இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ‘பாட்ஷா’ சுதீப் நாயகனாக நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோகிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, அனிருத் பட், உக்ரம் மஞ்சு, காமராஜு, கரண் ஆர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ், இயக்குநர் – விஜய் கார்த்திகேயா, ஒளிப்பதிவாளர் – சேகர் சந்திரா, இசையமைப்பாளர் – பி.அஜனீஷ் லோக்நாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் : சிவகுமார் ஜே, படத்தொகுப்பு – எஸ்.ஆர்.கணேஷ்பாபு, நிர்வாக தயாரிப்பாளர் – எம்.டி.ஸ்ரீராம், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ஏ.இளங்குமரன், தயாரிப்பு நிர்வாகி – என்.மகேந்திரன், சம்பகடமா பாபு, ஆடை வடிவமைப்பாளர் : பாரத் சாகர், ஆடைகள் – பெருமாள் செல்வம், ஒப்பனை – நெல்லை வி.சண்முகம், ஒலிப்பதிவு – டி.உதய்குமார், வண்ணக் கலைஞர் – பிரசாத் சோமசேகர், வி.எஃப்.எக்ஸ். -அஜாக்ஸ், நாக் ஸ்டூடியோஸ், புகைப்படங்கள் – இம்ரான், டிசைன்கள் – பவன், ரெடோட் டிசைன்ஸ், பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத், விளம்பரங்கள் கே.ஆர்.ஜி.கனெக்ட்ஸ்.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரான விஜய் கார்த்திகேயா தமிழ் இயக்குநர்தான். ஏற்கெனவே தமிழில் பாபி சிம்ஹா நடித்த வல்லவனுக்கு வல்லவன் படத்தையும், வைகை என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படமாகும். கன்னடத்தில் முதல் படமாகும்.
ஓவரான ஹீரோயிசத்துடன் வந்திருக்கும் கன்னட தமிழ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் இந்த ‘மேக்ஸ்’ திரைப்படம்.
நேர்மை தவறாத அதே சமயம் கடுமையான, கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மகாஷ் என்ற சுதீப். தன்னுடைய நேர்மையான குணத்தினால் எந்த இடத்திலும் அதிக நாட்கள் வேலை செய்த்தில்லை. அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
அப்படி ஒரு டிரான்ஸ்பரை வாங்கிக் கொண்டு தான் ஏற்கெனவே வேலை பார்த்திருந்த ஊருக்கு பணியில் சேர வருகிறார் மேக்ஸ். நாளை பணியில் சேர வேண்டும் என்பதால் முதல் நாள் இரவே ட்ரெயினில் வந்து இறங்குகிறார் மேக்ஸ்.
அந்த நேரத்தில் மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறுகிறது. ஒரு பக்கம் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை சிலர் கடத்திக் கொண்டு போய் பதுக்கி வைத்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட எம்.எல்.ஏக்களை அமைச்சர்கள் சரத் லோகிதாஸ் மற்றும் ஆடுகளம் நரேனின் தளபதியான நரசிம்மன் என்ற விசால் கிருஷ்ணா பெரும் அடிதடி நடத்தி மீட்கிறார்.
அதே நேரம் இந்த அமைச்சர்களின் மிகப் பெரிய ஆதரவாளராக இருக்கும் சுனிலின் பர்த்டே பார்ட்டி நடக்கிறது. இந்த பார்ட்டிக்கு வந்த அந்த இரண்டு அமைச்சர்களின் மகன்களும் திரும்பிப் போகும்போது அவர்களுக்கிடையில் நடக்கின்ற ஒரு சண்டையில் போலீஸ் வாகனத்தை இடித்து விடுகிறார்கள். கேள்வி கேட்ட ஒரு பெண் போலீஸை அசிங்கப்படுத்திவிடுகிறார்கள்.
