full screen background image

“வரிவிலக்கு கொடுக்கலைன்னா மறுபடியும் கோர்ட்டுதான்..” – உதயநிதி ஸ்டாலின் உறுதி..!

“வரிவிலக்கு கொடுக்கலைன்னா மறுபடியும் கோர்ட்டுதான்..” – உதயநிதி ஸ்டாலின் உறுதி..!

ஒரு பக்கம் அப்பா மு.க.ஸ்டாலினும், தாத்தா மு.கருணாநிதியும் சட்டசபை தேர்தல் களத்தில் மும்முரமாக இருக்க.. அவர்களின் வாரிசான உதயநிதி ஸ்டாலினோ தனது அடுத்தப் படத்தின் ரிலீஸில் மும்முரமாக இருக்கிறார்.

தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் தன்னுடைய நடிப்பில் ‘மனிதன்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார் உதயநிதி. இதில் இவருக்கு ஜோடி ஹன்ஸிகா மோத்வானி.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யின் மாபெரும் வெற்றிக்குப் பின் ஹன்சிகா மோத்வானியுடன்  இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், விவேக்,  ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – மதி,  கலை இயக்கம் – செல்வகுமார், எடிட்டிங்  – மணிகண்ட பாலாஜி. வசனம் – அஜயன் பாலா, திரைக்கதை, இயக்கம் – ஐ.அஹமத். இவர் ஏற்கெனவே என்றென்றும் புன்னகை படத்தை இயக்கியவர்.

2013-ம் ஆண்டு இந்தியில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான  ‘ஜாலி எல்.எல்.பி.’ படத்தின் தமிழாக்கம்தான் இது.   

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஐ.அஹ்மத், “ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமுக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது இந்த ‘மனிதன்’ திரைப்படம். படத்தின் பாதி பகுதி, நீதிமன்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்டமான செலவில் நீதிமன்ற வளாகமும், சென்னையிலுள்ள மண்ணடி தெருவை பிரதிபலிக்கும் தெரு செட்டும் அமைக்கப்பட்டது, 

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் ஓர் இளைஞன் பெரிய வக்கீலாக வேண்டும் என்று துடிப்பில் இருக்கிறான். அவனது வக்கீல் தொழிலில் அவன் சந்திக்கும் ஒரு வழக்கு அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அது என்ன வழக்கு என்பதும், அதன் போக்கும்தான் திரைக்கதை.

ஒரு பக்கம் நீதிபதியாக ராதாரவி, இன்னொரு பக்கம் சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரகாஷ் ராஜ், இவர்களுடன் தாய் மாமனான வக்கீல் விவேக் என்று சுற்றிலும் அனுபவம் மிக்க நடிகர்களோடு உதயநிதி நடித்துள்ளார். இதுவரையிலும் உதயநிதியின்  நடனம், சண்டை காட்சிகள்தான் எல்லோராலும் பாரட்டப்பப்பட்டது. இந்தப் படத்தில் இதுவரையிலும் பாராட்டப்படாத அவருடைய நடிப்பு நிச்சயம் பேசப்படும்.

அதே சமயம் ஒரு தயாரிப்பாளராக அவர் எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. இரண்டு கோர்ட் செட்டப்புகளை அமைத்தோம். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்த்தும் அருகிலேயே எடிட்டிங் பணிகள் நடக்கும். ஷூட்டில் ஏதாவது விடுபட்டு போயிருந்தால் உடனேயே ரீஷூட் எடுக்க வசதிப்படுமே என்பதால்தான் இந்த ஏற்பாட்டை செய்திருந்தோம். ஏனெனில் கோர்ட் செட்டைக் கலைத்துவிட்டால் பின்பு எடுக்கவே முடியாதே. ரொம்ப சிக்கலாயிருமேன்னு யோசித்துதான் இந்த வேலையைச் செய்தோம்.

பிரகாஷ்ராஜ் சுப்ரீம் கோர்ட் வக்கீல் என்பதால் அவருடன் வருபவர்களில் ஒரு சிலர் மும்பை முகங்களாக.. வடக்கத்தியவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். உதயநிதி அதற்கும் ஒத்துக் கொண்டார்.  இதுபோல ஒரு தயாரிப்பாளராக இயக்குநருக்கு என்ன வேண்டுமோ அதையெல்லாம் உதயநிதி ஸார் இந்தப் படத்தில் எனக்கு செய்து கொடுத்தார். அதற்காக அவருக்கு எனது நன்றிகள்.

