருப்புகள் மாறியிருப்பதைக்கூட கவனிக்காமல் தப்பித்து ஓடும் காட்சியில் நம்மையும் உடன் சேர்த்து இழுத்துச் செல்கிறார் அரவிந்த்சாமி.
சென்னை திரும்பி சதா நேரமும் கார்த்தியின் நினைப்பாகவே இருந்து போனில் கார்த்தியுடன் பேசும்போது பெயரைத் தெரிந்து கொள்ள ஆசைப்படும் அந்த ஆர்வமும், பாசப் பிணைப்பும்தான் படம் பார்த்த ரசிகர்களுக்கும், படத்தின் இயக்குநருக்கும் இருந்த பிணைப்பாகும். வெல்டன் அரவிந்த்சாமி ஸார்..!
மாமாவாக நடித்திருக்கும் ராஜ்கிரணும், அப்பாவாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷூம் போனில் பேசும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார்கள். ஒரேயொரு காட்சியென்றாலும் அரவிந்த்சாமியைத் திருமணம் செய்யக் காத்திருந்த அவருடைய உறவுக்காரப் பெண்ணான இந்துமதி சந்திக்கும் காட்சி, ஒரு கவிதை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
கார்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ஶ்ரீதிவ்யாவுக்கு மிகப் பெரிய காட்சிகளெல்லாம் இல்லை. சில காட்சிகளேயானாலும் அழகாகத் தோன்றியிருக்கிறார். அவ்வளவுதான்..!
அரவிந்த்சாமியின் பாதி உயிரான மனைவி தேவதர்ஷினியின் பொறுப்பான பேச்சும், அக்கறையும் நடிப்பில் வெளிப்பட்டுள்ளது. பேருந்து நடத்துனராக நடித்திருக்கும் கருணாகரன் ஒரு காட்சி என்றாலும் நினைக்க வைத்திருக்கிறார்.
மகேந்திரன் காமராஜூவின் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளை காட்சியின் தன்மை கெடாமல் படமாக்கியிருக்கிறது. தஞ்சை ஜில்லாவின் இயற்கை எழிலையும், வயல் வரப்புகளையும் பார்க்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு பணம் சம்பாதிக்க வெளியூர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த மண்ணின் மைந்தர்களை நினைத்து கோபம்தான் வருகிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் ‘யாரோ நீ யாரோ’ பாடல் மீண்டும், மீண்டும் கேட்கும் ரகமாய் ஒலிக்கிறது. கொண்டாட்டத்திற்கு ‘டெல்டா கல்யாணம்’, ‘போறேன், நா போறேன்’, ‘ஊர் மண்ணே’ ஆகிய பாடல்களும் கவனத்தை ஈர்த்துள்ளன.
சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பாக ‘96’ என்னும் காதல் காவியத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் பிரேம்குமார், இந்தப் படத்தில் உறவுகளை வைத்து ஒரு உறவு காவியத்தைக் கொடுத்திருக்கிறார்.
விசேஷ நாட்களில் நாம் சொந்த ஊருக்கு செல்லும்போது அந்த ஊருக்கும் நமக்குமான பிணைப்பு, அப்பா அம்மாவுக்கும் நமக்குமான பிணைப்பு என நமது பால்ய காலத்து வாழ்க்கையை சொல்லும் கதையை மிக நுட்பமாக கையாண்ட திரைப்படம் இதுவரைக்கும் எதுவும் இல்லை என்று சொல்லலாம்.
ஒன்று நகரத்தை நோக்கிய படமாக இருக்கும். அல்லது கிராமத்தை நோக்கிய படமாக இருக்கும். ஆனால், கிராமத்தையும், நகரத்தையும் பக்காவாக இணைத்துள்ள படமாக இது அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு இடத்தில்கூட சோகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும்போது பல இடங்களில் நம்மைக் கண் கலங்க வைத்துள்ளார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு உறவுகளையும், நண்பர்களையும் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்றவர்கள் இந்தப் படத்தை பார்த்தால், தன் உறவுகளை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று எண்ணம் அவர்களுக்குள் நிச்சயமாய் தோன்றும். அதேபோல் இப்போதும் நம்மை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் அந்த அப்பாவி உறவுகள் மற்றும் நண்பர்களால் நமக்குள் நிச்சயமாக ஒரு குற்ற உணர்ச்சியும் ஏற்படும்.
இருந்தாலும் இந்தப் படம் பற்றிய விமர்சனங்களையும் நாம் முன் வைத்துதான் ஆக வேண்டும்..!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் போல இந்தப் படத்தின் நீளமும், அதிகப்படியான வசனக் காட்சிகளும் படத்திற்கு மிகப் பெரிய பேக் டிராப்பைக் கொடுத்துள்ளன.
இடைவேளைக்கு முன்பான காட்சிகளில் அரை மணி நேர காட்சிகளையும், இடைவேளைக்குப் பின்பு ஒரு கால் மணி நேரக் காட்சிகளையும் துண்டாக்கித் தூக்கியெறிந்தால் படம் இன்னும் இதைவிடவும் சிறப்பாகவே இருக்கும். இப்போது இருக்கும் முழுக் கதையும் மிகவும் போரடிக்க வைக்கிறது என்பதுதான் உண்மை.
படத்தில் இடைவேளைக்குப் பின்பு கடைசி முக்கால் மணி நேரம்தான் படமே…! அந்த நேரத்தை ஈக்குவல் செய்வதுபோல முதற் பாதியில் காட்சிகளை கட் செய்து வைத்திருந்தால், ஒரு சுவையான சிறுகதையை படித்ததுபோல படம் இருந்திருக்கும்.
ஒரு பெயரைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இத்தனை மெனக்கேடா என்ற கேள்வியும் படம் பற்றிய மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஏனெனில் சென்னையில் கிரிக்கெட் கோச்சாக இருக்கும் 40 வயதைத் தாண்டிவிட்ட அரவிந்த்சாமிக்கு “உன் பெயர் என்ன..?”, “நீ எப்படி எனக்கு சொந்தம்..?” என்று கார்த்தியிடம் கேட்பதில் என்ன தயக்கம் வந்துவிடப் போகிறது..? இதுதான் இடிக்கிறது.
அதேபோல் அரவிந்த்சாமி இந்த ஊரைவிட்டுக் கிளம்பும்போது அவருக்கு வயது 20 ஆகத்தான் இருக்க வேண்டும். 20 வயதில் ஊரைவிட்டுக் கிளம்பியவருக்கு ஊருக்குப் போகும் வழியும், வழியில் இருக்கும் கிராமங்களின் பெயர்களும், நீடாமங்கலத்தின் வரலாறும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுமா என்ன.. நம்ப முடியாத திரைக்கதை..!
கதைக்குச் சம்பந்தமே இல்லாத வகையில் பொது அறிவை வளர்க்கும் விதமாக சோழர்களின் கதை, அவர்கள் நடத்திய போர், வெண்ணாறு நதியின் பெயர் உருவாகியவிதம், ஈழப் போரின் தோல்வி, ஜல்லிக்கட்டு காளையின் கதை,. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்பு, ரஷ்யா, உக்ரைன் போர், உலக அரசியல் என்று கிடைத்த கேப்பில் அனைத்தையும் பேசியதுதான் படத்தின் மையக் கருத்தில் இருந்து ரசிகனின் பார்வை விலகியதற்கான காரணம்..!
இப்போதும் நமக்குப் புரியாத இன்னொரு விஷயம்.. எந்தக் காரணத்திற்காக அரவிந்த்சாமி கண் கலங்கி அந்த நள்ளிரவில் சென்னையை நோக்கி ஓடுகிறார் என்பதுதான்.. ஒரு அழுத்தமான எமோஷனல் சீன் அந்த இடத்தில் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றம்தான்..!
படத்தின் கதையையே கொஞ்சம் மாற்றியமைந்திருந்தால்கூட இத்திரைப்படம் சிறப்பாகத்தான் இருந்திருக்கும்.
கார்த்தி, அரவிந்த்சாமியின் குடும்பத்தை ஏமாற்றிச் சொத்தப் பிடுங்கிய ஒரு குடும்பத்தின் கடைசி பிள்ளை. அரவிந்த்சாமி குடும்பம் ஊரைவிட்டு போன பிறகு கார்த்தியின் குடும்பமும் நலிந்துபோய் திருடிய சொத்தும் கைவிட்டுப் போய் அவர்களும் இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
கடைசி மகனான கார்த்தி மட்டுமே ஊருக்குள் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்க.. இன்னும் இருக்கும் ஒரேயொரு சொத்தை மட்டும் விற்றுவிட்டால் கார்த்தியும், அவரது குடும்பமும் நன்றாக இருக்கலாம். அந்தச் சொத்தை விற்பதற்கு அரவிந்த்சாமியின் குடும்பத்தினரின் ஒப்புதல் தேவை. அந்த ஒப்புதலை கார்த்தி அரவிந்த்சாமியிடம் கேட்பதுபோல திரைக்கதை அமைத்திருந்தால் ரசிகர்களுடன் நிச்சயமாக படத்தின் மாந்தர்கள் கனெக்ட் ஆகியிருப்பார்கள்.
கெட்டது செய்தவர்களுக்கும் நல்லது செய்து அவர்கள் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுத்து, பிரிந்து குடும்பம் ஒன்று சேர்ந்ததாய் இந்தப் படத்தை முடித்திருந்தால் நிச்சயமாய் படத்தைத் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.!
ஒரு நகரவாசியாக இந்த ‘மெய்யழகன்’ படத்தை உங்களால் நூறு சதவீதம் ரசிக்க முடிந்தால் முழுக்க, முழுக்க கிராமத்தில் இருக்கும் ஒருவராலும் இந்தப் படத்தை அழகாக ரசிக்க முடியும்.
RATING : 3.5 / 5









