கோல்டன் குரோவ் பிலிம்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுமதி மணிவண்ணன் தயாரித்திருக்கும் படம் ‘மங்குனி பாண்டியர்கள்’.
படத்தின் இயக்குநரான ஜெ.பா.வே இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ‘காதல்’ தண்டபாணி, பாண்டு, ‘நெல்லை’ சிவா, போண்டாமணி, வாசு விக்ரம், ‘கம்பம்’ மீனா, இவர்களுடன் புதுமுகங்கள் வக்கீல் செல்வதுரை, தியாகராஜன், பிரின்ஸ், கவியரசன், ஆஷிதா, மாஸ்டர் சக்தி சரண், மாதேஸ்வரன், மனோஜ், விக்ரம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெ.மோகன், இசை – ஜோஸப் ப்ராங்க்லின். படத் தொகுப்பு – வீரா. கதை, திரைக்கதை, வசனம் – மணிவண்ணன், இயக்கம் – ஜெபா.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ஜெபா பேசும்போது, “படித்த இளைஞர்கள் சிலர் தாங்கள் பிறந்த கிராமத்தை நல்வழிப்படுத்தி, ஒரு முன் மாதிரி கிராமமாக கொண்டு வர நினைக்கிறார்கள். அதற்கு உள்ளூரிலேயே ஒரு சிலரால் எதிர்ப்பு வருகிறது. அதனால் அவர்கள் தங்களுடைய நண்பர்களில் சிலரை இழக்க நேரிடுகிறது. இதையும் மீறி அந்த கிராமத்தை முன் மாதிரி கிராமமாக மாற்றினார்களா..? இல்லையா… என்பதை மையமாக வைத்து அரசியல் கலந்த நகைச்சுவையோடு இந்த படம் தயாராகி உள்ளது…” என்றார்.
2015-ம் ஆண்டே தயாரான இத்திரைப்படம் நான்காண்டு கால இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு டிசம்பர் மாதம்தான் வெளியாகவுள்ளது.