அழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்

அழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை வள்ளி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வள்ளியம்மை அழகப்பன் தயாரித்துள்ளார்.

படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகைகள் அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரி ராவ், நடிகர்கள் மோகன்ராம், நாசர், விஜய் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜேஷ் கே.நாயர், இசை – அரவிந்த் சித்தார்த், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், இணை தயாரிப்பு – ஈஸ்வரி ராவ், தேவசின்ஹா, எழுத்து, இயக்கம் – எம்.ஆர்.பாரதி. நேரம் – 1 மணி நேரம் 42 நிமிடங்கள்.

1979-ம் வருடத்தில் பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த ‘அழியாத கோலங்கள்’ திரைப்படம், திரைப்பட விமர்சகர்களுக்கு இன்றளவும் மிகவும் பிடித்த திரைப்படம்.

அத்திரைப்படத்தின் தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு… முற்றிலும் வேறுபட்ட ஒரு சிறிய கதைக் கருவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், பதிப்பாளருமான எம்.ஆர்.பாரதி.

கெளரி சங்கர் என்னும் பிரகாஷ்ராஜ் நாடறிந்த புகழ் பெற்ற எழுத்தாளர்.
இவருடைய மனைவி சீதா என்னும் ரேவதி. பிரகாஷ்ராஜ் சுகர் மற்றும் பி.பி. பேஷண்ட். மனைவி சீதா அவரை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்கிறார்.

இந்த நிலையில் கெளரி சங்கர் எழுதிய ‘மோகனப் புன்னகை’ என்னும் நாவலுக்கு அந்த வருடத்திய ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லிக்குச் சென்று அந்தப் பரிசை வாங்குகிறார்.

பரிசு வாங்கிய கையோடு மனைவியிடம்கூட சொல்லிக் கொள்ளாமல் விமானத்தில் உடனடியாக சென்னைக்கு பறந்து வருகிறார் கெளரி சங்கர். வந்தவர் விமான நிலையத்தில் இருந்து தன் வீட்டுக்குக் கூட போகாமல், சென்னையிலேயே இருக்கும் தன்னுடைய நண்பியான ‘மோகனா’ என்னும் அர்ச்சனாவின் வீட்டுக்குச் செல்கிறார்.

அவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். காதலித்தவர்கள். ஆனால் இவர்களின் காதல் கை கூடாமல் போய்விட்டது. அதன் பின்னர் இருவரும் தனித்தனியே பிரிந்து, அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் பிரிந்திருந்த 24 ஆண்டுகளாக சென்னையிலேயே குடியிருந்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதுதான் இந்த ‘சாகித்ய அகாடமி’ விருதினை பெற்றவுடன் கெளரி சங்கர், மோகனாவை பார்க்க ஓடோடி வந்திருக்கிறார். அது ஏன் என்பது சஸ்பென்ஸ்.

பிரிந்திருந்த காதலர்கள் 24 வருடங்கள் கழித்து சந்திப்பதால் இரவில் அதிக நேரம் விழித்திருந்து பேசுகிறார்கள். நேரம் போவதே தெரியாமல் பேசியதால் அதிகாலை 2 மணிக்குத்தான் தூங்கப் போகிறார்கள். இந்த நேரத்தில் மோகனாவுக்கு ஒரு பரிசை “சஸ்பென்ஸ். காலையில் பிரித்துப் பார்..” என்று சொல்லிக் கொடுக்கிறார் கெளரி சங்கர்.

அந்த நேரத்தில் அவருக்கு திடீரென்று வியர்த்து கொட்டி, நெஞ்சு வலி ஏற்படுகிறது. இதைப் பார்த்து அர்ச்சனா பதறுகிறார். அர்ச்சனா கீழே இறங்கி அபார்ட்மெண்ட் வாட்ச்மேனை அழைத்து வருவதற்குள் கெளரி சங்கர் இறந்து விடுகிறார்.

தன்னந்தனியே தன் வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த புகழ் பெற்ற ஒரு எழுத்தாளரான கெளரி சங்கர் இப்படி சட்டென மரணமடைய.. இதனை மோகனா எப்படி சமாளிக்கிறார்..? எதற்காக விருது வாங்கிய கையோடு மோகனாவைத் தேடி கெளரி சங்கர் ஓடி வந்தார்..? இதன் பின் ரேவதி என்னவானார்..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

சென்ற ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் காதலி தனது பால்ய காலத்துக் காதலனைத் தேடி வந்து பார்ப்பதாக அமைந்திருந்தது. இது காதலன், காதலியைத் தேடி வந்து பார்த்து தங்களது காதலை நினைத்துப் பார்ப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு குறும் படத்திற்குரிய கதையை திரைப்படமாக விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.

முதிர்ந்த வயதில் இருக்கும் காதலர்கள் 24 ஆண்டு கால தங்களுடைய மாறாக காதலை 24 மணி நேரத்தில் பேசி முடிக்க நினைக்கிறார்கள். அவர்களுடைய காதல் கதையைக்கூட பிளாஷ்பேக் காட்சிகளாக வைக்காமல் அவர்களுடைய வசனங்களின் மூலமாகவே கடத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

பிரகாஷ்ராஜ் எழுத்தாளன் என்ற பெயரைவிடவும் தான் காதலித்த பெண்ணின் காதலனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவே பெரிதும் மெனக்கெடுகிறார். அந்த வயதுக்கே உரித்தான தடுமாற்றத்தோடு கொஞ்சம், கொஞ்சமாக தனது காதல் கதையை ஞாபகப்படுத்தும் தருணம் ஒரு காதல் மீண்டும் பூத்தது போன்ற உணர்வினை நமக்குத் தருகிறது.

