full screen background image

தி ஸ்மைல் மேன் – சினிமா விமர்சனம்

தி ஸ்மைல் மேன் – சினிமா விமர்சனம்

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்களான ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் நடிப்பில் 150-வது படமாக உருவாகியுள்ளது இந்த ‘தி ஸ்மைல் மேன்'(The Smile Man) திரைப்படம்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ‘மெமரீஸ்’ படப் புகழ் ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் இப்படத்தை தயாரிக்க, தீபா சலீல் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ‘எட்டுத் தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் ‘மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக் கூட்டணி இப்படத்தை இயக்கியுள்ளனர். திரைக்கதை வசனத்தை கமலா ஆல்கெமிஸ் எழுதியுள்ளார்.

விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத் தொகுப்பு செய்திருக்கிறார். ‘க்’ படப் புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ரவி பாண்டியன் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்திருக்கிறார். மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் செய்ய, புரொடக்சன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றியிருக்கிறார். ஒலி வடிவமைப்பை சதிஷ் செய்ய, பத்திரிக்கை தொடர்பு பணிகளை சதீஷ் AIM குழுவினர் செய்துள்ளனர்.   

சிபிசிஐடி பிரிவின் கோயம்புத்தூர் பிரான்சில் சிதம்பரம் நெடுமாறன் என்ற சரத்குமாரும், சுரேஷ் மேனனும் ஒன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கோயம்புத்தூரில் தொடர்ச்சியாக படுகொலைகள் நடந்திருக்கின்றன.

ஒரு சைக்கோ கொலைகாரன் சில பேரை கொலை செய்து அவர்களுடைய வாயை கிழித்து அவர்கள் சிரிப்பதை போல வைத்து பயங்கரமான முறையில் கொடூரமாக கொலை செய்திருக்கிறான்.

அந்தக் கொலைகளை சரத்குமாரும், சுரேஷ் மேனனும் இணைந்து துப்பறிகிறார்கள். சில காரணங்களால் சரத்குமார் பாதியில் விலகிவிட சுரேஷ் மேனன் மட்டும் தனியே என்கொயரி செய்து அந்த சைக்கோ கொலையாளியை என்கவுண்டரில் கொலை  செய்துவிட்டதாக சொல்கிறார் அதற்கு பிறகு சுரேஷ் மகன் தன்னுடைய பணியில் இருந்து ரிட்டயர்மென்ட் வாங்குகிறார்.

ரிட்டையர்ட்மெண்ட் தினத்தன்று இரவு சரத்குமாரை தனியாக வெளியில் அழைத்துச் செல்கிறார் சுரேஷ் மேனன். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அங்கே துப்பாக்கியால் சுடப்படுகிறார் சுரேஷ் மேனன். அதே நேரத்தில் சரத்குமாரும் தலையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்படுகிறார். சுரேஷ் மேனனின் உடல் கிடைக்கவில்லை. இப்போதுவரையிலும் அவர் காணாமல் போனவர்கள் பட்டியலிலேயே இருக்கிறார்.

சரத்குமாரின் தலையில் பலமாக அடிபட்டதால் அவருடைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் ஒரு வருடத்தில் அவர் மொத்தமாக தன்னுடைய நினைவுகளை இழந்து விடுவார் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

இப்பொழுது ஓய்வில் இருக்கும் சரத்குமார் தன்னுடைய பணிக் காலத்தில் தான் சந்தித்த படுகொலைகள், சில சுவாரசியமான வழக்குகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிடுகிறார். ஆனால் அந்தப் புத்தகத்தில் ஸ்மைல் சைக்கோ கொலைகாரனை பற்றிய கதையை மட்டும் முடிக்காமல் கடைசி பக்கத்தை அப்படியே வெறுமையாக விட்டுவிடுகிறார்.

சுரேஷ் மேனனின் மகன் ஸ்ரீகுமார், இப்போது அதே சிபிசிஐடி கோவை அலுவலகத்தில் போலீஸ் அதிகாரியாக வேலைக்கு சேர்கிறார். இந்த நேரத்தில் திடீரென்று அந்த ஸ்மைல் சைக்கோ கொலைகாரன் மீண்டும் தன்னுடைய கொலைகளை ஆரம்பிக்கிறான்.

இந்தக் கொலைகளை துப்பறிவதற்காக மீண்டும் சரத்குமாரை அழைத்து அவரிடம் தலைமை பொறுப்பினை ஒப்படைக்கிறார்கள். சைக்கோ கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக தீவிரமாக தேடுதல் வேட்டையை தொடங்குகிறார்கள்.

