நடிகர் விமலின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம்தான் ‘மன்னர் வகையறா’.
இந்தப் படத்தை நடிகர் விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது.
விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி, இசை – ஜாக்ஸ் பிஜாய். காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கை தேர்ந்தவரான இயக்குநர் பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து ‘சினிமா சிட்டி’ நிறுவனம் வாங்கியுள்ளது. அரவிந்த்சாமி – த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம்தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது.









