full screen background image

கப்ஜா – சினிமா விமர்சனம்

கப்ஜா – சினிமா விமர்சனம்

Sri Siddeshwara Enterprises & Invenio Origin ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் உபேந்திரா, கிச்சா சுதீப், சிவ்ராஜ்குமார், ஷ்ரேயா சரண், முரளி சர்மா, கிருஷ்ண முரளி, சுதா, அனூப் ரேவண்ணா, கபீர் துஹான் சிங், தேவ் கில், காமராஜன், நவாப் ஷா, ஜான் கொகேய்ன், டேனிஷ் அக்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஆர்.சந்துரு, தயாரிப்பு, ஆர்.சந்துரு, ஆனந்த் பண்டிட், இணை தயாரிப்பு – அலங்கார்பாண்டியன், ஒளிப்பதிவு – ஏ.ஜெ.ஷெட்டி, இசை – ரவி பஸ்ரூர், படத் தொகுப்பு – மகேஷ் எஸ்.ரெட்டி, வசனம் – ராம் லஷ்மண், சந்திரமெளலி, சண்டை இயக்கம் – கே.ரவிவர்மா, விஜய், சேத்தன் டிசெளஸா, விக்ரம் மோர், திரில்லர் மஞ்சு, நடன இயக்கம் – சின்னி பிரகாஷ், ஜானி, கலை, முரளி, உடை வடிவமைப்பு – ராஷ்மி அனூப் ராவ், பாபு, சேத்தன், சித்தாரா, சாகர், பத்திரிகை தொடர்பு – சதீஷ்(டீம் எய்ம்).

இந்தப் படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியானபோதே அது ‘கே.ஜி.எஃப்.’ சாயலில் இருப்பதாக சினிமாவுலகத்தில் பேசப்பட்டது. இப்போது, படத்தைப் பார்த்தபோது அது நூறு சதவிகிதம் ஊர்ஜிதமாகியுள்ளது.

கன்னட சினிமாவுலகம் ‘கே.ஜி.எப்.’ படத்திற்கு பிறகு மிகப் பெரிய வியாபார சந்தையை பெற்றுள்ளது. இதனால் அதே பாணியில் பல திரைப்படங்கள் ‘பான் இந்தியா’ படமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த கண்மூடித்தனமான வரிசையே மீண்டும் கன்னட சினிமாவை பின் நோக்கி கொண்டுபோய் விடுமோ என்ற அச்சத்தை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

சிவ்ராஜ் குமார், உபேந்திரா, கிச்சா சுதீப் என்று கன்னட சினிமாவின் மூன்று சூப்பர் ஸ்டார்களும் படத்தில் இருந்தும் படம் இப்படியிருக்கிறது என்றால் நாம் யாரைக் குற்றம் சொல்வது..!?

சுதா தனது கணவருடன் வடஇந்தியாவில் வசித்து வந்தவர். 2 மகன்கள் இருக்கிறார்கள். சுதாவின் கணவர் சுதந்திர போராட்டத்தின்போது பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்படுகிறார்.

கணவரை இழந்த சுதா அந்த ஊரில் இருந்து கிளம்பி தெலங்கானாவில் தற்போது இருக்கும் அமரபுரம்’ என்று ஊருக்கு வந்து செட்டில் ஆகிறார். இவரது மகன்களான சுனில் புரனிக், உபேந்திரா இருவரையும் இங்கேயே படிக்க வைத்து ஆளாக்குகிறார்.

வருடங்கள் உருண்டோட இப்போது 1971-ம் ஆண்டு.. மூத்த மகனான சுனில் புரனிக் உள்ளூரில் இருக்க, தம்பி உபேந்திராவோ இப்போது இந்திய விமானப் படையில் பைலட்டாக இருக்கிறார்.

அந்த அமரபுரத்தை பிரிட்டிஷ் காலத்தில் ஆண்டு வந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் முரளி ஷர்மா. இவரது மகளான ஷ்ரேயாவை காதலித்து வருகிறார் உபேந்திரா. விடுமுறையில் இப்போது ஊருக்குத் திரும்பி தனது காதலை தொடர்ந்து வருகிறார் உபேந்திரா.

