full screen background image

“ஹாலிவுட்டிற்கு பிறகு சிறந்தது தமிழ்ச் சினிமாதான்..” – கிரண்பேடி பாராட்டு..!

“ஹாலிவுட்டிற்கு பிறகு சிறந்தது தமிழ்ச் சினிமாதான்..” – கிரண்பேடி பாராட்டு..!

பேரரசு இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘திகார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. விழாவில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் ‘திகார்’ படத்தின் கதாநாயகன் நடிகர் பார்த்திபன், படத்தின் தயாரிப்பாளர் அஜ்மல், நடிகர்கள் பரத், எம்.எஸ்.பாஸ்கர், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், இயக்குநர்கள் ரமேஷ்கண்ணா, ஈ.ராம்தாஸ். சண்முகசுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

‘திகார்’ படத்தின் பாடல் சி.டி.யை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி வெளியிட, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்று கொண்டார்.

IMG_9406

முன்னதாக அனைவரையும் வரவேற்று பேசிய இயக்குநர் பேரரசு, “நான் வழக்கமா ஊர்ப் பெயரை வைத்துதான் படமெடுத்து வந்திருக்கேன். என்னுடைய கதைகளுக்காக அது யதார்த்தமாகவும், பொருத்தமாகவும் அமைந்துவிட்டது. ஆனால் இந்தப் படம் அப்படியல்ல..

ஊர் என்றில்லாமல், இடத்திற்கு பொருத்தமாக இருந்ததால் ‘திகார்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். காஞ்சி என்றால் அண்ணா, ஈரோடு என்றால் பெரியார், பசும்பொன் என்றால் முத்துராமலிங்க தேவர், விருதுநகர் என்றால் காமராஜர் அது போல திகார் என்றால் கிரண்பேடிதான் ஞாபகத்திற்கு வருவார். எனவே, இந்தப் படத்தின் இசை வெளியீட்டுக்கு திகாரின் பெண் புலி கிரண்பேடி அவர்களை அழைத்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தேன். இது பற்றி தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் அடுத்த நாளே டெல்லிக்கு சென்று கிரண்பேடியிடம் பேசிவிட்டார். ஒரு வாரத்தில் அதை உறுதிப்படுத்தியும் சொன்னார்.

அதேபோல் இசைத் தட்டை  பெற்றுக் கொள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பேரன் சி.வ.சிதம்பரம் அவர்கள் ஒத்துக் கொண்டது எங்களது படக் குழுவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி…” என்றார் பேரரசு.

கிரண்பேடிக்கு தமிழ் தெரியாது என்பதால் பேசிய இயக்குநர்கள் ஈ.ராம்தாஸ், ரமேஷ் கண்ணா, பார்த்திபன் ஆகியோர் அவருக்கு புரிவதற்காக ஆங்கிலத்தில் பேசி அவரை பாராட்டினார்கள்.. வாழ்த்தினார்கள்.

ஈ.ராம்தாஸ் பேசும்போது, “சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் படம் திகார் ஜெயிலில் படமாக்கப்பட்டபோது நான் மேடத்தை அங்கே சந்தித்து பேசினேன்.. அப்போ மேடம் ரொம்ப வேகமா நடப்பாங்க. நாங்கெல்லாம் பின்னாடியே ஓடுவோம்.. அப்படி ஓடும்போது ஒரு ஆள் மேடத்துக்கிட்ட வந்து ஒரேயொரு பீடி கொடுக்கும்படி கெஞ்சி கேட்டான். மேடம் முடியாதுன்னுங்க.. பீடி இல்லாட்டி செத்துருவேன்னு சொன்னான். உடனே மேடமும் செத்துருன்னு சொன்னாங்க.. அந்த அளவுக்கு அவங்க அவங்களோட டூட்டில உறுதியா இருந்தாங்க..” என்றார்.

கிரண்பேடி பேசும்போது தன் பேச்சை மொழி பெயர்க்க தயாரா என்று கேட்டுவிட்டுத்தான் தன் பேச்சைத் துவக்கினார். நிகழ்ச்சி தொகுப்பாளரே மிக அழகாக கிரண்பேடியின் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தார்.

