மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை சுரபி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.மோகன் தயாரித்துள்ளார்.

படத்தில் ஆரவ் நாயகனாக நடித்திருக்கிறார். காவ்யா தாப்பர் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் ராதிகா சரத்குமார், ரோகிணி, நாசர், ஹரீஷ் பெரடி, நிகிஷா படேல், ஆதித்யா, தேவதர்ஷினி, ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், முனீஷ்காந்த், சாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், சாம்ஸ், மதன்பாப் மற்றும் சில முக்கிய நடிகர், நடிகையரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு - கே.வி.குகன், படத் தொகுப்பு - கோபி கிருஷ்ணா, இசை - சைமன் கே.கிங், கலை இயக்கம் – ஏ.ஆர்.மோகன், நடன இயக்கம் – கல்யாண், தினேஷ், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், பிரதீப் தினேஷ், விக்கி, ஆடை வடிவமைப்பு – திருமதி நித்யா, பாடல்கள் – தமயந்தி, கு.கார்த்திக், ரோகேஷ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன், நிர்வாகத் தயாரிப்பு – கே.பி.பஷீர் அஹமத், தயாரிப்பு நிறுவனம் – சுரபி பிலிம்ஸ், தயாரிப்பாளர் – எஸ்.மோகன், எழுத்து-இயக்கம் – சரண்.

கமல் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.ஸின் வெற்றி இன்றைக்கும் தமிழகத்து ரசிகர்கள் அனைவருக்கும் நினைவிருக்கிறது. அதே நினைப்புடனேயே இந்தப் படத்துக்கு ஓடி வந்து ஆதரவு தருவார்கள் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் சரண்.

பிக்பாஸின் மூலமாகவே பரவலாக அறியப்பட்ட ஆரவ்வை முழு நீள கதாநாயகனாக்கும் தைரியசாலி சரணுக்கு அதே தைரியத்துடன் வேறு கதை செய்ய விருப்பமில்லை போலும்.

லோக்கல் தாதாவாக அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வெட்டுக் குத்து, கொலை என்று சகஜமாக செய்து வருகிறார் மார்க்கெட் ராஜா என்னும் ஆரவ். இவருடைய தாயார் சுந்தரி பாய் என்னும் ராதிகா. மகனின் பெயரைச் சொல்லி கல்லா கட்டும் நல்ல தாய். இதனாலேயே தாயை கிஞ்சித்தும் மதிக்காதவராக இருக்கிறார் ஆரவ். நேரில் பார்த்தால் பெத்த அம்மாவையே தூக்கிப் போட்டு மிதிக்கிறார்.

ஒரு மருத்துவக் கல்லூரிக்குள் ஒருவன் கொலை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தபோது ஆரவ் குறுக்கிட்டு தடுத்து அவனைக் காப்பாற்றுகிறார். இதனைப் பார்த்தவுடன் வழக்கம்போல அதே மருத்துவக் கல்லூரியில் மாணவியாக இருக்கும் நாயகி காவ்யா தாபருக்கு சொல்ல முடியாத காதல் ஊற்றெடுக்கிறது. இவருடைய தந்தையான நாசர்தான் கல்லூரியின் டீன். காவ்யாவை அதே கல்லூரியில் பயிலும் விஹான் ஒருதலையாய் காதலிக்கிறான்.

மார்க்கெட் ராஜா ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகரான சாயாஜி ஷிண்டேவின் கையாளாக இருக்கிறார். இதனால் அதே கட்சியின் சார்பில் அமைச்சராக இருக்கும்  ஹரீஷ் பெரடிக்கு எதிரியாக இருக்கிறார் மார்க்கெட் ராஜா. ஒவ்வொரு விஷயத்திலும் மார்க்கெட் ராஜா சாயாஜியின் துணையோடு குறுக்கே வருவதால் மார்க்கெட் ராஜாவை தீர்த்துக் கட்ட உத்தரவிடுகிறார் ஹரீஷ்.

இதே நேரம் மார்க்கெட் ராஜாவும் இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கடத்தி வந்து போலீஸ் மேலிடத்தை மிரட்டுகிறார். இதனால் கோபமடையும் போலீஸ் உயரதிகாரிகள் மார்க்கெட் ராஜாவை என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்கள்.

இந்த என்கவுண்ட்டரின்போது எதிர்பாராதவிதமாக விஹான் நடுவில் மாட்டிக் கொண்டு அநியாயமாய் உயிரை இழக்கிறான். ஆனால் அவன் உயிரைவிட்ட உடனேயே அவனது ஆவி அங்கே இருக்கும் மார்க்கெட் ராஜாவின் உடலில் புகுந்துவிடுகிறது.

உடல் மார்க்கெட் ராஜாதான். ஆனால் உடம்பை வழி நடத்தும் மனசு விஹானுடையது என்பதால் தான் ஒரு ரவுடி என்பதையே மறந்துபோய் சாத்வீகமாகிறார் மார்க்கெட் ராஜா.

இனி என்ன ஆகிறது என்பதுதான் இந்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் திரைக்கதை.

அட்டகாசம், ஜெமினி, கமல் நடித்த வசூல்ராஜா ஆகிய படங்களிலெல்லாம் நாயகர்களுக்காக வைத்திருந்த ஸ்கோப்பும், பில்டப்பும் ஆரவ்விடம் சுத்தமாக எடுபடவில்லை. அவருக்கேற்ற உடலுக்கு தாதா கேரக்டர் ஓகேதான் என்றாலும் தாதாக்களுக்கே உரித்தான கெத்து வரவில்லை. இன்னும் கொஞ்சம் வயதானால்தான் அந்தப் போஸ்ட்டிங்கிற்கு இவர் ஒத்து வருவார்.

