தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாகவும், ஸ்வேதா திருப்பதி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் ஆர்.ஜே.விக்னேஷ், வேல ராமமூர்த்தி, அன்கூர் விகால், மாரிமுத்து, பூஜா, சன்னி சார்லஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு – எஸ்.கே.செல்வக்குமார், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – சதீஷ்குமார், சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், நடனம் – பாபி ஆண்டனி, மக்கள் தொடர்பு – யுவராஜ், கதை, வசனம் – ராஜூ முருகன், திரைக்கதை, இயக்கம் – சரவண ராஜேந்திரன், தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ கிரீன், தயாரிப்பாளர் – கே.ஈ.ஞானவேல்ராஜா.
இயக்குநர் ராஜு முருகனின் உடன் பிறந்த அண்ணனும், அவரிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான சரவண ராஜேந்திரன், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருடைய முதல் படமாகும்.
தமிழ்ச் சினிமாவில் காலம் கடந்தும் நிற்பவை காதல் பற்றிய திரைப்படங்கள்தான். எல்லா வகையான காதல்களையும், சமூகம் அறிவதற்கு முன்பேயே சமூகத்தில் பரப்புரை செய்தது சினிமாதான்.
சினிமா காதல்கள் நிஜவுலகில் காதலர்களையும், காதல் திருமணங்களையும் அதிகப்படுத்தியதும் உண்மைதான். காதலுக்கு என்றும் அழிவில்லை என்பதுபோல காதல் திரைப்படங்களுக்கும், தமிழ்த் திரையுலகில் என்றும் அழிவில்லைதான்.
தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக படம் இயக்க வரும் இயக்குநர்களும் தங்களது முதல் படைப்பாக காதலைத்தான் தொடுவார்கள். இதுவும் ஒரு தொன்றுதொட்டு வரும் பாரம்பரியமாக இன்றுவரையிலும் கோடம்பாக்கத்தில் நிலவி வருகிறது.
அந்த வரிசையில் அறிமுக இயக்குநரான சரவண ராஜேந்திரனும், தனது முதல் படைப்பாக அருமையான ஒரு காதல் திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.
இத்திரைப்படம் கதை சொல்லும் காலம் 1995-கள். இளையராஜா என்னும் இசை அரக்கன் தனது இசையினால் தமிழகத்தையே தனது கட்டுக்குள் வைத்திருந்த காலக்கட்டம் அது.
அந்த நேரத்தில்தான் காதலர்களும், காதல்களும் தமிழகத்தின் மூலை, முடுக்களிலெல்லாம் பிறந்து, செழித்து வளர்ந்தது. இந்தக் காதல்களுக்கு விதை போட்டது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றால் அதில் ஐயமில்லை. இயக்குநர் சரவண ராஜேந்திரனும் இசைஞானியின் இசையை இந்தப் படத்தில் முதன்மை கேரக்டராகவே நடிக்க வைத்திருக்கிறார்.
கொடைக்கானல் அருகேயிருக்கும் பூம்பாறை என்னும் மலை சூழ்ந்த கிராமம். அந்தக் கிராமத்தின் பெரிய தனக்காரர் மாரிமுத்து. தீவிர ஜாதிப் பாசம் கொண்டவர். தன் வீட்டுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்கவே மறுக்கும் அளவுக்கு ஜாதி வெறி பிடித்தவர்.
இவருடைய மகன்தான் படத்தின் நாயகனான ஜீவா என்னும் ‘மாதம்பட்டி’ ரங்கராஜ். ‘ராஜ கீதம் மியூஸிக்கல்ஸ்’ என்ற பெயரில் அதே ஊரில் கேஸட் விற்பனை கடையை நடத்தி வருகிறார். ஊருக்குள் நடக்கும் காதல்களுக்கு உற்ற துணையாய் இருக்கிறார். இவருக்குத் துணை, இவருடைய நண்பர் ஆர்.ஜே.விக்னேஷ்.
மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட கழைக் கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த ஊரில் சர்க்கஸ் போட வருகிறார்கள். அந்தக் கூட்டத்தின் தலைவரின் பெண்தான் நாயகியான மெஹந்தி.
இந்தப் பெண்ணைப் பார்த்ததும் பரவசமாகிறார் நாயகன். இளையராஜா இசையமைத்த அத்தனை காதல் பாடல்களையும் பாடுவதற்கு தனக்கு இப்போதுதான் நேரம் வாய்த்திருப்பதாக நினைக்கிறார் நாயகன். நாயகியை நினைத்து உருகி, உருகி பாடுகிறார்.
இந்தக் காதல் ஒரு கட்டத்தில் நாயகிக்கும் பரவ.. அவரும் பரவசமாகிறார். காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் பயப்படுகிறார். தனது தந்தை இதனை ஏற்றுக் கொள்ள மாட்டாரே என்று அஞ்சுகிறார் நாயகி.
இந்தக் காதலையறியும் நாயகனின் தந்தை நாயகனைக் கண்டிக்கிறார். இந்தக் காதல் தங்களது குடும்பத்திற்கு ஏற்றதல்ல என்று கோபப்படுகிறார். ஆனாலும் நாயகன் காதலைக் கைவிடுவதாக இல்லை.
நாயகன், நாயகி காதலை அறியும் நாயகியின் அப்பா சர்க்கஸில் நாயகியை வைத்து அவர்கள் ஆடும் கத்தியாட்டத்தை சேதாரமில்லால் செய்து காண்பித்தால் நாயகியை கட்டித் தருவதாக நாயகனிடம் வாக்களிக்கிறார். நாயகனும் இதற்காகவே பலவித பயிற்சிகள் எடுத்து தயாராகிறார். ஆனால் கடைசி நேரத்தில் குழப்பத்திலும், பயத்திலுமாக இந்தப் போட்டியிலிருந்து விலகுகிறார்.
இதற்கு மேலும் இங்கேயிருந்தால் ஆபத்து என்றெண்ணி நாயகியின் தந்தை வேறு ஊருக்குச் சென்று கூடாரம் போடுகிறார். நாயகன் அங்கேயும் விரட்டிச் சென்று தன் காதலை வாழ வைக்கிறார். ஒரு நாள் இரவில் ஊரில் இருக்கும் சர்ச்சின் பாதிரியாரான வேல ராமமூர்த்தியின் உதவியுடன் காதலியை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு ஓடுகிறார் நாயகன்.
ஆனால் ஒரு துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். சர்க்கஸ்காரர்கள் ஒரே நாள் இரவில் அந்த ஊரைவிட்டு அடித்துத் துரத்தப்படுகிறார்கள்.
அவர்கள் எங்கே சென்றார்கள் என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் அலைகிறான் நாயகன். ஒரு கட்டத்தில் சர்க்கஸில் வேலை பார்த்து தனது காதலுக்கு உதவி செய்தவனைக் கண்டுபிடித்து தனது காதலி மெஹந்தியைப் பற்றிக் கேட்க அதற்கான பதில் பச்சைத் தூரோகமாக இருக்கிறது.
அவளாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து ஊர் திரும்பும் நாயகன் அதன் பிறகு வழக்கம்போல் மதுவே துணை என்று சொல்லி தன் வாழ்க்கையைத் தொலைக்கிறான். அவனது அப்பாவும் பக்கவாதம் வந்து படுக்கையில் விழ.. அவனைப் பற்றி யாரும், எதுவும் கேட்க முடியாத நிலை.
இருபத்தைந்தாண்டுகள் கழித்து இப்போது எங்கோ மகாராஷ்டிராவின் ஒரு மூலையில் இருக்கும் தனது கிராமத்தில் உயிருக்குப் போராடி வரும் நாயகியைக் காப்பாற்ற வேண்டி, நாயகியின் மகள் இவனைத் தேடி பூம்பாறைக்கு வருகிறாள்.
