full screen background image

‘கத்தி’ படத்தின் பஞ்சாயத்து தொடர்கிறது..!

‘கத்தி’ படத்தின் பஞ்சாயத்து தொடர்கிறது..!

என்னதான் பெரிய கட்சியாக இல்லையென்றாலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் எதிர்ப்பு மற்றும் சிறியதும், பெரியதுமான 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இயக்கங்கள்.. இவர்களையெல்லாம் பகைத்துக் கொண்டு நிம்மதியாக ‘கத்தி’யை வெளியிட முடியுமா என்று இங்கேயுள்ளவர்கள் டென்ஷனில் இருக்க ‘லைகா’ நிறுவனமோ கூலாக அப்படியே வெளியிடுங்கள் என்று சொல்கிறார்களாம்..!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்தப் பிரச்சினையை தீபாவளிக்கு முன்னதாகவே முடித்துவிட்டால்தான் தியேட்டர்களை புக் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டதால், கடந்த இரு நாட்களாக வட்டமேசை மாநாடு போட்டு பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அணு அளவுகூட முன்னேற்றம் இல்லையாம்..

‘லைகா’ என்ற பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரை வைத்து படத்தை ரிலீஸ் செய்தாலும் எங்களுக்கு சம்மதம் என்று போராடும் இயக்கங்களும், வேல்முருகனும் சொல்லிவிட்டார்கள்.. ஆனால் ‘லைகா’ நிறுவனம் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறதாம். தங்களுடைய பெயரில்தான் இந்தப் படம் ரிலீஸாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறதாம்.

இந்த நிலைமையோடு இன்றைய வட்டமேசை மாநாடு முடிவுக்கு வந்திருக்கிறதாம். நாளைய தினம் தயாரிப்பாளர்கள், எதிர்ப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த அவசரக் கூட்டத்திற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி வந்ததும் ஒரு காரணமாம். சமீப காலமாக விஜய் தரப்பிற்கும், ஜெயலலிதாவிற்கும் இடையில் ஒரு மறைமுக போர் நடந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் தீபாவளி தினத்தன்று தியேட்டர்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து அதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டாம் என்று சொல்லி முன்கூட்டியே பிரச்சினையைத் தீர்க்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முனைப்புடன் இருக்கிறது..!

இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் கத்தி படத்தின் வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.. ஆக.. பிரச்சினை வலுக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்..!

நாளைய கூட்டத்தில் முடிவு கிடைத்த பின்புதான் ‘கத்தி’ படத்திற்கான தியேட்டர்கள் இறுதியாகுமாம்..!

 

Our Score