full screen background image

“கே.பி. தடுத்திருக்காவிட்டால் 1980-லேயே என் முகவரி தொலைந்து போயிருக்கும்..” – ரஜினி உருக்கம்..!

“கே.பி. தடுத்திருக்காவிட்டால் 1980-லேயே என் முகவரி தொலைந்து போயிருக்கும்..” – ரஜினி உருக்கம்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மரணம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினி இன்றைய ஆனந்தவிகடனில் எழுதியிருக்கும் இரங்கல் கட்டுரை இது :

என் வீட்டு தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க… மறுமுனையில் இருந்து ‘சார்…  நான் கே.பி. சாரோட அசிஸ்டெண்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா?’ என தழுதழுத்த குரல் கேட்டது.

அந்தக் குரல் ஒலித்த தொனி, ஏதோ நடக்க இருக்கும் ஓர் அசம்பாவிதத்தை உணர்த்துவதுபோல தோன்றியது எனக்கு. மருத்துவமனைக்கு வண்டியைச் செலுத்தச் சொன்னேன் டிரைவரிடம். என் மனத் தடுமாற்றத்தின் வேகத்தைவிட வண்டியின் வேகம் குறைவாக இருந்ததுபோல் தோன்றியது. 

ஒரு வழியாக மருத்துவமனையை அடைந்து அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கு என் குருநாதர் படுக்கையில். அருகில் சென்றேன்.. என்னைப் பார்த்தவர் எந்தவித சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தார். ‘சார்… எப்படி இருக்கீங்க?’ என்றேன். அவர் குழந்தையைப்போல மலங்க மலங்க என்னைப் பார்க்க, நான் கலங்கிப்போனேன்.

kb-rajini-2

திரையுலகில் அவர் உச்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் படப்பிடிப்பு அரங்கத்தில் நுழையும்போதே எல்லோரும் நடுங்குவார்கள். அவ்வாறு கர்ஜித்த சிங்கம் இன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அந்தக் கம்பீரம் எங்கே தொலைந்து போனது எனத் தேடினேன்.

அந்த அறையில் இருந்தவர்கள் கே.பி அவர்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி, ‘ஐயா, இவர் யாருன்னு தெரியுதா… சொல்லுங்க பார்க்கலாம்?’ எனக் கேட்டது, அரிச்சுவடியை குழந்தைக்குக் கற்பிக்கும் ஆசிரியர் கேட்பதுபோல இருந்தது. எத்தனையோ தென் இந்தியத் திரைப்படப் பிரபலங்களை ஆட்டுவித்த அந்த ஆளுமை, இன்று ஸ்தம்பித்து நிற்கிறதே என என் மனம் விம்மியது. நான் அவரையே உற்றுப் பார்க்க, பெற்ற பிள்ளை, தாயை ‘அம்மா’ என அழைப்பதைபோல் இருந்தது, அவர் என்னைப் பார்த்து ‘ரஜினி’ என கூறியது.

அகில இந்திய அளவில் என்னை ‘ரஜினி’ என அடையாளம் காட்டிய அந்த ஆத்மா தன்னையே இழந்த நிலை கண்டு தடுமாறினேன். எனக்குப் பேச வார்த்தைகள் வர மறுத்தன. மாறாக, கண்ணீர் மட்டும் என் கண்களின் உத்தரவின்றி வழியத் தொடங்கியது. நானும் அவரிடம் விடைபெற்று, நடை தளர்ந்தபடி கடந்த கால நினைவுகளில் கரைந்தேன்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நான் அங்கு இருந்த ஊடகங்களுக்கு, ‘கே.பி. சார் எனக்குத் தந்தை போன்றவர்’ எனக் கூறினேன். அது உதட்டளவில் வந்த வார்த்தை அல்ல; என் உள்ளத்தில் இருந்து வந்த உண்மை. ஆம்..! இருட்டுப் பாதையில் சென்ற இந்த முரட்டு வாலிபனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து வழிகாட்டியவரை, ‘தந்தை’ என்றுதானே கூற முடியும்.

1980-களில் நான் சினிமா மீது வெறுப்புற்று, ‘எனக்கு சினிமாவே வேண்டாம். என்னை விட்டுவிடுங்கள்’ எனக் குழம்பித் தவித்தபோது, ‘டேய்… ஆறு மாசம் பொறுமையா இரு. அதுக்கு அப்புறமா சினிமாலே இருக்கிறதா, வேண்டாமானு நீயே முடிவு செஞ்சுக்க’ எனக் கூறி என் தவறான முடிவை அவர் மட்டும்  தடுத்திருக்காவிட்டால், என்னுடைய இன்றைய முகவரி என்றோ தொலைந்து போயிருக்கும்.

