ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் – ஹன்சிகா நடிப்பில் I.அஹ்மத் இயக்கும் புதிய திரைப்படம் ‘மனிதன்.’
ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யின் மாபெரும் வெற்றிக்குப் பின் ஹன்சிகா மோத்வானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் முதல்முறையாக கை கோர்த்து அருமையான நான்கு பாடல்களை அமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார். கலை இயக்குநர் செல்வகுமார், எடிட்டிங் மணிகண்ட பாலாஜி.
“ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமுக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது இந்த ‘மனிதன்’ திரைப்படம்.
படத்தின் பாதி பகுதி, நீதிமன்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்டமான செலவில் நீதிமன்ற வளாகமும், சென்னையிலுள்ள மண்ணடி தெருவை பிரதிபலிக்கும் தெரு செட்டும் அமைக்கப்பட்டது,
அந்தத் தெரு செட்டில் தினமும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களையும், முன்னணி நடிகர், நடிகைகளையும் கையாள்வது பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது..” என்கிறார் இயக்குநர் அஹமத்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை, சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.