அவர்கள் கடைசியாக கண்டுபிடித்தார்களா?… இல்லையா?.. இதில் சரத்குமாரின் பங்களிப்பு என்ன?.. சுரேஷ் மேனன் கதியென்ன?.. என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த கிரைம் படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகனாக சிதம்பரம் நெடுமாறனாக நடித்திருக்கும் சரத்குமாருக்கு இது 150 வது படம். பெருமைப்படத்தக்க படம்தான். மிக அமைதியான சரத்குமாரை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. ஆக்ரோஷமான சரத்குமார் இந்தப் படத்தில் இல்லவே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் மறதி தன்னை முழுமையாக விழுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் சரத்குமார் எப்படியாவது இந்த சைக்கோ கொலைகாரன் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக தனக்கு நேரும் அவமானங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு விசாரணை களத்தில் அவர் காட்டியிருக்கும் நடிப்பு இப்படத்திற்கு மிகப் பெரிய பலமாகவும், பாராட்டை பெரும் அளவுக்கும் இருக்கிறது.

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் உண்மையில் கொஞ்சம் மிரட்டி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய அறிமுக கட்சியே அதற்கு மிகச் சிறந்த உதாரணம். அவர் தனக்குள் இருக்கின்ற இன்னொரு முகத்தை அந்தச் சின்னப் பெண்ணிடம் காட்டும்போது பயமுறுத்தியிருக்கிறார்.

ஆனால், அவர் ஏன் இப்படி சைக்கோவாக மாறினார் என்பதற்கான அழுத்தமான திரைக்கதை இந்தப் படத்தில் இல்லாததால் அவருடைய நடிப்பை நாம் ஆகா.. ஓகோ… என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.

‘கீர்த்தனா’ என்ற போலீஸ் அதிகாரியான சிஜா ரோஸ் மிக அழகு அற்புதமான அழகு. அவருடைய முக பாவனைகள் ஒரு சில இடங்களில் மிகவும் ரசிக்கும்படியுள்ளது. அவருக்காகவே பிரேம் வைத்து கொஞ்சம் நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீகுமார், தனது அப்பாவைக் கண்டுபிடிக்கும் வேகத்தில் இந்த வழக்கில் துடிப்பைக் காட்டும் வகையில் நடித்துள்ளார். இனியா சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கிறார். அவருடைய மகளாக நடித்த அந்தச் சின்னப் பெண்ணும் கலையரசனுடன் சரிக்கு சரியாகப் பேசும் காட்சியில் நம் மனதைக் கொள்ளையடித்திருக்கிறார். ஆனாலும் இந்தச் சின்னப் பெண்ணை அந்த ஸ்மைல் கோலத்தில் பார்க்க சகிக்கவில்லை. இயக்குநர்கள் இந்தக் காட்சியையாவது வேறு வடிவத்தில் கொடுத்திருக்கலாம்.

இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், போலீஸ் உயரதிகாரி நடராஜன் மற்றும் பலரும் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் நாயகன் பின்னணி இசை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தை தன் பின்னணி இசையால் அழகாக நகர்த்தி இருக்கிறார் இசையமைப்பாளர் கவாஸ்கர் அவிநாஷ். பாடல்களும் கேட்கும் ரகம்தான்.

இது போன்ற சைக்கோ திரில்லர் படங்களுக்கு தேவையான ஒளிப்பதிவை விக்ரம் மோகன் கொடுத்திருக்கிறார். இரவு நேர காட்சிகள் எல்லாம் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளன அதிலும் சரத்குமார் வீட்டை தேடி கண்டுபிடிப்பதற்காக அலையும் காட்சியில் அவருக்கு திடீரென்று நினைவுகள் போய், போய் வருவதையும் அதனூடேயே அவர் காரில் பயணிக்கும் காட்சிகளை மனம் பதைபதைக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இது போன்ற படங்களில் படத் தொகுப்பும் மிக முக்கியமானது அந்த வகையில் இந்த படத்தின் படத் தொகுப்பாளரும் கச்சிதமாக தன்னுடைய கத்திரியை போட்டு இருக்கிறார். ரொம்பவும் கொடூரமாக கொடூரமாக காட்டி விடக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சின்ன சின்ன ஷார்ட்டுகளில் சென்றாலும் அந்த கொலையுண்டவர்களின் முகம் நம்மை பெரிதும் பயமுறுத்துகிறது இதையெல்லாம் சின்ன பிள்ளைகள் பார்க்க நேர்ந்தால் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.

மறதி நோயை மையமாக வைத்து… ஒரு காவல்துறை அதிகாரி அந்த நோயுடன் போராடி எப்படி கொலைகளைக் கண்டுபிடிக்கிறார் என்பதை சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதையோடு இயக்குநர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

முன்பே சொன்னதுபோல ஏன், எதனால், எப்படி.. அந்த சைக்கோத்தனம் அந்தக் கொலையாளிக்குள் நுழைந்தது என்பதை மட்டும் இயக்குநர்கள் தெளிவாகச் சொல்லியிருந்தால் நாமும் இந்தப் படத்துடன் இன்னமும் அதிகமாக ஒன்றியிருக்கலாம்..!

ஸ்மைல் மேன் – பயமுறுத்தியிருக்கிறார் சைக்கோ கொலைகாரர்.

RATING : 3.5 / 5

 

Our Score