full screen background image

கொரோனா முடக்கிப் போட்டிருக்கும் மெகா பட்ஜெட் இந்தியப் படங்கள்..!

கொரோனா முடக்கிப் போட்டிருக்கும் மெகா பட்ஜெட் இந்தியப் படங்கள்..!

இந்தக் கொரோனா இரண்டாவது அலையினால் அந்தந்த மொழிப் படங்களையும் தவிர, பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரான மெகா பட்ஜெட் படங்களும் சிக்கிக் கொண்டுள்ளன.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிரம்மாண்டமான சரித்திரத் திரைப்படமான மரைக்கார்-அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ என்ற படம், சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம், பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம், அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம், ‘கே.ஜி.எஃப்.’ திரைப்படத்தின் 2-ம் பாகம் என்று இந்த மெகா பட்ஜெட் படங்களும் இந்தக் கொரோனா அலையில் மாட்டிக் கொண்டு தவித்து வருகின்றன.

மோகன்லால் நடித்த ‘மரைக்கார்’ படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான முதல் மலையாளப் படமாக உருவெடுத்திருக்கிறது. தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சென்ற ஆண்டே ரிலீஸுக்குத் தயாராக இருந்தும் தியேட்டரில்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று காத்திருந்ததால் இந்தப் படம் இன்னமும் திரைக்கு வர முடியாமல் தவிக்கிறது.

இதேபோல் தெலுங்கில் தயாரித்து மற்றைய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் ‘ஆச்சார்யா’ திரைப்படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் 350 கோடி செலவில் இந்திய மொழித் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்திற்கும் இதே நிலைதான். இன்னும் முடிக்க வேண்டிய படப்பிடிப்பினைக்கூட முடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்.

அல்லு அர்ஜூனை நாயகனாகக் கொண்டு ‘புஷ்பா’ என்ற திரைப்படமும் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இது இரண்டு பாகங்களாக வெளி வரும் என்று அறிவித்திருந்தார்கள். அல்லு அர்ஜூன் படங்களிலேயே இந்தப் படம்தான் மிக அதிக பட்ஜெட் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர் என்று சகல வழிகளிலும் அனைத்து மாநில ரசிகர்களையும் கவர்ந்திழுத்தாலும் படத்தின் தாமதம்.. மற்றும் லொகேஷன் மாற்றம் என்று பல்வேறு செலவுகளால் இந்தப் படத்தின் பட்ஜெட் மீட்கவே முடியாத அளவுக்கு 270 கோடியைத் தொட்டுவிட்டது.

ஆந்திராவின் தற்போதைய சென்சிட்டிவ் பிரச்சினையாக இருக்கும் செம்மரக் கடத்தல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இப்போதைய சூழலில் அது முடியுமா என்று கொரோனாவின் கைகளில்தான் உள்ளது.

கன்னடத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்து இந்தியா முழுவதும் சக்கைப் போடு போட்ட ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகியுள்ளது. இதுவும் கன்னடப் படவுலகத்திலேயே மிக அதிக பட்ஜெட்டில் 120 கோடியில் உருவாகியிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படமும் தயாராகி வெளியாக திட்டமிடும்போதெல்லாம் கொரோனா குறுக்கிட்டுக் கொண்டேயிருக்க பட வெளியீடு தள்ளிப் போனது. இப்போது கடைசியாக வரும் ஜூலை 16-ம் தேதி இந்தப் படத்தை இந்திய அளவில் வெளியிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் முடிவென்னவோ திருவாளர் கொரோனாவின் கைகளில்தான் உள்ளது.

இப்படி தென்னிந்திய சினிமாவில் சுமார் 500 கோடி ரூபாய்வரையிலும் முதலீட்டை முழுங்கியிருக்கும் இந்தப் படங்களின் எதிர்காலம் சத்தியமாக கொரோனாவின் கைகளில்தான் உள்ளது.

மீடியம் பட்ஜெட், சின்ன பட்ஜெட் படங்களென்றால் ஓடிடி தளத்தில் வெளியீடு.. அல்லது டிவி சாட்டிலைட் உரிமம் என்று கணிசமான தொகையோடு தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், இது போன்ற மெகா பட்ஜெட் படங்களை ஓடிடியில் வெளியிட்டால்கூட அது நஷ்டத்தைத்தான் கொடுக்கும். தியேட்டர்களில் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டும்தான் லாபத்தை மீட்டெடுக்க முடியும்.

இத்திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கிப் போயிருக்கும் இந்தக் காலத்தில் மாதாமாதம் வட்டி கட்டியே இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 
Our Score