ஜி.எஸ். சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ‘நாச்சியார்’, ‘லவ் டுடே’ புகழ் இவானா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார்.
இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
Don’t judge the book by its cover – ‘புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே’ என்பது உலகின் மிகச் சிறந்த பழமொழிகளில் ஒன்று. அதுதான் இப்படத்தின் மையக் கருத்து.
தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல்தான் இப்படத்தின் கதை.
பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.
இந்த ‘மதிமாறன்’ திரைப்படத்திற்கு இரண்டு மையங்கள். ஒன்று ஒருவரின் உடல் தோற்றம் மற்றும் உடல் ஊனத்தை முன்னிட்டு அவரைக் கிண்டல் செய்யும் பாடி சேமிங் தொடர்பானது, மற்றொன்று தொடர்ச்சியாக நடக்கும் சீரியல் கில்லர் தொடர்பானது. இந்த இரண்டு மையத்திற்குமான தொடர்பே இந்த மதிமாறன் திரைப்படம்.
நெடுமாறனான உயரம் குறைவான நபர் கதாபாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார். இவர்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘அயலான்” திரைப்படத்தில் வேற்று கிரகவாசியாக நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் செங்குட்டுவனுக்கு நடிப்பு இயல்பாக வருகிறது. அன்பு, சோகம், ஏமாற்றம், கோபம், புறக்கணிப்பு, விரக்தி, நட்பு, காதல் என எல்லாவிதமான உணர்வுகளையும் செவ்வனே கடத்துகிறார் வெங்கட் செங்குட்டுவன். தன்னோடு இரட்டையராகப் பிறந்த தன் அக்காள் மதி மீது மாறாத அன்பும் பாசமும் கொள்ளும் இடத்திலும், தன் தகப்பனின் போஸ்ட்மேன் வேலையை நேசிக்கும் இடத்திலும், தன் தாய் தந்தையரைக் காப்பாற்ற பரிதவிக்கும் இடத்திலும் கண்கலங்க வைக்கிறார்.
தான் சிறப்பாக செய்த விசயத்திற்கு பாராட்டும்போதுகூட தன் உடல்குறையை சுட்டிக் காட்டிப் பாராட்டுவதைக் கேட்டு முதலில் விரக்தியடைவதும், பின்பு இவர்கள் இப்படித்தான் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களை புறக்கணிக்கத் துவங்கும் இடத்திலும் நடிப்பிலும் நம் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.
தன் புத்திசாலித்தனத்தால் போலீஸ்காரர்களுக்கு உதவுவதும், தன்னை குள்ளன் என்று அழைத்த போலீஸை திருப்பித் தாக்குவதும் என படம் பெரும்பாலான சமயங்களில் வெங்கட்டின் தோள்களிலேயே பயணிக்கிறது. அவரும் தன் பொறுப்பை உணர்ந்து அந்தக் கதாபாத்திரத்திற்கும் அதன் உணர்வுகளுக்கும் கணம் சேர்த்து இருக்கிறார்.
நெடுமாறனின் இரட்டைச் சகோதரி அக்கா மதியாக இவானா. சிறு வயதில் தன் தம்பியை உயரம் குறைவு என்று கிண்டல் செய்வதை பொறுக்க முடியாமல் அப்படிக் கிண்டல் செய்பவர்களை தாக்கச் சொல்லி தண்டிக்கும் பாசக்கார அக்கா கதாபாத்திரம். கண்ணாடி பார்த்து பவுடர் பூசுவதால்கூட தன் தம்பியின் மனம் நோகக் கூடும் என்று கருதி அதையும் தவிர்க்கும் கதாபாத்திரம். அக்கதாபாத்திரத்தில் இவானா சிறப்பாக நடித்திருக்கிறார்.