இனி என்ன ஆகிறது என்பதுதான் இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் திரைக்கதை.
நாயகன் ரங்கராஜூக்கு இதுதான் முதல் படம். ‘ரங்கராஜ்’ என்கிற தனது இயற்பெயரை மாற்றாமலேயே திரையில் அறிமுகமாகியிருக்கும், அவரது தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள்.
படத்தில் எந்த இடத்திலும் சினிமாத்தனங்களும், போலித்தனங்களும், நாடகத்தனமும் இல்லை என்பதால் நாயகனின் நடிப்பும் இயல்பாகவே வரவழைக்கப்பட்டிருக்கிறது. முதல் சில காட்சிகளில் சோகத்தைக் கவ்வியபடி நடிக்க வேண்டிய கட்டாயம் என்பதால் முகத்தில் இருக்கும் தாடியும், சோகமான முகத்தை மட்டுமே காட்டி தனது நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
1995-களின் காலக்கட்டத்தில் அப்போதைய இளசுகளுக்கேற்ற துள்ளலையும், காதலுக்கான ஏக்கத்தையும், தவிப்பையம் ஒரு சேர காட்டியிருக்கிறார் நாயகன். இதற்கு இளையராஜாவின் இசையும் துணை நிற்க.. இயக்குநரின் அழகான இயக்கத்தில் அவருக்கு வந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார். குறையொன்றுமில்லை.
படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் நாயகி ‘மெஹந்தி’யாக நடித்திருக்கும் நடிகை ஸ்வேதா திருப்பதிதான். வட இந்திய முகமும், அழகிய உருண்டை கண்களுமாக.. பார்த்தவுடனேயே கவர்ந்திழுக்கும் தோற்றத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.
சில காட்சிகளில் தனது கண்களாலேயே காட்சியை நகர்த்துகிறார். காதலையும் வெளிப்படுத்துகிறார். தனது உறுதியான பார்வையால் காதலனையும் வீழ்த்துகிறார். இந்தப் பார்வை ஒன்றே போதுமே என்பதுபோலவே இயக்குநர் இவரை நடிக்க வைத்திருக்கிறார் போலும்..! வெல்டன்..!
இவர் மட்டுமில்லாமல் வெளியில் காதலர்களுக்கு உதவுவதைக் குற்றம் சுமத்தி பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டு மறைமுகமாக காதலர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்த பாதிரியாராக வேல.ராமமூர்த்தி. தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். அவருக்குள்ளேயும் இருக்கும் காதலை, அந்த பாதிரி உடைக்கு களங்கம் விளைவிக்காத வண்ணம் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இதேபோல் ஜாதிக்காகவே பிறந்து வாழ்ந்தவராக மாரிமுத்து.. “வீட்டுக்குள்ள..” என்று சொல்லி தன் மனைவியை அதட்டும் அந்தக் காட்சியே “இவனையெல்லாம் வெட்டி பொலி போடணும்…” என்று சொல்ல வைக்கிறது. சாதாரணமாக பேசும்போதே தனது ஜாதி ஆணவத்தை மகனிடம் சொல்லி எச்சரிக்கும் நடிப்பில் மாரிமுத்து கவனிக்க வைக்கிறார்.
நாயகியுடன் சர்க்கஸில் இருக்கும் அங்கூர் விகாஸ்.. நல்லவனாக இருக்கும் வில்லன் கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். இதேபோல் நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சன்னி சார்லஸும் ஒரு தந்தைக்கு எடுத்துக்காட்டாய் நடித்திருக்கிறார்.
படத்தில் கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று அனைத்துமே ‘பெர்பெக்ட் ஆல் ரைட்’ என்றும் சொல்லும்வகையில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
படத்தின் கதைக் களமாக கொடைக்கானலை தேர்வு செய்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. 1995-களின் காலக்கட்டத்தைக் காட்டுவதற்கு இப்போதைக்கு எந்த ஒரு நகரத்தையும் காண்பிக்கவே முடியாது. கிராமங்களும் இப்போது நகரம்போல் மாறிவிட்ட காரணத்தால், மலை வாழ் பிரதேசத்தை மையமாக்கிவிட்டார் இயக்குநர்.