இந்த நேரத்தில் அதே அமரபுராவில் ரவுடித்தனம் செய்து வரும் ஒரு கும்பலுடன் உபேந்திராவின் அண்ணன் சுனில் புரனிக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் சுனில் புரனிக் கொல்லப்படுகிறார்.

தன் கண் முன்பே தனியாக தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தனது அண்ணனை பார்த்த உபேந்திராவுக்குள் கோபம் கொப்பளிக்க… அண்ணன் தலையைத் துண்டித்தவனை தானும் அதேபாணியில் கொலை செய்கிறார்.

அடக்கி வைக்கப்பட்டிருக்கும் சாமான்ய மக்கள் இதற்காகவே உபேந்திராவுக்கு கை கொடுக்க, ஒரே நாளில் உபேந்திரா அந்தப் பகுதியில் தலைவராகிறார். தனது தாயின் பேச்சையும் கேட்காமல், காதலியின் பேச்சையும் கேட்க மறுத்து தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி அந்தப் பகுதிக்கே டானாக உருவெடுக்கிறார் உபேந்திரா.

இதன் பிறகு முரளி ஷர்மாவின் எதிர்ப்பையும் மீறி, ஸ்ரேயா சரணை திருமணம் செய்து கொள்கிறார் உபேந்திரா. இப்போது தேசிய அளவில் தேர்தல் நடைபெறப் போவதால் அந்த அமரபுராவைக் கைப்பற்ற பல்வேறு அரசியல் கட்சிகள் திட்டமிடுகின்றன.

அனைவருக்கும் உபேந்திரா மட்டுமே சிம்ம சொப்பனமாக இருக்க.. உபேந்திராவை தீர்த்துக் கட்ட அவரது மாமனாரே சதித் திட்டம் தீட்டுகிறார். இன்னொரு பக்கம் உபேந்திராவை சட்டப்படி கைது செய்து தண்டிக்க மத்திய அரசும் முடிவெடுக்கிறது.

இந்தச் சிக்கல்களில் இருந்து டான் உபேந்திரா தப்பித்தாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

நாயகன் உபேந்திரா ஆர்கேஷ்வரன்’ என்ற வேடத்தில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்திருக்கிறார். சாதாரணமானவராக இருப்பதைவிடவும் டானாக உருவெடு்தத பின்புதான் கொஞ்சமேனும் அவரை ரசிக்க முடிகிறது.

ஸ்டைல், நடை, உடை, பாவனை அனைத்துமே அனைத்து டான்களுக்கும் உரித்தானது என்பதால் எந்தவிதத்திலும் புதியதை இவர் காட்டவில்லை. பார்க்கும் காட்சிகளிலெல்லாம், இருக்கும் இடங்களிலெல்லாம் புகை பிடித்தபடியே இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. ‘ஓயாமல் சிகரெட் பிடிப்பவன்தான் டான்’ என்பதை எந்த மடையன் சொன்னான் என்று தெரியவில்லை.

நாயகன்-நாயகி காதல் காட்சிகளை வயது முதிர்ந்தவனின் காதல் போல காட்டியிருக்கிறார் இயக்குநர். இதனாலேயே நமக்குள் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது. சண்டை காட்சிகள், ஆவேசமான பேச்சுக்கள் என்று உபேந்திரா தனது முந்தைய சரக்குகளைத்தான் மீண்டும் இங்கே இறக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஸ்ரேயா அற்புதமான தனது நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்கிறார். இவருக்கும் அதிகமான காட்சிகளோ, அழுத்தமான காட்சிகளோ இல்லையென்பதால் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப் துவக்கத்திலேயே வந்து உபேந்திராவின் கேரக்டருக்கு பில்டப் கொடுத்திருக்கிறார். ஆனால் உபேந்திராவைவிடவும், கிச்சா சுதீப்பின் ஸ்டைல் ரசிக்கும்படி இருக்கிறது.

மேலும் கிளைமாக்ஸில் வரும் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் என்ட்ரி 2-ம் பாகத்திற்குக் கச்சிதமான சீன்தான். அந்தத் தோற்றமும், கெத்தும் படத்தின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

வழக்கமான அம்மாவாக சுதா நடித்திருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள். பலரும் மிரட்டிவிட்டு அடுத்த நொடியே மண்டையை போடுகிறார்கள். யாருக்கும் கவனம் ஈர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது சோகமான விஷயம்.

