பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா நடிப்பில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ‘மசாலா படம்’ திரைப்படம் வேகமாக தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியூசிக் நிறுவனம் இந்த ‘மசாலா பட’த்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்திருக்கிறார்.
“ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையை பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் இசை நன்றாக வந்துள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் டீசரை பார்த்தேன். இந்த இளம் கூட்டணியின் தயாரிப்பு எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் லஹரி மியூசிக் நிறுவனம் ஆடியோ உரிமைகளை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மசாலா படம்’ மூலம் தமிழ் இசையுலகில் மீண்டும் வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் லஹரி மியூசிக் நிறுவனத்தின் இயக்குனர் சந்துரு மனோகரன்.
1990-களின் இறுதியில் இசை உரிமைகள் பெறுவதில் முதன்மை இடத்தில் இருந்த லஹரி நிறுவனம், தென்னிந்திய திரைப்பட உலகில் நல்ல இசையுள்ள படங்களின் இசை உரிமையைப் பெற்று மீண்டும் தங்கள் பாரம்பரியத்தின் வழியை தொடர்ந்து வருகின்றனர்.