இந்தப் படத்தில் ஹாரிஸ் ஸார் இல்லை. எங்களுக்குள் பெரிய சண்டையெல்லாம் இல்லை.. ஒரே இசையமைப்பாளருடன் வேலை செய்தால் வெரைட்டி கிடைக்காது. வேறு, வேறு ஆர்ட்டிஸ்டுகளுடன் வேலை செய்தால் நமக்கும் ஏதாவது புதிய  அனுபவங்கள் கிடைக்கும். அதனால்தான் இதில் ஹாரிஸுடன் இணையவில்லை. சந்தோஷ்  நாராயணன் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் இனிமையா வந்திருக்கு..” என்றார்.

“சுப்ரீம் கோர்ட் வக்கீலான பிரகாஷ் ராஜ் வந்து வாதாடும் அளவுக்கு அந்த வழக்கு மிக முக்கியமானதா..? அது என்ன வழக்கு..?” என்று திரும்பத் திரும்ப தோண்டித் துருவி கேட்டும் “அது சஸ்பென்ஸ் ஸார். தயவு செய்து அதைப் பத்தி கேக்காதீங்க. தியேட்டர்ல பார்த்துக்குங்களேன்..” என்றவர்.. “அதே சமயம் இந்தப் படம் எல்லா பொழுது போக்கு அம்சங்களும் உள்ள சமூக அக்கறைப் படம்..” என்றார்  இயக்குநர் அஹமது.

இந்த ‘மனிதன்’ படத்தில் வசனம் எழுதியிருக்கும் எழுத்தாளர் அஜயன் பாலா பேசும்போது, ”ஜாலி எல்.எல்.பி. ஒரு சின்ன கருவைக் கொண்ட கதை. ஆனால் தமிழில் அதை அப்படியே எடுக்கலை. இயக்குநர் தமிழுக்கேற்றாற்போல் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார். திரைக்கதை புதிதாக எழுதப்பட்டிருக்கிறது. கதையின் கனத்திற்கேற்ப  வசனங்களை நான் புதிதாக எழுதியிருக்கிறேன். நீதிமன்ற வசனங்களுக்காகவே புகழ் பெற்ற படங்களின் வரிசையில், இந்தப் படமும் நிச்சயம் இடம் பிடிக்கும்..” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளரான மதி பேசும்போது, ”இந்தப் படம் பாதிக்கும் மேல் நீதிமன்றம் மற்றும் கோர்ட் வளாகத்திலேயே நடக்கும் திரைக்கதையில் அமைந்திருக்கிறது. இதனால் நிஜ கோர்ட்டுகளில் படமெடுத்தால் இயக்குநருக்கு மிகுந்த சிரம்ம் ஏற்படும் என்பதால் செட்டுகளை அமைத்தோம்..

கலை இயக்குநர் தனது கைவண்ணத்தில் நீதிமன்றமே ஒரு கேரக்டராக பேசுவதுபோல தத்ரூபமாக அமைத்துத் தந்தார். மாவட்ட செஷன்ஸ் கோர்ட்.. மாநில உயர்நிதிமன்றம் என்று இரண்டு செட்டுகள் போடப்பட்டு இரண்டிலுமே ஷூட் செய்துள்ளோம். அதைப் பார்த்தால் நிச்சயம் செட் என்றே சொல்ல மாட்டீர்கள். அந்த அளவுக்கு நிஜ கோர்ட் மாதிரியேதான் இருக்கும்.

ஒரு பக்கம் பிரகாஷ் ராஜ்.. எதிரில் ராதாரவி.. இந்தப் பக்கம் உதயநிதி.. மற்ற ஆர்ட்டிஸ்டுகள் என்று கோர்ட் ரூமை படமாக்கியபோது எனக்கு டென்ஷன்தான்.. ஆனாலும் செட் அமைத்து எடுத்ததினால் முக்கால்வாசி பிரச்சினைகளை தீர்த்து நல்லபடியாக எடுக்க முடிந்தது..” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ”இந்த ‘மனிதன்’ படம் என்னுடைய ஐந்தாவது படம். இதில் எனக்கு வக்கீல் கதாபாத்திரம். என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் எடுத்திருக்கும் மாறுபட்ட வேடம் இது.  கோர்ட், சட்டம், வக்கீல்கள், வாதப்பிரதிவாதங்கள் என்று நீதிமன்ற நடைமுறைகளோடு படம் இணைந்து ஓடும். ஆனால், படத்தில் காதல், காமெடி என்று எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு.

படத்தில் நீதிபதியாக ராதாரவி, சுப்ரீம் கோர்ட் வக்கீலாக பிரகாஷ் ராஜ், எனக்கு தாய் மாமனாக விவேக் என்று அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இந்த கேரக்டரை எனக்கு தரலன்னா உதைப்பேன்..” என்று செல்லமாக மிரட்டியே அந்த கேரக்டரில் நடித்தார் ராதாரவி. முதல்முறையாக என்னுடன் விவேக் ஸார் காமெடி செய்து நடித்திருக்கிறார்.