ஒளிப்பதிவாளர் ஏ.ஜே.ஷெட்டியின் கடும் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. அந்த ஒளிப்பதிவு மட்டுமே படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம்.

‘கே.ஜி.எஃப்’ படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர்தான், இந்தக் கப்ஜா’ படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஆனால் டானுக்குரிய பின்னணி இசை, நம் காதுகளை துளைத்தெடுக்கிறது. எதற்குதான் தீம் இசை போடுவதென்ற டெக்னிக் இல்லையா…?

பாடல்களில் ஷ்ரேயா நடனமாடும் அந்த ‘நமாமி நமாமி’ பாடல் கேட்கும் ரகம். பாடகியின் மயக்கும் குரல் வளமும், ஷ்ரேயா சரணின் அற்புதமான நடனமும் அந்தப் பாடல் காட்சியை மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. இடைவேளைக்குப் பின்பு வரும்  ‘பல் பல் பல்லாங்குழி’ பாடல்கூட சிறப்புதான்.

‘கப்ஜா’ என்றால் ‘கைப்பற்றுதல்’ என்று ஹிந்தியில் அர்த்தமாம். ஆனால் உண்மையில் நமது லோக்கல் தமிழில் நாம் அன்றாடம் பேசும் ‘கப்ஸா’வுடன் இந்தப் படம் ஒத்துப் போகிறது என்பதுதான் உண்மை. படம் முழுவதும் ‘கப்ஸா’தான்..!

இந்தக் ‘கப்ஜா’ படம் முழுக்க, முழுக்க ‘கே.ஜி.எஃப்’ படத்தின் சாயலில்தான் உருவாகியிருக்கிறது. படத்தின் துவக்கக் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ்வரை அதே பார்மெட்டில்தான் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால், படத்தில் ஒரு காட்சியில்கூட கே.ஜி.எஃப்.’ போல பிரமிப்பையோ, ஆச்சரியத்தையோ நமக்குள் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

படத்தின் கதை, திரைக்கதையில் சுவாரஸ்யமோ, உயிர்ப்போ இல்லாததால் ‘சவ சவ’ என்று படம் நகர்கிறது. நடித்திருக்கும் நடிகர், நடிகைகளும் கொஞ்சம்கூட ஈர்ப்பில்லாத நடிப்பைக் கொடுத்து நம்மை சோதிக்கிறார்கள்.

துப்பாக்கி சண்டை காட்சிகளில்  மோதலில் யார், யாரை கொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. இந்தக் குழப்பம் வரும் அளவுக்கு அடித்து ஆடியிருக்கிறார்கள் சண்டை இயக்குநர்கள்.

படத்திற்கு செட் அமைக்கப்பட்ட இடம் நிலக்கரி சுரங்கமாகத் தெரிகிறது. கலர் டோனில் கருப்பையும், சாம்பலையும் கலந்து புதுமாதிரியான கலரை திரையில் தெளித்திருக்கிறார்கள். இதுவும் படம் பார்ப்போரை மிகவும் அலுக்க வைத்துள்ளது.

வில்லன்கள் எண்ணிக்கையும் அளவுக்கதிகமாக இருக்க.. படம் முழுவதும் ஆளாளுக்கு சுட்டுக் கொண்டும், வெட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். இதனால் கதையும், திரைக்கதையுமே நமக்குப் புரியவில்லை. எவ்வளவு மேன் பவர் வேஸ்ட்..? பணம் வேஸ்ட்..?

இந்தக் கொடுமையின் கூடவே, இதன் இரண்டாம் பாகத்திற்கும் லீட் கொடுத்து அங்கே வேறொரு மிகப் பெரிய டானாக சிவ்ராஜ் குமார் தோன்றியிருக்கிறார்.

இந்த 2-ம் பாகத்தைப் பார்க்கும் அளவுக்கு தைரியத்தை நாம் இனிமேல் வளர்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது..!

RATING : 2 / 5

Our Score