தன் உயரத்தை எண்ணி ஏங்கி சாதாரண மனிதர்கள் செய்யும் சிறு, சிறு விசயங்களைக்கூட தன் வாழ்வில் செய்ய தயங்கி மருண்டி நிற்கும் தம்பியை தட்டிக் கொடுத்து முன்னோக்கிச் செல்ல ஊக்கம் கொடுக்கும் இடத்தில் இவானாவின் நடிப்பு மிளிர்கிறது. அப்படிப்பட்ட இவானாவின் மதி கதாபாத்திரம் வாழ்க்கையின் சூழலால் ஒரு கட்டத்தில் தன் மீது கோபம் கொண்டிருக்கும் தம்பி தன்னோடு பேச மாட்டானா..? என்று ஏங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு கண்கலங்கி நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறார்.
நெடுமாறன் மற்றும் மதி ஆகியோரின் தகப்பனாக, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த போஸ்ட்மேன் சுந்தரமாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். அவர் பேசியிருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் வட்டார வழக்கைப் பார்க்கும்போது அவரின் சொந்த ஊரே திருநெல்வேலிதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதிலும் மகளை காணவில்லை என்று தேடும்போது அழுதுகொண்டே தன் ப்ளாஷ்பேக் சொல்லும் இடத்தில் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை மீண்டும் நிருபிக்கிறார்.
நெடுமாறனின் கல்லூரி காலத் தோழி பிரபாவாக நடித்திருக்கும் ஆராத்யாவிற்கு போலீஸ் விசாரணை படலங்களைவிட கல்லூரி காலக் காதல் படலங்களில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு. அதை கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார். பார்வைக்கும் அழகாகவே இருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து வாட்ச்மேன் ஆக வரும் பவா செல்லத்துரை, போலீஸ் கமிஷனர் கட்டபொம்மனாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், சுதர்ஷனாகவே நடித்திருக்கும் சுதர்ஷன் ஜிவிந்த், சந்திரன் மாணிக்கமாக வரும் பிரவீண் குமார் என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பாடி ஷேமிங் தான் படத்தின் ஒரு முக்கிய மையம் என்பதால், படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரைக்கும் ஊர் மக்கள், பள்ளிக்கூட வாத்தியார், பள்ளிக்கூட நண்பர்கள், பஸ் கண்டக்டர், கல்லூரி நண்பர்கள், கல்லூரி பேராசிரியர், போலீஸ் இன்ஸ்பெக்டர், தபால் நிலைய ஊழியர்கள் என அனைவருமே நாயகன் நெடுமாறனை உருவ கேலி செய்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அவர்கள் கேலி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் எதாவது சாதித்துக் காட்டு, என்று சொல்வதற்கு, பதிலாக நெடுமாறன், “நீங்கள் என்ன சார் சாதித்தீர்கள்..?” என்று எதிர்கேள்வி கேட்கும் இடம் தரம்.
அது போல் இது போன்ற உருவக் குறைபாடும் ஊனக் குறைபாடும் இருப்பவர்கள் ஒரு சராசரி மனிதனாக மதிக்கப்பட வேண்டுமென்றால்கூட அவர்கள் சாதித்திருக்க வேண்டும் என்று சக சமூகம் எதிர்பார்க்கும் குரூரத்தின் கொடுமையை கேள்வி கேட்பது இப்படத்தின் உயிர்நாடியாக திகழ்கிறது. மேலும், ஊனம் என்பது உடலில் இருப்பது பிரச்சனை இல்லை… நம் மனதில் இருப்பதுதான் மிகப் பெரும் பிரச்சனை என்பதையும் இத்திரைப்படம் பதிவு செய்கிறது.
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை ஓகே ரகம். காட்சிகளின் பலத்தை கூட்டவும் செய்யாமல் குறைக்கவும் செய்யாமல் கதையோடு சேர்ந்து பயணித்துக் காணாமல் போகிறது. பர்வேஷின் ஒளிப்பதிவில் சென்னை மற்றும் திருநெல்வேலியின் சிவந்திப்பட்டி இரண்டும் வெவ்வேறு நிறங்களில் மிளிர்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங்கில் தொய்வேதும் இல்லை.
