மதகஜராஜா மார்ச் 11-ல் ரிலீஸ்..???

மதகஜராஜா மார்ச் 11-ல் ரிலீஸ்..???

பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த நடிகர் விஷாலின் ‘மதகஜராஜா’ வரும் மார்ச் 11-ம் தேதியன்று வெளியாக இருப்பதாக செய்திகள் பரவுகின்றன.

இந்தப் படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சோனு சூட், மணிவண்ணன், சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். நடிகை சதா செமத்தியான ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார். மறைந்த இயக்குநர் மணிவண்ணன் நடித்து கடைசியாக வெளிவரவிருக்கும் படம் இதுதான்.

விஜய் ஆண்ட்டனி இசையமைக்க.. ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவின்-ஸ்ரீகாந்த் இருவரும் எடிட்டிங் செய்திருக்கிறார்கள். இயக்குநர் சுந்தர் சி. எழுதி, இயக்கியிருக்கிறார்.

ஜெமினி லேப் தயாரித்த இந்தப் படம் அந்த நிறுவனம் வெளியிட்ட முந்தைய படங்களின் நஷ்டக் கணக்கினால் சிக்கலுக்குள்ளானது. முந்தைய படங்களின் நஷ்டத்தை ஈடுகட்டினால்தான் இந்தப் படத்தை வெளியிட முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும், விநியோகஸ்தர்கள் சங்கத்தினரும் ஒன்றாக சேர்ந்து கொடி பிடிக்க படத்தை கிடப்பில் போட்டார் தயாரிப்பாளர்.

2013 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் முடிவுக்கு வராமல் முடங்கியது.. பின்பு அதே ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி ரிலீஸ் என்றார்கள். இதுவும் வேலைக்கு ஆகாமல் போக.. படத்தின் ஹீரோவான விஷால், தயாரிப்பாளரான ஜெமினி கலர் லேப்பிடம் இருந்து தானே இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய முன் வந்தார்.

ஆனால் அப்போதும் ஜெமினி லேப் கொடுக்க வேண்டிய பணம் என்று சொல்லி சில கோடிகளை விநியோகஸ்தர்கள் விஷாலிடம் கேட்க.. ஒரு கோடி ரூபாய்வரைக்கும் படத்திற்கு விளம்பரம் செய்த நிலையிலும் படத்தை ஒத்திப் போட்டார் விஷால்.

பின்பு நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓ. பி.டி.செல்வகுமார் இதனை “நானே வாங்கி வெளியிடுகிறேன்..” என்று சொல்லி களமிறங்கினார். 2014 மார்ச்-7-ல் படம் ரிலீஸ் என்றார்கள். கடைசியில் இதுவும் புஸ்ஸானது.

இதற்கிடையில் ஜெமினி லேப்பின் அதிபர் பாண்டிச்சேரி அருகேயுள்ள ஏனாம் கடற்கரையில் தற்கொலை செய்து கொள்ள, படம் முற்றிலுமாக முடங்கியது. இதுவரையில் பேச்சே இல்லாமல் இருந்த நிலையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்வது பற்றி சமீபத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.

இதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளதால் வரும் மார்ச் 11-ம் தேதியன்று இந்த ‘மதகஜராஜா’வை திரைக்கு கொண்டு வரும் வேலைகள் தற்போது ஜரூராக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 வருடங்கள் கழித்து வந்தாலும் ‘அரண்மனை’களின் தொடர் வெற்றியில் மிதக்கும் இயக்குநர் சுந்தர்.சி. மற்றும் ‘கதகளி’யின் பாராட்டில் இருக்கும் விஷால், ‘தாரை தப்பட்டை’யில் கிடைத்த பெயரில் பூரித்திருக்கும் வரலட்சுமி.. காணாமல் போன எபெக்ட்டில் காத்திருக்கும் அஞ்சலி.. என்று பலவித ரூபங்களில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நிறையவே இருப்பதால், இந்தப் படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்போது ஏகத்திற்கும் வரவேற்பு கிட்டியுள்ளதாம்..!

வரட்டும்.. வரட்டும்..! லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாய் வரட்டுமே..!

Our Score