1990 ஜூன் 22-ம் தேதியன்று வெளியானது நடிகர் மம்மூட்டி ஹீரோவாக நடித்த ‘சாம்ராஜ்யம்’ என்ற மலையாள திரைப்படம். ஜோமோன் இயக்கியிருந்த இந்தப் படம் சூப்பர்டூப்பர் ஹிட். பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. கேரளா மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் சக்கைப் போடு போட்டது.
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை சரித்திரத்தில் இந்தப் படம் மிக முக்கியமானது. குறிப்பாக அலெக்ஸாண்டர் என்ற கேரக்டரில் நடித்திருந்த மம்மூட்டி படத்தில் வருகின்ற காட்சிகளிலெல்லாம் ஒரு தீம் மியுஸிக் போட்டிருப்பார் இசைஞானி. அப்படியொரு அசத்தல் டியூன் அது..! அதுவே படத்திற்கு மிகப் பெரிய கம்பீரத்தைக் கொடுத்திருந்த்து. படத்தில் மம்மூட்டியுடன், ஸ்ரீவித்யா, மது, கேப்டன் ராஜ் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
இந்த ‘சாம்ராஜ்யம்’ திரைப்படத்தின் முடிவில் மம்மூட்டி கொல்லப்பட்டுவதுடன் அவரது 8 வயது மகன், அடுத்த தலைவனாக உருவாக்கப்பட இருக்கிறான் என்பதோடு படம் முடிவடைந்திருந்தது.
இந்தப் படத்தின் அடுத்த பாகமாக ‘சாம்ராஜ்யம்-2 சன் ஆஃப் அலெக்ஸாண்டர்’ என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் துவக்கப்பட்டது. இந்தப் படம்தான் இப்போது ‘திகார்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவுள்ளது.
காயத்ரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பார்த்திபனும், உன்னி முகுந்தனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக அகன்ஷா புரி நடிக்கிறார். மற்றும் ரியாஸ்கான், எம்.எஸ்.பாஸ்கர், கார்த்திகேயன், பிரியங்கா, தேவன், மும்பை சங்கர் இவர்களுடன், ஈரான் நடிகர் ஜியாத்கானும் வில்லனாக அறிமுகமாகிறார்.
‘சந்திரமுகி’, ‘சிவகாசி’ படங்களின் ஒளிப்பதிவாளர் சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசை – R.A.ஷபீர்
கலை – வல்சன்
நடனம் – ஹரி
எடிட்டிங் – V.ஜெய்சங்கர்
ஸ்டண்ட் – தீப்பொறி நித்யா
தயாரிப்பு மேற்பார்வை – ராமச்சந்திரன்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – பேரரசு.
தயாரிப்பு – ரேகா அஜ்மல்
படம் பற்றி இயக்குனர் பேரரசு பேசும்போது, “பார்த்திபன் – உன்னி முகுந்தன் என இரண்டு தாதாக்களின் ஆக்ரோஷமான மோதல் போராட்டம்தான் இந்தத் ‘திகார்’ படத்தின் ஒற்றை வரி கதை. வழக்கமான கமர்ஷியல் படங்களான என் படைப்புகளில் அம்மா சென்டிமென்ட், தங்கை சென்டிமெண்ட் இருக்கும். ஆனால் முதன்முதலாக ‘திகாரில்’ அப்பா சென்டிமென்ட்டை வைத்திருக்கிறோம். வழக்கமான என் படங்கள் மாதிரி திகார் இருக்காது. ஏறக்குறைய எட்டு அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கும். அட்வான்ஸ் டெக்னிக்கலாக இதனை உருவாக்கியிருக்கிறோம்..” என்றார்.
‘சாம்ராஜ்யம்’ படத்தில் மம்மூட்டியின் அறிமுகக் காட்சியில் இசைஞானியின் பின்னணி இசையை இங்கே கேட்கலாம்.