அப்போது அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் மேக்ஸ், விஷயம் அறிந்து திரும்பி வருகிறார். அந்த இரண்டு பேரையும் அடித்து உதைத்து லாக்கப்பில் வைக்கிறார். அமைச்சர் மகன்களை கைது செய்ததால் போலீஸ் ஸ்டேஷனை எரித்து விடுவார்கள் என்று ஸ்டேஷனில் இருக்கும் அத்தனை பேரும் பயப்படுகிறார்கள்.
ஆனால் மேக்ஸோ யார் பேச்சையும் கேட்காமல், “இங்கேயே வைத்திருங்க. நாளைக்கு கோர்ட்ல ஆஜர்படுத்தலாம்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகிறார். ஸ்டேஷனில் இருந்த மற்றக் காவலர்களும் அவரவர் வேலயைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது அமைச்சரின் மகன்கள் இருவரும் இறந்து கிடக்கிறார்கள்.
செய்தியறிந்து மேக்ஸ் திரும்பி ஸ்டேஷனுக்கு வருகிறார். அதேசமயம் வரிசை, வரிசையாக கலர், கலர் டிசைனாக அமைச்சர்களின் அடியாட்கள் அங்கு வந்து சண்டையிட ஒவ்வொருவரையும் அடித்து துவைத்து அனுப்புகிறார்.
இப்பொழுது இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் சுத்தமாக நம்மளை கொலை செய்து விடுவார்கள் என்று அத்தனை போலீஸாரும் பயப்படுகிறார்கள். எப்படியாவது இந்த கொலையை இல்லாமல் ஆக்கி விடுவோம் என்று மேக்ஸ் நினைக்கிறார். அதற்கேற்ப தடயங்களை அழிக்கும் வேலையில் போலீஸ் ஈடுபடுகிறது.
கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்த ‘மேக்ஸ்’ படத்தின் ரத்தக் களறியான திரைக்கதை. தமிழின் ‘கைதி’ படம் போலவே இந்தப் படமும் உருவாகியுள்ளது.
கன்னடப் படவுலகின் ‘பாட்ஷா’ என்றும் ‘அபிநய சக்கரவர்த்தி’ என்றும் புனை பெயர்களால் அழைக்கப்படும் கிச்சா சுதீப்பின், அட்டகாசமான ஸ்டைலான ஆக்சன் நடிப்பு இந்தப் படத்தில் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.
அதிலும் இன்ஸ்பெக்டராக இருக்கும் கெத்தில் ரவுடிகளை அடித்து உதைத்து, கமிஷனருக்கே பயப்படாமல் பேசும் கேரக்டராக இருக்கும் கிச்சா சுதீப், போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே சதா சர்வகாலமும் சிகரெட் பிடித்துக் கொண்டே ஸ்டைலாக நடப்பதும், வருவதும் போவதுமாக இருப்பது எந்தவிதத்திலும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் ஒட்டவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் மனிதர் சண்டைக் காட்சிகளிலும், ஸ்டைல் காட்டுவதிலும் பின்னி எடுத்திருக்கிறார். உண்மையில் கிச்சாவின் இந்த ஸ்டைல் நடிப்பு கன்னடப் படவுலகில் வேறு யாருக்கும் வராது என்பது தெரிந்ததுதான் இந்த அளவுக்கு தன்னுடைய ஸ்டைலான நடிப்பினை காண்பித்து இருக்கிறார் சுதீப்.
கடைசிவரையிலும் அவருடைய நடிப்பு என்பது சண்டை காட்சிகளில் அவர் காட்டுகின்ற வேகம்தான். வேறு எந்த வகையிலும் அவருடைய நடிப்பை ஏற்றுக் கொள்ளத்தான் நம்மால் முடியவில்லை.
படத்தில் ‘ராவணன்’ என்ற ஏட்டு கேரக்டரில் நடித்திருக்கும் இளவரசு நம் மனதை ஈர்க்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் அவர் கடைசியாக “ஏன் இந்தக் கொலைகளைச் செய்தேன்” என்பதை சொல்கின்றபொழுது நிச்சயம் நம் மனதும் அவர் செய்தது சரிதான் என்று சொல்கிறது. அந்த அளவுக்கு இளவரசுவின் நடிப்பு நம்மை நினைக்க வைத்திருக்கிறது.
கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘ரூபா’வாக வரும் வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய ஸ்டைலான ஒரு நடிப்பில் கவர்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ நடந்திருக்கிறது என்பதை அவர் கண்டறியும் காட்சிகளில் நிஜமாகவே ஸ்டைல் நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
‘கானி’யாக நடித்திருக்கும் சுனில், தன்னுடைய சின்ன சின்ன ஆக்சன்களிலும், வசன மாடுலேஷன்களிலும் நம்மைப் பெரிதும் கவர்கிறார்.
வம்சி கிருஷ்ணா சண்டை காட்சிகளில் போராடி, போராடி கடைசியாக தோற்றுப் போய் விடுகிறார் இன்னொரு பக்கம் ஏதோ ஒரு காமெடி செய்ய வேண்டுமே என்பதற்காக ரெடின் கிங்ஸ்லியை வைத்து ஏதோ செய்திருக்கிறார்கள்.
அமைச்சர்கள் ‘ஆடுகளம்’ நரேனும், சரத் லோகிதாஸ்தாவும் தங்களுடைய ஆதிக்கத்தை காட்டுவது போல சில வசனங்களை பேசி நடித்திருக்கிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் மொத்த போலீஸ்காரர்களும் ரவுடிகளுக்கு பயந்து கொண்டு இருப்பது ஒரு பக்கம் நமக்கு சிரிப்பாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஆளும் கட்சியை பகைத்துக் கொண்டு எந்த ஒரு போலீஸாரும் செயல்பட மாட்டார்கள்தான். அதே சமயம் அமைச்சர்களையும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் இந்த அளவுக்கு இருக்குமா என்கின்ற ஒரு சந்தேகத்தையும் இந்தப் படம் கிளப்பி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவின் இரவு நேர ஒளிப்பதிவு அத்தனை அட்டகாசம். படம் முழுவதும் இரவு நேரத்தில் நடைபெறுவதால், இரவு நேர காட்சிகளையும், சண்டை காட்சிகளையும் அவ்வளவு அழகாக படம் பிடித்து இருக்கிறார்.
சண்டை பயிற்சியாளரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். படம் முழுவதும் வருகின்ற சண்டை காட்சிகள் இரவு நேரத்தில் நடைபெறுவதால் இரவு வெளிச்சத்தில் தெளிவாக தெரிய வேண்டும் என்கின்ற ஒரு விஷயத்தையும் மனதில் வைத்து மிகவும் கோரமாகவும், அதிகமாக அதேசமயம் கொஞ்சம் ஸ்டைலாகவும் சண்டை காட்சிகள் முழுவதையும் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் சண்டை இயக்குநர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
பாடல் காட்சிகள் சிறப்பு என்றாலும் அந்த பாடல் குத்து பாடல்கள் ஆகவும் ஒரு பாட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் பாடுகின்ற பாடலாகவும் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசை நம்முடைய காதை கிழித்து இரண்டாகிவிட்டது என்பதுதான் உண்மை.
இப்படி ஒரு கொடூரமான பின்னணி இசை, நிச்சயம் தியேட்டரில் பார்ப்பவர்களுக்கு மிகப் பெரிய தொந்தரவாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இது போன்ற பக்கா கமர்ஷியல் கதைகள் என்பது தெலுங்கு படங்களில்தான் அதிகமாக இருக்கும். இது போன்ற ஒரு ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்கள் நடப்பதாக காட்டப்படும் சினிமாக்களை இப்பொழுது கன்னடப் படவுலகமும் தத்து எடுத்துக் கொண்டுள்ளது.
ஓவரான ஹீரோயிசத்தினால் இந்தப் படத்தை நாம் முழுமையாக பாராட்ட முடியாமல் போய்விட்டது. ஆனால், கிச்சா சுதிப்பின் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு மாஸானதுதான்.
RATING : 3 / 5