இதுவரையிலும் சொல்லப்படாத, சொல்லப்பட வேண்டிய மாற்றுத் திறனாளிகளின் மன வலி என்கின்ற ரீதியில் இக்கதையை அணுகும்போது இந்த ‘மதிமாறன்’ மிக முக்கியமான படைப்பாகத் தெரிகிறது. அந்த வலியை திரையிலும், திரைக்கதையிலும் கொண்டு வந்த இடத்தில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். அதுபோல் நடிகர், நடிகைகள் தேர்வு மற்றும் அவர்களிடம் யதார்த்தமான நடிப்பை வாங்கிய விதம் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்குகிறார் இயக்குநர்.
ஆனாலும் இன்றைய காலச்சூழலில் நாம் வாழும் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றுத் திறனாளிகளை கடக்கிறோம். கவனிக்கிறோம். அவர்களை அவமரியாதை செய்வதாகவோ, கிண்டல் செய்வதாக நடக்கும் நிகழ்வுகள் மிக மிகக் குறைவாக இருக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் அவர்களுக்கு சிரத்தையெடுத்து உதவ முன்வரும் காட்சிகள்தான் பெருவாரியாக காணக் கிடைக்கிறது.
அப்படி இருக்க ஒரு இடம் விடாமல் போகும் இடங்களில் எல்லாம் நாயகனை கிண்டல் செய்யும் ஆட்கள் இருப்பது சற்று நெருடலாகவும், மிகையாகவும், யதார்த்தமற்றதாகவும் இருக்கிறது. அதுபோல் திரைப்படத்தின் மற்றொரு மையமான தொடர் கொலைகளுக்கும், பாடி ஷேமிங் கான்செப்டிற்குமான தொடர்பு சரியான பிணைப்பாக இல்லாமல், தாமரை இலை நீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது.
ஒரு மாற்றுத் திறனாளி தனது திறமையைக் காட்டித்தான் மற்றவர்களிடம் அங்கீகாரம் பெற முடியும் என்று சொல்வதே ஒரு சமூகக் குற்றம். அதை இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தில் மையமாக்கியது படத்தை வேறொரு பாதையில் கொண்டு போய், வேறொரு கோணத்தில் கொண்டு போய் முடித்திருக்கிறது.
மேலும் நெடுமாறன் உதவும் வழக்குகளில், விசாரணை என்பது சரியான பாதையில் நடந்திருந்தாலே குற்றவாளிகள் எளிதாக கைது செய்யப்பட்டு இருப்பார்கள். உதாரணத்திற்கு அப்பார்ட்மெண்ட் தொடர் கொலைகளில் பெண்கள் நெற்றியில் ஆணி அடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். யார் இது போல் ஆணி அடிப்பார்கள் என்கின்ற கேள்வியைக் கேட்டாலே விசாரணை வளையத்திற்குள் குற்றவாளி வந்துவிடுகிறான். இப்படி அந்த வழக்கிற்கு தேவையான, எளிமையான கேள்விகளைக்கூட விசாரணையில் கேட்காமல் அதிகாரிகள் எப்படி கோட்டைவிட்டார்கள் என்கின்ற கேள்வியும் மேலெழுவதால் படத்தின் முடிவில் நெடுமாறனின் புத்திசாலித்தனம் வலிந்து திணிக்கப்பட்ட திரைக்கதையாகவே இருக்கிறது.
மொத்தத்தில் இந்த ‘மதிமாறன்’ பேசியிருக்கும் விசயங்கள் யாவும், மதி நுட்பம் வாய்ந்த நமது சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் என்பதால் அதைத் தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் அதிலிருக்கும் மெல்லிய செயற்கைத்தனம், முதற் பாதிக்கும், இரண்டாம் பாதிக்குமான எட்டாத தொடர்பு போன்ற பலவீனங்களால் படம் சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக சொல்லவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை..!
மதிப்பெண் : 4 / 5









