இந்த வெள்ளிக்கிழமையன்று உண்மையாக 3 பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகியிருக்க வேண்டும். ‘மான் கராத்தே’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய 3 பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஒரே வாரத்தில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் நீடித்தன.. இருப்பதே 953 தியேட்டர்கள்தான். இதில் பெரிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யும் அளவுக்கான வசதிகளை உடைய தியேட்டர்கள் என்று பார்த்தால் அவை 600 தியேட்டர்களுக்குள்தான் வரும்.
இவைகளை 3 பங்காக பிரித்து போட்டால்கூட ஒரு படத்திற்கு 200 தியேட்டர்கள்தான் கிடைக்கும். வெறும் 200 தியேட்டர்கள் என்றால் படத்தின் வசூல் குறையும். ஒருவேளை படம் தோல்வியடைந்தால் அடுத்த ரவுண்டாக இன்னொரு 200 தியேட்டர்களுக்கு இந்தப் படம் போகாது. அல்லது அதைவிட குறைந்த அளவு தியேட்டர்களே கிடைக்கும். வசூலும் மரண அடி வாங்கும். அதனால்தான் படம் நல்லாயிருக்கோ.. இல்லையோ.. என்றெல்லாம் ரசிகர்களை யோசிக்கவே வைக்க விடாமல்.. முதல் 3 நாட்களில் முடிந்த அளவுக்குக் கூட்டத்தைக் கூட்டி காசை அள்ளிவிட வேண்டும் என்பதால்தான் அதிகமான தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்ய நினைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இந்த மாதம் ரிலீஸாக காத்திருந்த 3 படங்களுமே முக்கியமான படங்கள் என்பதால் 3-ம் ஒரே நாளில் ரிலீஸானால் தியேட்டர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஏதாவது ஒரு படத்தினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் போட்டியைத் தவிர்க்க நினைத்து மூன்று தயாரிப்பாளர்களுமே பேசி வைத்து வாரத்திற்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார்களாம்.
இதனை நேற்று நடைபெற்ற ‘நான் சிகப்பு மனிதன்’ பிரஸ் மீட் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தனஞ்செயனே வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இதன்படி நாளை ஏப்ரல் 4-ம் தேதி ‘மான் கராத்தே’ படமும், ஏப்ரல் 11-ல் ‘நான் சிகப்பு மனிதனும்’, ஏப்ரல் 18-ல் ‘தெனாலிராமனும்’ ரிலீஸாக உள்ளன. இதுவொரு நல்ல முடிவுதான் என்றாலும் இந்த முடிவுக்கு உதவியாக இருந்தது ‘கோச்சடையானின்’ தற்போதைய வாபஸ் முடிவுதான்..!
எப்படியிருந்தாலும் ஏப்ரல் 4 முதல் 10-ம் தேதிவரையிலும் ‘மான் கராத்தே’ எந்த அளவுக்கு ஓடி வசூல் செய்கிறது என்பதைப் பொறுத்தே 11 மற்றும் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கும் படங்களுக்கு அதிகத் தியேட்டர்கள் கிடைப்பது முடிவாகும்..!
நன்றாக ஓடும் படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் நிச்சயமாக உடனுக்குடன் கிடைக்கும். ‘பாண்டிய நாடு’ படத்திற்கு அப்படித்தான் இரண்டாவது வாரமே கூடுதலாக 80 தியேட்டர்கள் கிடைத்தன. ‘இனம்’ தூக்கப்பட்டதால் அதற்காக இருந்த தியேட்டர்கள் பலவற்றில் தற்போது ‘நெடுஞ்சாலை’ போடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறதாம்..
இதுபோல பகிர்ந்துண்டு வாழ்வோம் என்று நினைத்து தயாரிப்பாளர்கள் ஒற்றுமையுடன் களமிறங்கினால் அவர்களுக்கும் நல்லது.. வாரத்திற்கு ஒரு படம்தான் என்று பட்ஜெட் போட்டு படம் பார்க்கும் குடும்பத்தினருக்கும், சினிமா ரசிகர்களுக்கும் நல்லது..!