இருந்தும் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை செய்து காண்பித்திருக்கிறார். நடிப்பில் தனி ஈர்ப்போ, ஸ்பெஷலோ எதுவுமில்லை என்பதால் நாயகன்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பேக்டிராப்பாக ஆகிவிட்டது.

ராதிகா சரத்குமார் எப்படி இந்தக் கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை. அவர் செய்யக் கூடாதா கேரக்டர். ரவுடிக்கு தாய்.. சுருட்டு பிடிப்பது.. என்றெல்லாம் வித்தியாசம் காட்டினாலும் பெத்த தாயை அடிக்கும் மகன் கேரக்டர் ஸ்கெட்ச்சில் ராதிகா இருப்பது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. தவறான கேரக்டர் ஸ்கெட்ச்சில் மாட்டிக் கொண்டிருக்கிறார் ராதிகா.

உண்மையில் நடித்திருப்பவர்கள் சாயாஜி ஷிண்டேயும், ஹரீஷ் பெராடியும்தான். ஹரீஷ் ஆரவ்வை சந்திக்க மொட்டை மாடிக்கு வரும் காட்சியிலும், தனது கட்சிக்காரர்களிடமிருந்தே நிகிஷா பட்டேலை காப்பாற்ற அவர் படும்பாடும் சிறப்பான நடிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.

இதேபோல் சாயாஜி ஷிண்டே.. பாசத்தைக் கொட்டி ஆரவ்வை தட்டிக் கொடுப்பதும், அதே ஆரவ் டாக்குமெண்ட்ஸ் இல்லை என்றதும் கொதித்தெழுந்து மிரட்டுவதும்.. சமாளிப்பதுமாய் அந்தக் காட்சிகளில் ஜமாய்த்திருக்கிறார்.

நாயகி காவ்யா தாபருக்கு இது முதல் படம். அதிகமாக வேலையில்லை. டப்பிங் வாய்ஸும் ஒட்டாமல் போகிறது.. இன்னொரு நாயகியான நிகிஷா பட்டேல் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு பாடலுக்கு ஆடி படத்தின் பிற்பாதியில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்புகிறார்.

ஆரவ்வின் கூடவே வரும் சாம்ஸூம், ஆதித்யா மேனனும் கொஞ்சம் புன்னகைக்க வைத்திருக்கிறார்கள். சைலண்ட்டாக மெளன பாஷையில் பேசி கண்ணோரம் கண்ணீரை வரவழைத்திருக்கிறார் நடிகை ரோகிணி. விஹானின் அம்மாவாக வாய் பேச முடியாத ஊமை கேரக்டரில் அப்படியே அச்சு அசலாக நடித்திருக்கிறார் ரோகிணி. பாராட்டுக்கள். படத்திலேயே பாராட்டும்படி இருந்தது இந்த போர்ஷன்தான்.

திருமண மேடையில் இருந்த முனீஸ்காந்த்-தேவதர்ஷிணி தம்பதியினரை தூக்கி வந்து பேயை விரட்ட வைக்கும் காட்சிகள் சுவையானவை என்றாலும் எதிர்பார்த்த கூடுதல் சுவாரஸ்யத்தைத் தரவில்லை. இவர்களையும் பாதியோடு அனுப்பி விட்டார் இயக்குநர்.

கடைசியாக வரும் மாந்திரீகன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், அவருடன் இடும் சண்டை காட்சியும் அழகு. படமாக்கியிருக்கம்விதம் பாராட்டுக்குரியது. ஒரேயொரு முத்தத்திலேயே விஹானின் ஆவி விலகிப் போக ஆரவ்வுக்கு மீண்டும் தன் நினைவு வர.. இப்படி கடைசி நிமிடத்தில் கதை திரும்புவது சுவையான திருப்பம்தான் என்றாலும் இதைவிட அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும்.

கே.வி.குகனின் ஒளிப்பதிவு படம் முழுவதும் கண்ணைக் கட்டுகிறது. பாடல் காட்சிகளில் அழகு தெரிகிறது. தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் காட்சிகளை நறுக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பிற்பாதியில் சில காட்சிகளினால் கொட்டாவிதான் வருகிறது.

சைமன் கே.கிங்கின் இசை. பாடல்கள் அனைத்துமே பரவாயில்லை ரகம். இந்தக் காலத்தில் யார் பாடல் வரிகளை கூர்ந்து கவனிக்கிறார்கள்..?

கமலின் ‘வசூல் ராஜா’வில் படம் நெடுகிலும் இருந்த நகைச்சுவை இந்தப் படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங். ஒரேயொரு இடத்தில்.. “சுந்தரிபாய்க்கு வளைகாப்பு…” என்னும் சொல்லுமிடத்தில் மட்டுமே சிரிப்பு வந்திருக்கிறது.

“வீரன் ஒருவனின் உடம்பில் கோழை ஒருவனின் ஆவி புகுவதால் ஏற்படும் பிரச்சினைகள்தான் படம்” என்னும் ஒற்றை வரி கதையில் எத்தனையோ திரைக்கதைகளை எழுதியிருக்கலாம்.

ஆனால் இயக்குநர் சரண் இந்த விஷயத்தில் கோட்டைவிட்டதால் இந்தப் படத்தை அதிகமாக ரசிக்க முடியவில்லை. சிறப்பு என்றும் சொல்ல முடியவில்லை..!

இயக்குநர் சரண் அடுத்தப் படத்தில் வெற்றியைக் கவர்வார் என்று நம்புவோம்..!