IMG_9408

கிரண்பேடியின் பேச்சில் இருந்து சில பகுதிகள் இது :

“திகார் என்ற டைட்டிலை பார்த்தவுடன் திகார் ஜெயில் பற்றிய படமாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் இங்கு டிரெயிலரை பார்த்தேன். படத்தில் அதிகமான வன்முறை இருக்கிறது.. திகாரில் இந்த அளவுக்கு வன்முறை கிடையாது.. ஆனால் இப்படிப்பட்ட வன்முறைகளுக்குப் பிறகுதான் சிறைக்கு வந்தவர்கள் அங்கு உள்ளனர். ,

நான் திகார் ஜெயிலில் பணிக்கு போவதற்கு முன்பு 9 மாதங்கள் எந்த பதவியிலும் இல்லாமல் இருந்தேன். அதன் பிறகுதான் என்னை திகார் ஜெயிலில் பணி அமர்த்தினார்கள். அதுகூட வேறு வழியில்லாமல்தான்.. அங்கு போன பிறகுதான் அந்த வேலைக்கு யாரும் வராததால்தான் எனக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

ஏற்கனவே அங்கு பணியில் இருந்த அதிகாரியொருவர் என்னிடம், ‘அங்கு வேலையே இருக்காது. நான் பணியில் இருந்தபோது, வீட்டில் இருந்தபடியேதான் பணி செய்தேன். நீயும் வீட்டிலிருந்தே வேலையைச் செய்..’ என்றார். திகார் ஜெயில் பற்றி அவருக்கு தெரியவில்லை என்று அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்.

திகார் ஜெயில் என்றதுமே அனைவரும் வன்முறையாகத்தான் பார்க்கிறார்கள். அப்படி இல்லை. வன்முறைக்கு பிறகு வரும் அமைதிதான் இப்போதைய திகார் ஜெயில். திகார் ஜெயில் என்பது மனிதாபிமானம் இருக்க வேண்டிய இடம். எங்கேயோ தவறு இருக்கிறது. அதை திருத்தி அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் திகார் ஜெயிலை மருத்துவமனையாக பார்த்தேன். அங்கே இருப்பவர்கள் மனதுக்கு தேவையான மருந்தை நான் கொடுத்தேன். ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டுமென்றால், திகார் ஜெயில் இருந்த 10 ஆயிரம் கைதிகளில், 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கைதிகள் எழுதப் படிக்க தெரியாதவர்கள்.

கல்வி இல்லாத இடத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. எனவே அவர்களுக்கு எழுத படிக்க தெரிந்த கைதிகளை வைத்து கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அங்கு உள்ள தமிழ் கைதிகள், ஆங்கிலம் மற்றும் இந்தி படிக்க கற்றுக்கொண்டார்கள். வெளிநாட்டு கைதிகள் பிரெஞ்ச், ஜெர்மன் என்ற வேற்று நாட்டு மொழிகளையும் கற்றுக் கொண்டார்கள். வெளியில் இருந்த பள்ளிகளில் கொடுத்த புத்தகங்கள் பெற்று கைதிகளுக்குப் படிக்க கற்றுக்கொடுத்தோம்.

நான் அங்கு பணியில் இருந்தவரை காலை 9 மணி முதல் 11 மணிவரை கண்டிப்பாக கல்வி கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் நடைபெற்றன. இதில் அரசுக்கு எந்தவித செலவும் இல்லை. அது மட்டுமில்லாமல், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரக் கூடிய மாற்றுக் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், இதே போல் கல்வி கற்றுக் கொடுத்தால், கைதிகளை சீர்திருத்தியதற்காக வழங்கப்படும் நோபல் பரிசு இந்தியாவுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

நான் ‘இந்தியா விஷன் பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இதில் கைதிகளின் பிள்ளைகள் படிக்கிறார்கள். இதுவரை 300 பேர் இதன் மூலம் பயன் பெற்று, அவர்களில் இன்று பலர் பட்டப் படிப்பு படித்து முடித்துள்ளார்கள்.

திகார் ஜெயிலில் நான் பணியில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சிகளை வைத்து ‘It’s Always Possible’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளேன். ஆனால் இது இன்னமும் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. அந்த புத்தகத்தில் உள்ள நிகழ்ச்சிகளை வைத்து நல்ல இயக்குனர்கள் படமாக எடுத்தால் கண்டிப்பாக ‘ஆஸ்கார்’ விருது கிடைக்கும்.

ஹாலிவுட்டிற்கு பிறகு இந்திய சினிமாவில் சிறந்து விளங்குவது தமிழ்ச் சினிமாதான்.. இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்..” என்றார் கிரண்பேடி.

கிரண்பேடி பேசி முடித்த பிறகு, நடிகர் பார்த்திபன் எழுந்துவந்து மைக்கை பிடித்து கிரண்பேடியின் பேச்சை மொழி பெயர்த்த தொகுப்பாளினிக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார். கூடவே கிரண்பேடியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான பொறுப்பை தான் எடுத்துக் கொள்வதாக கிரண்பேடியிடமே கூறினார்.  

தொடர்ந்து மைக்கை பிடித்த இயக்குநர் பேரரசு, “அந்தப் புத்தகம் தமிழில் வெளிவந்ததும், அதை நான் சினிமாவாக எடுக்கத் தயாராக இருக்கிறேன். அதில் நிச்சயம் வன்முறை குறைவாகத்தான் இருக்கும்..” என்று உறுதிமொழியையும் கொடுத்தார்.

Our Score