தனது மனைவியின் கரிசனையான அறிவுரையைக்கூட ஏனோதானாவென்று கேட்பவர் இங்கே தனது காதலியிடம் காணும் சாதாரண சின்ன இருமலையும், சிரிப்பையும், கனைப்பையும்கூட உற்றுக் கவனித்துப் பதிலளிக்கிறார். இயக்குநரின் இந்தச் சிறப்பான கவன ஈர்ப்பு பாராட்டுக்குரியது.

அர்ச்சனா, ‘ஊர்வசி’ விருது பெற்றவர் என்பதற்காக இந்த கத்தி மேல் நடக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் போலும். ஆனால் அதற்காக அவர் மூச்சுவிடும் சப்தத்தைக்கூட பதிவு செய்திருப்பது அழகல்ல. மென்மையான நடிப்பில் கவர்கிறார் அர்ச்சனா.

தன்னைப் புரிந்து கொள்ளாத தனது டீன் ஏஜ் மகளே தன்னைத் தவறாக நினைப்பதை எண்ணி கண் கலங்குவதும், வேலைக்காரியை “வீட்டுக்கு போ” என்று வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கும்போதும்.. நாசர் கேட்கும் கிண்டலான கேள்விகளுக்கு ரியாக்ட் செய்வதிலும் ‘ஐயோ பாவம்’ என்றே சொல்ல வைத்திருக்கிறார்.

ஆனால் இறுதிக் காட்சியில் மழையில் நனைந்தபடி அவர் காட்டும் சில நிமிட மோனோ ஆக்டிங் படத்தின் ஒட்டு மொத்தத் தன்மையையும் கெடுத்துவிட்டது. அத்தனை நீள காட்சியாக அதனைக் காட்டியிருக்கத் தேவையில்லை.

ரேவதி இரண்டு காட்சிகள் என்றாலும் இப்போதைய யதார்த்தமான ஒரு குடும்பத் தலைவியாக தன்னைப் பொருந்திக் கொண்டிருக்கிறார். புத்தகத்தில் பிரகாஷ் ராஜ் எழுதியிருந்த வரிகளைப் படித்துவிட்டு உண்மையான நட்பையும், காதலையும் புரிந்து கொண்டு நாகரீகமாக அர்ச்சனாவிடம் பேசுவது அழகானது. இந்தக் கதைக்கு உரித்தான கிளைமாக்ஸ்தான்..!

நாசர் கிண்டல் பிடித்த போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். அவர் பேசும் பேச்சும், உடல் மொழியும் சிரிப்பையும், கோபத்தையும் ஒரு சேர வரவழைத்திருக்கிறது.

ராஜேஷ் கே.யாதவ்வின் அழகான ஒளிப்பதிவு இது குறைந்த பட்ஜெட் படம் என்பதையும் சேர்த்தே பதிவு செய்திருக்கிறது. அரவிந்த் சித்தார்த்தாவின் இசையில் ஒரேயொரு பாடல் ஒலிக்கிறது.. பாடலின் காட்சிகளே கண்களை ஈர்த்துவிட்டதால் இசை பொருட்படுத்தப்படவில்லை.

ஒரு பிரபலத்தின் திடீர் சந்தேக மரணத்தை மீடியாக்கள் எப்படி விளம்பரப் பொருளாக்கி நேரத்தைச் சாப்பிடுகின்றன என்பதையும் தெள்ளத் தெளிவாகவே காட்டுகிறார்கள்.

ஒரு வயதான ஆணும், பெண்ணும் தனித்திருக்கும் சூழலை இப்போதைய தலைமுறையினர் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். எப்போதும் மாறாதது மனிதனின் கிறுக்குப் புத்தி என்பது போலவேதான் அந்த எண்ணவோட்டமும்..!

இரண்டு காதலர்களின் எண்ணங்களை, தங்களது காதல் நிறைவேறாமல் போன கதையை.. அதன் கசப்புகளை தங்களுக்குள் ஒளிவுமறைவில்லாமல் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் அந்த உரையாடல் பகுதியை மிகக் கவனமாக எழுதியிருக்கிறார் இயக்குநர். இதற்காக அவருக்கு தனி பாராட்டுக்கள்..!

ஒரு எழுத்தாளன் எந்தக் கணத்தில் எப்படி பிறந்தானோ.. யாரால் பிறப்பிக்கப்பட்டானோ அவர்களை அவன் மறத்தலாகாது என்பதை கெளரி சங்கர், மோகனாவுக்குக் கொடுத்த பரிசுப் பொருளில் தெரிய வைத்திருக்கிறார்கள்.

அந்த ஒரு கணம்தான் அத்தனையும் புலனாகிறது. மோகனாவின் வீட்டுக்கு அவருடைய வருகையையும் நியாயப்படுத்துகிறது. ரேவதிக்கும் அதைப் புரிய வைத்திருக்கிறது.

1 மணி 42 நிமிடங்களில் இத்திரைப்படம் முடிந்ததும் கசப்பானதுதான். இன்னும் கொஞ்சம் திரைக்கதையை விரிவுபடுத்தியிருக்கலாமே என்ற எண்ணமும் தோன்றுகிறது.

பாலு மகேந்திராவின் சிஷ்யையான அர்ச்சனா, தனது குருநாதருக்குச் செய்யும் மரியாதையாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்..! அது உண்மையும்கூட..!

அதே சமயம், இந்தப் படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கியிருந்தால் குரு மரியாதையும் இதைவிட சிறப்பாகவே இருந்திருக்கும் என்பதும் உண்மைதான்..!

Our Score