கொடைக்கானல் பூம்பாறை கிராமம் இன்னமும் அதே காட்சியமைப்பில் இருப்பது அவருக்கு வசதியாகிவிட்டது. சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார். இதற்கு உறுதுணையாய் இருந்திருக்கும் கலை இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் நமது பாராட்டுக்கள்.
இளையராஜாவின் அந்தக் கால சோனி, டிடிகே கேஸட்டுக்கள்.. டேப் ரிக்கார்டர்கள், இசைத் தட்டுக்கள்.. போஸ்டர்கள்.. கால ஓட்டத்தில் சிக்காத கலைப் பொருட்கள் என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்காகவே கலை இயக்குநருக்கு ஒரு ‘ஜே’ போடலாம்.!
படத்தின் இடையிடையே சில காட்சிகளில் நுணுக்கமாக குறியீடாக டேப்புகள் நழுவி தரையில் விழுந்து கிடப்பதையும், மொத்தமாக ஒரே இடத்தில் குப்பையாக குவிந்து கிடப்பதையும் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
கொடைக்கானல் மலையின் இன்னொரு பக்கத்தை இந்தப் படத்தில் மிக அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வக்குமார். பாடல் காட்சிகளிலும், துவக்கக் காட்சிகளிலும் பூம்பாறையின் எழில் அழகு நம் மனதைத் தொட்டுச் செல்கிறது. ஓய்வு காலங்களில் ஓய்வெடுக்க இங்கே போய் தங்கிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு அந்த இயற்கைப் பிரதேசங்கள் கை தட்டி நம்மை அழைக்கின்றன.
இதற்கு நேர்மாறான இடத்தினை நோக்கி நாயகன் பயணப்படும் காட்சிகளையும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒரு பக்கம் பசுமை.. இன்னொரு பக்கம் வறட்சியான மகாராஷ்டிரா பகுதியையும் காட்டி.. சர்க்கஸ் வித்தையைக் காட்டி மாநிலம் விட்டு மாநிலத்திற்கு அந்தக் கலைஞர்கள் ஏன் ஓடி வருகிறார்கள் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
இடையிடையே இளையராஜாவின் இசையைப் பயன்படுத்திவிட்டதால் அதற்கேற்ற தொடர்ச்சியான இசையாக இருக்க வேண்டுமே என்றெண்ணி மிகச் சிறப்பாக இசைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.
இந்தாண்டு இதுவரையிலும் வெளிவந்த படங்களில் இந்தப் படத்தில்தான் பாடல்களில் செந்தமிழ் விளையாடியிருக்கிறது. பாடல்கள் கேட்கும் அளவுக்கு இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘வெள்ளாட்டு கண்ணழகி’ பாடல் காதலைத் துவக்கி வைக்கிறது. ‘கோடி அருவி கொட்டுதே’ பாடல் படம் பார்ப்பவர்களையும் நாயகியை காதலிக்க வைக்கிறது. ‘வெயில் மழையே’ பாடல் ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைத்து பாடல்களிலும் தமிழைக் குழைத்துக் கொடுத்திருக்கும் பாடலாசிரியர் யுகபாரதிக்கு நமது பாராட்டுக்கள்.
படத் தொகுப்பும் சிறப்பு என்றாலும், கத்தி வீசும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் டென்ஷனை ஏற்றியிருக்க வேண்டும். அது மிஸ்ஸிங்காகவே தெரிகிறது. அதேபோல் கதைக்கு மிக முக்கியமான காட்சிகளிலெல்லாம் அழுத்தமில்லாமல் கடந்து போவதும்கூட படத்திற்கு மைனஸாக இருக்கிறது.
