தமிழில் மெகா பட்ஜெட் படங்களென்றால் அது ஷங்கரின் படங்கள்தான் என்பது இப்போதுவரையிலும் ஊர்ஜிதமாகியிருக்கிறது. இப்போது வரும் கோச்சடையானை இதில் சேர்க்க வேண்டாம்..
எப்போதும் பிரமாண்டம் மூலமாகவே கதையைச் சொல்லும் ஷங்கருக்கும் சின்ன பட்ஜெட்டில் ஒரு மெஸேஜ் சொல்லும் படத்தைத் தர முடியாதா..? அவரிடம் அது போன்ற கதை இல்லையா..? அவரால் எடு்கக முடியாதா என்றெல்லாம் நமக்குள் கேள்விகள் இருப்பதை போல அவருக்குள்ளும் இருந்திருக்கிறது.
அப்படியொரு கேள்வியுடன் திரையுலக பிரமுகர்களிடம் ஷங்கரே கருத்துக் கேட்க.. அப்படி கேட்கப்பட்ட மனோபாலா, ஷங்கரை “போங்க ஸார்.. போய் உங்க பழைய வேலையவே பாருங்க..” என்று சொல்லி திருப்பிவிட்டாராம்.
மனோபாலா சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இது குறித்துப் பேசியிருக்கிறார்.
”தமிழ்ச் சினிமாவுலகத்துல நல்ல டிரெண்ட் வந்துச்சு… திடீர்னு கும்பல் கும்பலா ஒரே மாதிரி படத்தைக் கொண்டுவந்து குழப்பிட்டாங்க.
பலபேர் சிந்தனையை மட்டும் நம்பி படமெடுத்து.. செயலாக்கத்துல கோட்டை விட்டுடுறாங்க. ஷங்கர் படம் எடுக்கும்போது ‘இதை செயல்படுத்திடலாமா?’னு நாலு பேர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டுதான் ஷூட்டிங்கே போவார்.
ஒரு முக்கியமான விஷயம் சொல்லவா..? ஷங்கர்கிட்டேயும் ‘உதிரிப்பூக்கள்’ மாதிரி கவித்துவமான கதைகள் இருந்துச்சு. முதல் முதலா அவர் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சப்போ, என்னிடமும் பாரதிராஜாவிடமும் ‘உதிரிப்பூக்கள்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்.. ‘முதல்வன்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்… எதை பண்ணா நல்லா இருக்கும்?”னு கேட்டார். பாரதிராஜா ‘கவித்துவ’ ஸ்கிரிப்ட்டைக் கை காட்ட, நான்தான் ‘இத உங்களால செயல்படுத்த முடியாது. ஏன்னா, ஆடியன்ஸ் உங்ககிட்ட ‘முதல்வன்’ பிராண்டைத்தான் எதிர்பார்ப்பாங்க’னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர் ‘கவித்துவமான’ ஸ்கிரிப்ட் பக்கம் திரும்பவே இல்லை. இதுதான் சினிமா.
சிந்திக்கிறது பெரிய விஷயம் இல்லை, அதை செயல்படுத்த முடியுமானு யோசிக்கணும்!” என்றார் மனோபாலா.
ஒருத்தன் வேற மாதிரி யோசிச்சாலும், இப்படி பயமுறுத்தியே கட்டையைக் கொடுத்திர்றாங்கப்பா சில பேரு..!