full screen background image

புரட்சிக் கலைஞர் – கேப்டன் விஜயகாந்த்தின் வாழ்க்கை வரலாறு

புரட்சிக் கலைஞர் – கேப்டன் விஜயகாந்த்தின் வாழ்க்கை வரலாறு

ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த விஜயகாந்த், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

சிறு வயது முதல் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்ததால், பார்த்த சினிமாக்களை நண்பர்களிடம் காட்சிவாரியாக பேசி மகிழ்வார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்சன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அந்தப் படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார்.

சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் நண்பர்கள் வடத்தை அதிகமாக்கியது. நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மகன் படிக்கவில்லை என்றதும் கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை விஜயகாந்தை கவனித்துக் கொள்ள வைத்தார், அவரது தந்தை.

நண்பர்கள் கூடி பேசும் கட்டிடத்துக்கு மேலே சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகம் இருந்தது. மதுரை மாவட்டத்தில் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மர்சுக் என்பவர், விஜயகாந்துக்கும், அவரது நண்பர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் ஆட்டுக்கார அலமேலு படத்தை மதுரை ஏரியாவுக்கு வாங்கி வெளியிட்ட போது, அந்த மாவட்டம் முழுவதும் அந்தப் படம் வெளியான திரையரங்குகளுக்கு ஆடு அழைத்து சென்று விளம்பரம் செய்ய உதவியாக இருந்தார், விஜயகாந்த்.

இந்த னியாளியில் தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்கிடம் தனது எண்ணத்தை தெரிவித்திருக்கிறார், விஜயகாந்த்.

விஜயகாந்தை சென்னைக்கு வரவழைத்து இயக்குநர் பி. மாதவனிடம், இவர் என் தம்பி மாதிரி என்று அறிமுகப்படுத்தி, விஜயகாந்துக்கு நடிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

அப்போது இயக்குநர் பி. மாதவன் என் கேள்விக்கு என்ன பதில் என்கிற படத்தை இயக்கும் வேலையில் இருந்தார். அந்தப் படத்தை மதுரை ஏரியாவிற்கு சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக் வாங்கி இருந்தார்.

ரஜினியை போன்று முடிவேட்டும், ஸ்டைலுமாக இருந்த விஜயகாந்தை பார்த்ததும், இயக்குநர் பி.மாதவனுக்கு பிடித்துவிட்டதாம். அந்தப் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க வைத்துவிடலாம் என்று தெரிவித்தாராம்.

அதன் பிறகு சாலிகிராமத்தில் இருந்த சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகத்தில் தாங்கியவாறு பல கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி சென்றார், விஜயகாந்த்.

சுதாகர், ராதிகா நடிப்பில் இனிக்கும் இளமை படத்தை தொடங்கினார், இயக்குநர் எம்.ஏ.காஜா. அவர் தனது நெருங்கிய நண்பர் என்பதால், அவரிடம் விஜயகாந்துக்கு சிபாரிசு செய்து, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

விஜயகாந்தை நேரில் வரவழைத்துப் பார்த்த எம்.ஏ.காஜா, தனது இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை விஜயகாந்துக்கு வாங்கினார்.

பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயகாந்த, அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அகல்விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான்.

சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு முதலில் பிரபுவிடம் கதை சொன்ன இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இது ஆக்சன் கதையாக இருக்கே என்று பிரபு தயங்கியதும், பிறகு நிறைய புதுமுகங்களை அழைத்துப் பார்த்தார்கள் யாரும் தேறவில்லை.

ஒரு நாள் உதவி இயக்குனர்களுடன் வாகினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயகாந்தின் நெருப்பு கண்கள் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்துவிட்டது. உடனே அவரை பிடிக்க சொல்லி உதவியாளரை விரட்டி இருக்கிறார். அவர்கள் விஜயகாந்தை அழைத்து வந்தார்கள்.

நாங்கள் ஒரு படம் எடுக்க இருக்கிறோம். நீங்கள் நடிக்கிறீங்களா என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்க, நான் நடிக்கத்தான் டிரய்ப்பன்னிக்கிட்டு இருக்கேன். இப்போது ஒரு படத்தில் நடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்லி தனது பெயர் விஜயராஜ் என்று கூறி இருக்கிறார்.

அப்போது விஜயகாந்துக்கு விஜயராஜ் என்று பெயர். அதன் பிறகு தொடங்கியதுதான் சட்டம் ஒரு இருட்டறை படம்.

தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க இயக்கினர், எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவப்பு மல்லி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.

வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம்’, ‘ஊமை விழிகள்’, ‘கூலிக்காரன்’ , ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘பூந்தோட்ட காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ ‘புலன் விசாரணை’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.

1990-ம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார்.

ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்தது.

விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான திரைக்கதை அம்சம், தேசப்பற்று படங்களாகவும் இருந்தது.

இவர் இரட்டை கதாபாத்திரங்கள் மற்றும் காவலர், ராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் ‘புரட்சி கலைஞர்’ என்னும் பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரையுலக ரசிகர்கள் ‘கேப்டன்’ என்றே அழைக்கின்றனர்.

இவரது 100 ஆவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்திற்கு பின்னர் இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி – தமிழக அரசு விஜயகாந்துக்கு எம்.ஜி.ஆர். விருது (1994), கலைமாமணி விருது (2001),சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009) ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் இந்திய அரசால் ‘சிறந்த குடிமகனுக்கான’ விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

நடிகர் விஜயகாந்த் தமிழ் திரைப்படங்களில் நடிகனாக மட்டுமில்லாமல், தமிழக திரைப்பட சங்கம் தேர்தல்களில் போட்டியிட்டு 1999-ல் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை இயக்குநர் அமைப்புடன் இணைந்து நெய்வேலியில் நடத்தினார்.

தென்னிந்திய, அகில இந்திய’ என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982-இல் தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்’ எனவும் பெயர் மாற்றம் செய்தார்.

2000 -ஆம் ஆண்டு பிப்ரவரி 12-இல் ரசிகர் மன்றத்துக்கென தனிக் கொடியை அறிமுகம் செய்தார்.

அதைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து 2005 செப்டம்பர் 14-இல் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற பெயரில் தனக்கென ஒரு கட்சியினை தொடங்கி புகழ் பெற்றார்.

இவர் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. பாமக பலமாக உள்ள விருத்தாசலம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

2011-இல் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவோடு விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ரிஷிவந்தியம் தொகுதியிலில் விஜயகாந்தும், அவரோடு 41 தேமுதிக உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டப் பேரவைக்குச் சென்றனர்.

பின்னர் சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டு,துணிவான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே பால் விலை உயர்வு தொடர்பாகவும், இடைத்தேர்தல் தொடர்பாகவும் அனல் பரப்பும் விவாதம் நடைபெற்றது. அதோடு,அதிமுகவுடனான கூட்டணியும் முறிவுற்றது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சார்பில் விஜயகாந்த் முதல்வராக வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தலைச் சந்தித்தார். ஆனால்,அந்தத் தேர்தலில் விஜயகாந்த் உள்பட கூட்டணிக் கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர்.

2021-இல் தேர்தலில் தேமுதிக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.இந்தத் தேர்தலுக்கு முன்பிருந்தே விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று டிசம்பர் 28, வியாழக்கிழமை காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.

Our Score