குறிப்பாக மாரிமுத்துவின் ஆட்கள் சர்க்கஸ் கூடாரத்திற்குள் நுழைந்து தாக்கியிருப்பதையும், தீ வைத்திருப்பதையும் இன்னும் அழுத்தமாகக் காட்டியிருக்க வேண்டும். அதேபோல் மாரிமுத்துவுக்கு காதலர்களைப் பற்றிப் போட்டுக் கொடுக்கும் விகாஸின் பேச்சை வேறுவிதமாக ரசிகர்களுக்கு எளிதில் புரிவதைப் போல காட்டியிருக்க வேண்டும். இதனால் மனதில் நின்றிருக்க வேண்டிய இந்தக் காட்சிகள் நிற்காமலேயே போய்விட்டன.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான இன்னொன்று வசனங்கள்தான். இயக்குநர் ராஜூ முருகனின் எழுத்தாற்றல் இந்தப் படத்திலும் மிளிர வைத்திருக்கிறது.
படத்தின் துவக்கத்தில் வரும் மதுபான பாரில் நடக்கும் இளையாராஜவின் பாடல்கள் பற்றிய காட்சியிலேயே, இயக்குநரின் கதை திறமையும், இயக்குதல் திறமையும் பளிச்சிடுகிறது.
பல திசைகளிலிருந்தும் ஒலிக்கும் பல்வேறு பாடல்களை யார், யார் பாடினார்கள் என்பதை பட், பட்டென்று போட்டுடைக்கும் நாயகனின் குணாதிசயம் இந்த ஒரு காட்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்விதம் ஒரு கவிதை. இறுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரே இந்த பாட்டு டிஷ்கஷனில் கலந்து கொள்வது ஒரு அழகான டிவிஸ்ட்டுதான்.
படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் வசனங்களும், காதலை முதன்மைப்படுத்தும் வசனங்களும் நிச்சயமாக ராஜூ முருகனுக்கு பெருமை சேர்க்கின்றன.
ஒரு பஞ்சாயத்தில் “அவன் கிறிஸ்தவனா மதம் மாறினவன்.. நான் எப்போதுமே கிறிஸ்தவன்…” என்ற பேச்சு வர.. “உன் தாத்தா மட்டுமென்ன.. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பரம்பரையா..? இங்க இருக்குற எல்லா கிறிஸ்தவர்களும் கன்வர்ட்டர்டுதான்…” என்று மாரிமுத்து ஓங்கிச் சொல்லும் வார்த்தையை படத்தில் வைப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும்.
இதே பஞ்சாயத்தில் ஊர்க்காரர் ஒருத்தர் பேசும் வசனம் அப்படியே சாட்சாத் உண்மை. “நம்ம ஊருல அடிக்கடி காதல் கல்யாணம் நடக்குதுன்னா அதுக்கு முதல் குற்றவாளி இளையராஜாதான்..” என்ற வசனம் இத்தனையாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தில் பேசப்பட்டு வந்த வார்த்தைதான். முதல்முறையாக சினிமாவிலேயே ஒலித்திருக்கிறது.
காதல் காட்சிகளுக்கேற்றவாறு “நாம சேர முடியாதுன்னு சொல்லத்தான் இவ்வளவு மேக்கப் போட்டுட்டு வந்தியா…?” என்று நாயகன் நாயகியிடம் கேட்கும் கேள்வியும், அதற்கடுத்து காதல் எழும்பும்விதமும் அருமை.
உடல் வளர்ச்சி குன்றிய சர்க்கஸ் கலைஞன் “என் இதயம் எல்லார் மாதிரியும் பெரிசுதான்…” என்று சிச்சுவேஷன் டயலாக்காக சொல்லும்போது கை தட்டாதவர்களே இருக்க முடியாது..!
“தாலி கட்டறதால ஒருத்தன் புருஷன் ஆகிற முடியாது. மனசுல இருக்கறவன்தான் புருஷன்…“ என்ற வசனம் இனிமேல் சின்னத்திரை வட்டாரத்தில் அதிகம் பேசப்படலாம்.