அப்படிப்பட்ட நல்லவரை இந்த நிலைமையில் பார்க்கும் கொடுமையை நினைக்கும்போது, நான் இந்த உலகில் இருந்தும் இல்லாத நிலைபோல எனக்குத் தோன்றியது. அதுதான் உண்மை. யதார்த்தத்துக்கு ஏன் ஒப்பனை..? தேவை இல்லை.

டாக்டர்கள் கூறிய ‘கே.பி சார் அபாயக் கட்டத்தைக் கடந்துவிட்டார். இப்போது நலமாக இருக்கிறார்’ என்ற செய்தி அறிந்து அடைந்த மகிழ்ச்சி, நீண்ட நேரம் நீடிக்காமல், பின்னாலேயே மரணச் செய்தி வந்தடைந்தது.

உடனே மருத்துவமனைக்குச் சென்று செய்வதறியாது அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். திரையுலகில் எத்தனையோ பேரை ஏற்றிவிட்ட ஏணி சாய்ந்து கிடந்தது. என் வேதனையை, துக்கத்தை எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இந்த ‘24.12.2014’-தான் என்னைப் பொறுத்தவரையில் ‘கறுப்பு நாள்’.

வீட்டுக்கு வந்த பிறகும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவருடைய இழப்பு எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகத் தோன்றியது. அவருடைய இறுதிச் சடங்குகள் முடியும்வரை அவரோடு இருக்க விரும்பி, விடிந்ததும் அவர் வீட்டுக்குச் சென்றேன். வண்டியைவிட்டு நான் இறங்கக்கூட இல்லை. என்னைக் கூட்ட நெரிசலில் அப்படியே இழுத்துச் சென்றவர்கள், அவர் முகத்தை எனக்குக் காட்டிவிட்டு மீண்டும் என்னை இழுத்துவந்து வண்டியில் போட்டுவிட்டுச் சென்றனர்.

சரி, மயானத்துக்குச் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளலாம் எனக் கிளம்பினேன். இறுதி ஊர்வலம் செல்லும் சாலைகளின் இருமருங்கிலும் அவரைக் காண காத்துக் கிடந்த கூட்டத்தைப் பார்த்து, அங்கு இருந்த அனைவரும் பிரமித்துப்போனார்கள்.

இப்படிப்பட்ட மக்கள் வெள்ளம் எப்படி வந்தது..? எந்த ஒரு சினிமா இயக்குநருக்கும் இல்லாத கூட்டம் இவருக்கு மட்டும் எப்படிச் சாத்தியம்..? இவரது படைப்புகள் மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்புத்தான் அது. திரையுலகப் பயணத்தில் அவர் சேர்த்த செல்வாக்கின் மதிப்பை, அவரின் இறையுலகப் பயணம்தான் நாம் உணரும்படியும் அதிரும்படியும் செய்தது.

kb-rajini-jayapradha

ஈமச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னையும் அறியாமல் என் மனதில் இப்படி ஓர் எண்ணம் தோன்றியது… இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவர் எங்கேயோ பிறந்து சென்னை வந்து திரைப்பட இயக்குநர் ஆனது, நான் சென்னை வந்து அவரைச் சந்திக்க நேர்ந்தது, அவர் என்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படி ஒரு ஸ்தானத்தில் உட்கார வைத்தது… இவை அனைத்தும் திட்டமிட்டுச் செயல்பட்டதால் நடந்த விஷயங்கள் அல்ல. எனக்கும் அவருக்கும் இடையில் அப்படி ஒரு புரிதல் எப்படி ஏற்பட்டது? இந்தப் பந்தம் இந்த ஜென்மத்தில் மட்டுமல்லாது, எத்தனையோ ஜென்மங்களாகத் தொடர்ந்து வரும் உறவுபோல எனக்குத் தோன்றுகிறது.

அவருடைய ஸ்தூல சரீரம்தான் இறந்து கிடக்கிறது. அவரது சூட்சம சரீரம் எனக்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருப்பதாக நான் உணர்ந்து, என் இரண்டு கைகளையும் கூப்பியபடி உயர்த்தி அவரை வணங்க, ‘சடங்கு முடியப் போகிறது, வாய்க்கரிசி போடுறவங்க போடலாம்’ என்ற குரல் கேட்டது. எனக்கு அன்னம் அளித்த என் ஆசானுக்கு வாய்க்கரிசி போட ஏனோ என் கைகள் நடுங்கின.

‘சடங்கு எல்லாம் முடிஞ்சு போச்சு. ஒரு சகாப்தத்தை, தீ தனக்கு இரையாக்கிக் கொள்ளப் போகிறதே… கடவுளே! அந்தத் தீயை அணைக்க என் கண்ணீர் போதவில்லையே… நான் என்ன செய்ய?’ என என் தேகம் பதறியது. அந்த அந்திமக் காட்சியை என் கண்கள் காண மறுத்தன. கனத்த இதயத்துடன் திரும்பினேன்.

‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா…

ஆறடி நிலமே சொந்தமடா!’

Our Score