இந்த கதையை படமாக்கணும்னு நினைச்சு வாங்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் கொஞ்சம் யோசிக்கும்போதுதான், படத்தின் வசனங்கள் பற்றி எனக்குத் தெரிந்தது. பக்கம், பக்கமான வசனங்கள் பேசணுமே நினைச்சேன். இதுக்கு முந்தின படங்கள்ல காதல், காமெடின்னு பண்ணி தப்பிச்சிட்டேன். இது அப்படி முடியாதேன்னு பயந்துக்கிட்டேதான் இருந்தேன். நான் நினைச்ச மாதிரியே வசனத்தை எழுதி தள்ளிட்டாங்க. ‘விதி’ படம் மாதிரி இந்தப் படத்தோட வசனங்களும் நிச்சயம் பேசப்படும்னு நம்புறேன். வசனத்தையெல்லாம் முன்னாடியே பேசி பயிற்சியெடுத்து பழகிய பிறகுதான் ஷாட்ல வந்து நின்னேன்.

முதல் படத்தில் எனக்கு நடனமாட  தெரியாது. ரெண்டாவது படத்தில் அதை சரி பண்ணினேன். ரெண்டாவது படத்தில் சண்டை காட்சில சொதப்பினேன்.. மூன்றாவது படத்தில் அதை சரி பண்ணினேன். இப்போ இந்த ‘மனிதன்’ படத்துல நான் பேசி நடித்திருக்கும் வசனங்களைக் பரவால்ல உதயநிதி தேறிட்டாரேன்னு நீங்களே நினைப்பீங்க..

ஒரு பெரிய புகழ் பெற்ற வக்கீலா வரணும். அதுக்கப்புறம்தான் கல்யாணம்னு உறுதியா நிப்பேன். அந்த நேரத்துல ஒரு சமூக அக்கறையுள்ள வழக்கு ஒன்றில் நான் ஆஜராவேன். இதுதான் படத்தோட டர்னிங் பாயிண்ட். இந்த வழக்கில் எனக்கு எதிரா சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரகாஷ் ராஜ் வாதாடுவார். இதில் நான் ஜெயித்தேனா இல்லையா என்பதுதான் கதை.

முதல்ல இந்தப் படத்துக்கு ‘பராசக்தி’ன்னுதான் பெயர் வைக்கலாம்னு நினைச்சோம்.  படத்துல என் கேரக்டர் பெயரும் ‘சக்தி’ன்றதால பொருத்தமாக இருக்கும்னு நினைச்சோம். ஆனால் விவேக் ஸார் கதையைக் கேட்டுட்டு “இதுக்கு ‘மனிதன்’னு பெயர் வைத்தால் நல்லாயிருக்கும்”னு யோசனை சொன்னார். சரின்னு அந்த டைட்டிலை முறைப்படி கேட்டு வாங்கி பயன்படுத்தியிருக்கோம். இது சூப்பர் ஸ்டாரோட டைட்டில்ன்றதால, அந்த ஒரிஜினல் படத்துக்கு எந்தக் கெட்டப் பெயரும் வராத அளவுக்கு படம் தரமா வரும். அதுனால கவலையில்லை.

இந்தப் படத்துக்கு சென்சார்ல ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ஆனாலும் வரிவிலக்கு கிடைக்குமா, கிடைக்காதான்னு தெரியாது. கிடைக்கலைன்னா மறுபடியும் கோர்ட்டுக்கு போவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இந்த ‘மனிதன்’ படமே கோர்ட் சம்பந்தப்பட்ட கதைதான். இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கேட்டு கோர்ட்டுக்கு போக வேண்டிய நிலைதான் இப்ப இருக்கு.

இந்த வரிவிலக்கு விஷயத்தில் இந்த ஐந்தாண்டு காலத்தில் நான் நிறைய இழந்துவிட்டேன். ஆனால் தயாரிப்பாளர் சங்கமும், சினிமாவுலகமும் எனக்கு எந்த உதவியும் செய்யலை.. வருத்தமாத்தான் இருக்கு..” என்றார்..

கடைசியாக, “கடந்த படத்தின் ரிலீஸின்போது படத்தை விமர்சித்தவர்களை ‘பெய்டு க்ரிட்டிக்’னு திட்டுனீங்களே..?” என்று கேட்டதற்கு, “நான் எல்லாரையும் அப்படி சொல்லல. என்னை விமர்சனம் பண்ணக் கூடாதுன்னும் சொல்லல. ஆனால் ரொம்ப காயப்படுற மாதிரி எழுதுறதைதான் என்னால ஏத்துக்க முடியல. அவங்களைத்தான் சொன்னேன். மத்தவங்க தப்பா எடுத்துக்க வேண்டாம்…” என்றார் அழுத்தமாக..!

வரும் ஏப்ரல் 29-ம் தேதி திரைக்கு வருகிறான் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’.

Our Score