ஒரு காதல் படத்திற்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் வைத்துத்தான் இந்தக் காதல் கவிதையை படைத்திருக்கிறார் இயக்குநர் சரவண ராஜேந்திரன்.
உண்மையான காதல், காதலிக்கப்படுபவனைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கான அழகான காதலி.. காதலிக்கும் வயதிலும், தகுதியிலும் இருக்கும் காதலன்.. காதல் ஏற்படும் தருணம், காதல் வளரும்விதம், தடைக்கல்லாக கிளம்பும் நடைமுறை விஷயங்கள்.. என்று பலவற்றையும் மிக இயல்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.
அழகியல்தன்மையுடன் கூடிய காதலை இத்திரைப்படத்தில் காணலாம். படம் முழுவதையும் காட்சிப்படுத்துவதில் ஒரு கவிதைத் தன்மையைக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைஞானியின் பாடல்களைக் கேட்கும் இன்றைய இளைய தலைமுறையினர் அனைவருமே “அடடா.. 90-களில் பிறக்காமல் விட்டுவிட்டோமே…” என்று நிச்சயமாக வருத்தப்படுவார்கள். அந்த அளவுக்கு காதல் உணர்வைத் தூண்டும் பாடல்களை சரியான விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதிலும் ‘ஓ பாப்பா லாலி’ பாடல் ஒலிக்கும் இடமும், களமும் அருமை.
இப்போதும் காதலைப் பிரிப்பதில் முன்னணியில் இருக்கும் ஜாதி விவகாரத்தில் ஆழமாய் பிடிவாதமாய் இருக்கும் மனிதர்களையும் மாரிமுத்து கேரக்டரின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
பெண்கள் மீதான அடக்குமுறையை எப்படியாகினும் செய்யவே இந்த ஆணாதிக்கம் விளைகிறது என்பதைத்தான் மெஹந்தியை தந்திரமாக பொய் சொல்லி அடையும் விகாஸின் கேரக்டர் வாயிலாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
தன் காதலனால் சாகசம் செய்ய முடியும் என்பதை தனது அப்பாவுக்குக் காட்டும்விதமாக தன்னைச் சுற்றி கத்தி வீசும் கலையைச் செய்யும்படி நாயகனிடம் நாயகி சொல்வதாக கிளைமாக்ஸ் காட்சியைப் படைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்தக் காட்சிக்காக இத்தனையாண்டுகள் காத்திருந்து இப்போது நாயகி செய்து காட்டுகிறார் என்பதாக முடித்திருப்பது சாலப் பொருத்தம்தான். இருந்தாலும், நாயகியின் கணவர் இப்போதும் காணாமலேதான் போயிருக்கிறார் என்று திரைக்கதை இருப்பதுதான் சற்று நெருடல். காதலர்கள் இப்போது சேர்வதற்கு மணவிலக்கு அவசியமாச்சே இயக்குநரே..!? எவ்வளவோ யோசிச்சு திரைக்கதை எழுதியிருப்பீங்க. இதற்கும் ஏதாவது செய்திருக்கலாமே..?
அதேபோல் நாயகன், நாயகி இடையே காதல் உருவாவதில் எந்தவிதமான அழுத்தமான காட்சியமைப்பும் இல்லை. நாயகி வரும்போதும், போகும்போதும் வெறுமனே ஹிந்தி பாடல்களை ஒலிபரப்புவதாலேயே நாயகிக்கு, நாயகன் மீது காதல் வருவது போலவே அமைத்திருப்பது சுமாரான திரைக்கதையாகத்தான் தெரிகிறது.
‘96’ படத்திற்குப் பிறகு காதலுக்கும், காதலர்களுக்கும் நல்ல அனுபவக் கதையாகவும், அவரவர் காதல்களை நினைத்துப் பார்க்க வைக்கும்விதமாகவும் அருமையான கவிதையாக படைக்கப்பட்டிருக்கிறது இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’.
‘மெஹந்தி சர்க்கஸ்’ – உண்மையான காதலர்களுக்கானது..!