ரெபல் ஸ்டூடியோவிற்காக தீபன் பூபதி, ரதீஸ் வேலு தயாரித்துள்ள படம் மெல்லிசை. அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க, விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கிறார்கள்.
தலைப்பை கேட்ட உடனேயே இது இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகத்தான் இருக்கும் என்று எண்ணம் எழுந்திருக்கும். பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆனால் திடீரென்று இரு நாட்களுக்கு முன்பாகவே இந்தப் படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் விமர்சனம் தப்பாகிவிடுமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்காக காத்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி.
பாடல்கள் வெளியாகிய 24 மணி நேரத்தில் ஐ டியூன்ஸின் இசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது ‘மெல்லிசை’ படத்தின் பாடல்கள். இதனால் திடீர் சந்தோஷத்தில் உள்ளனர் படக் குழுவினர்.
இந்த படத்தில் சாம் சி.எஸ். இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவரது திறமை பாடல்கள் ஹிட் ஆனதில் இருந்தே தெரிகிறது, இரண்டு நாட்கள் முன்னதாக வெளியாகியும் எந்த ஒரு சலசலப்பும் இன்றி பாடல்கள் ஹிட்டாகி இசை பிரியர்களின் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சரியமானது.