இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் ‘மன்மத லீலை’ படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’, கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்த படத்தை ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநரான மணிவண்ணன் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது.
சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது டிரெயிலரும் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
இந்த டிரெயிலரின் துவக்கத்திலேயே “மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே!” – “இப்படிக்கு மாட்டிக் கொண்டவர்” என்று டைட்டில் கார்டு போடும்போதே இது ‘வேற மாதிரி’ படம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.
இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றார்போல் ரொமான்டிக் காட்சிகள் பார்வையாளர்களின் கண்களையும், இதயத்தையும் திணறடிக்கிறது.
“உன்னைப் பார்க்கும்போது என் ஃபியூச்சர் ஞாபகம் வருது..”, “இன்னும் ரெண்டு பெக் போட்டா செத்துப் போன உன் ஆயா எல்லாம் ஞாபகம் வருவாங்க…” என்று காதலியுடனும், மனைவியுடனும் வழிந்து கொண்டே ரொமாண்டிக் ப்ளஸ் காமெடியில் கலகலப்பூட்டும் அசோக் செல்வனே ட்ரெய்லர் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள இந்த ’மன்மத லீலை’ படம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாகிறது.