இந்தப் படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.
நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அறிமுக நடிகரான சுகேஷ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
G.V. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை S. R. கதிர் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை D. R. K. கிரண் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங் பணியை பிரதீப் E. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளனர். இயக்குநர் மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
‘மாமன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு தான் ஒரு நகைச்சுவை நாயகனாக வர விரும்பாத நடிகர் சூரி, மற்றைய ஹீரோக்களைப் போலவே கதையின் நாயகனாக நடிக்க துவங்கியிருக்கிறார். அந்த வரிசையில் அவருடைய அடுத்தப் படமாக இந்த ‘மண்டாடி’ வந்திருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முகவைப்பட்டினம் என்ற ஊர்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.
மீன்பிடித் தொழில் மட்டுமே இந்த ஊரின் பிரதானம். சிறு வயதில் இருந்தே கடலையும், படகுகளையும், மீனையும் பார்த்து வளர்ந்த இந்த ஊர் இளைஞர்கள்… படகுகளை யார் வேகமாக செலுத்துகிறார்கள் என்பதில் ஒரு போட்டி போட்டு வளர்ந்திருக்கிறார்கள்.
அந்த ஊரில் வருடா வருடம் பாய்மரப் படகு போட்டி நடைபெறும். அந்தப் போட்டியினால் அந்த ஊரில் ஏற்படும் மோதல்களும், உறவுகளின் பிரிதலும், கூடா காதலும், நட்பும், துரோகமும் சேர்ந்ததுதான் இந்த ‘மண்டாடி’ படத்தின் கதை சுருக்கம்.
அந்த ஊரில் 20 வருடங்களுக்கு முன்பாக சத்யராஜ் ‘வாத்தியார்’ என்ற பெயருடன் ‘முகவை மைந்தன்’ என்ற பாய்மரப் போட்டி குழுவுக்கு குருவாக இருந்திருக்கிறார்.
இவருடைய சிஷ்யர்களாக இருந்தவர்கள்தான் படத்தின் நாயகனான சூரி, சுகேஷ், அக்யூத் குமார் இன்னும் பலர்.
சத்யராஜின் வழிகாட்டுதலில் தொடர்ந்து பல வருடங்களாக பாய்மரப் படகு போட்டியில் முகவை மைந்தர் டீம்தான் ஜெயித்து வருகிறது.
இந்த நிலையில் சுகேஷின் தந்தை கொடுத்த தப்பான ஒரு ஐடியாவினால் சத்யராஜிடம் இருந்து சூரியும், சுஜாஷூம் விலக நேரிடுகிறது.
அதோடு சூரி சத்யராஜின் மகளான மகிமா நம்பியாரை காதலித்து வருகிறார். அந்தக் காதலும் கைகூடாமல் போகிறது.
சத்யராஜ் உடனான ஒரு மோதலில் சுகேஷின் தந்தை சத்யராஜை அவமானப்படுத்திவிட அதைக் கண்டு கோபமடையும் சூரி சுகேஷின் தந்தையை அடித்ததில் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் அமர்கிறார்.
இதை அடுத்து நடந்த சம்பவங்களினால் சத்யராஜ் கொல்லப்பட்டாலும் சூரி காப்பாற்றப்படுகிறார்.
இதற்கு மேலும் இந்த ஊரில் இருந்தால் தனக்கு நிம்மதி இருக்காது என்பதால் சூரி அந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து விஜிபி கோல்டன் பீச் நீச்சல் குளத்தின் கார்ட் ஆக வேலை செய்து வருகிறார்.
இந்த நேரத்தில் ஊரில் இருந்து ஒரு இளைஞன் சூரியை தேடி வருகிறான். அக்யூத்குமார் சூரியக்கு ஃபோன் செய்து அந்தப் பையனை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார். ஆனால் இங்கேயும் சுகேஷின் ஆட்கள் தேடி வந்து அந்த இளைஞனை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
இதனால் கோபமடையும் சூரி அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு 20 வருடங்களுக்கு முன்பு தான் வேண்டாம் என்று வந்த அதே ஊருக்குள் வருகிறார்.
மீண்டும் பாய்மரப் படகு போட்டியில் தான் ஒரு தனி அணியை அமைத்து போட்டியில் பங்கேற்க போவதாக சவால் விடுகிறார்.
அவருடைய அந்த சவால் ஜெயித்ததா? இல்லையா? என்பதுதான் இந்த ‘மண்டாடி’ படத்தின் திரைக்கதை.
சூரி கருத்த முகம்தான். இந்தப் படத்தில் இன்னமும் கருப்பாக காட்டியிருக்கிறார்கள். நெற்றியைத் தாண்டி விழும் முடி, எப்போதும் இறுக்கமான அளவிலான முகம், காதல் காட்சிகளைத் தவிர வேறு எப்போதும் சிரிப்பை கூட காட்டாத ஒரு தன்மை, காதலிலும் ஜென்டில்மேன் காதலனாக நடந்து கொள்ளும்விதம் என்று இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிமுகக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் பிளாஸ்பேக் காட்சிகளைத் தவிர மற்றவற்றில் சூரி தன்னுடைய உச்சபட்ச நடிப்பை காண்பித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டுமே அவரிடமிருந்து ஹீரோயிசம் வெளிப்பட்டிருக்கிறது.
ஊருக்குள் வந்து பஞ்சாயத்து பேசும் காட்சிகள்… 20 ஆண்டு கால பிரிவை காட்டும்போதும்… அதே நேரத்தில் சுகாஷின் துரோகத்தை மனதில் வைத்தும், ஊரின் அமைதியை நினைத்தும், பேசுகின்ற பொழுதெல்லாம் கதையின் நாயகனாகவே நமக்கு தெரிகிறார் சூரி.
காதல் காட்சிகளில் ஒரு கிராமத்து இளைஞன், எதுவும் தெரியாதவன் என்ன செய்வானோ அதை மட்டுமே செய்திருக்கிறார் சூரி. அதிலும் காதலை சொல்லு என்று பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் உசுப்பேற்றும் பொழுது பட்டென்று “பீஸ் வேண்டும்” என்று மெல்லமாக சூரி கேட்கும்போது சிரிக்க வைத்துவிட்டார்.
படத்தின் பிற்பாதியில் அவருடைய நடிப்பு முழுவதும் பாய்மரப் படகு போட்டிகளிலேயே வெளிப்பட்டுள்ளது. அந்த நேரத்திய டென்ஷன், போட்டியின் காட்சிகள் போன்றவற்றில் நம் கவனம் திசை திரும்ப சூரி பெரிதாக நமக்குத் தென்படவில்லை.
‘மாமன்’ படம் போலவே இந்தப் படத்திலும் சூரி காட்டியிருக்கும் எமோஷன்ஸ் காட்சிகள் நிச்சயம் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
மேக்கப்பே இல்லாமல் நடித்திருக்கும் மகிமா நம்பியார் படம் நெடுகிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை காண்பித்திருக்கிறார்.
சூரியை காதலித்து அது தோல்வியில் முடிந்து சூரியன் நண்பனையே திருமணம் செய்து வாழும் அவரது வாழ்க்கை கதை சோகத்தை கொடுத்தாலும் திரைக்கதையில் படத்தை நகர்த்துவதற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தன்னுடைய மகனிடம் தன் கதையை அவர் சொல்லும் பொழுதும், தன் கணவரிடம் சூரியை சம்பந்தப்படுத்தி பேசுவதை எதிர்த்துப் பேசும் பொழுதும் ஒரு அழகான நடிப்பை காண்பித்திருக்கிறார் மகிமா நம்பியார்.
வில்லனாக நடித்திருக்கும் சுகேஷ் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார். வில்லத்தனத்தை முகத்திலேயே வைத்திருக்கிறார். அவருடைய தோற்றமும், அவருடைய திராவிட முகம் இரண்டும் சேர்ந்துதான் அவரை இந்தப் படத்துக்குள் இழுத்து வந்திருக்கிறதுபோலும்!
கொஞ்சமும் குறைவில்லாமல் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார். குளோசப் காட்சிகளில் மிக மெதுவாக வசனம் பேசியவிதத்திலும், சில இடங்களில் மாடுலேஷனிலும் அசத்தியிருக்கிறார் சுகேஷ்.
மகிமா நம்பியாரின் கணவராக நடித்திருக்கும் அக்யூத் குமாரும் ஒரு பண்பட்ட நடிப்பை காண்பித்து இருக்கிறார். தன்னுடைய நெருங்கிய நண்பனின் காதலியை தான் மணந்து கொண்டாலும் அவருக்கும் முன்னாள் காதலனுக்கும் இருக்குமான அந்த நட்பு படம் முழுவதும் அழகாக காட்டப்பட்டுள்ளது.
இவருடைய நடிப்பும் அதுபோல் அழகாகவே உள்ளது. சூரி பற்றி மனைவியிடம் சண்டையிடும் பொழுது அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியதாகவே உள்ளது.
இடைவேளை பிளாக்கில் அட்டகாசமாக கைதட்ட வைக்கும் அளவுக்கு தோன்றுகிறார் சத்யராஜ். அவருடைய மேக்கப், அவருடைய தோற்றம், பேச்சு, கெத்து என்று அத்தனையிலும் அந்தப் பகுதி மண்ணின் மைந்தராகவே காட்சி அளிக்கிறார் சத்யராஜ்.
அவருடைய வில்லத்தனத்தில் எதையும் காட்டாமல் ஒரு சராசரி ஊர் பெரியவராக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
மகிமா நம்பியாரின் மகனாக நடித்தவரும், அவருடைய காதலியாக நடித்த சாச்சனா, சுதேஷின் அப்பாவாக நடித்தவர் மற்றும் சூரியின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவை அழகு என்றே சொல்லலாம். கடலும், கடல் சார்ந்த பகுதியும், மீனவர்களும், படகுகள் அணிவகுத்திருக்கும் காட்சிகளும், அந்த ஊரின் சாமானிய மக்களின் வீடுகளையும் காட்டி அந்த இருப்பிடத்தையே ஒரு அழகியலாக காட்டியிருக்கிறார்.
பாய் ஃப்ரம் படகு போட்டியை இவ்வளவு தூரம் அழகுபட பதிவு செய்திருப்பதில் அவருடைய முழு திறமையும் காட்டப்பட்டுள்ளது. அந்த போட்டிதான் படத்தின் ஜீவன் என்பதால் அதைப் படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் தனியாகத் தெரிகிறார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டு அடித்துவிட்டன. பாடலை படமாக்கி இருக்கும்விதமும் அழகுதான். பின்னணி இசையிலும் அந்தந்த காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இசையை அமைத்து படத்தை போரடிக்காமல் பார்க்க வைத்திருக்கிறார்.
படத் தொகுப்பாளரான பிரதீப் ராகவ் தன்னுடைய கச்சிதமான தொகுப்பினால் பாய்மர படகு போட்டி முழுவதையும் அவ்வளவு அழகாக நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.
அதிலும் கடைசியில் சூரி டீம் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு நமக்குள் ஒரு உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இரண்டு படகுகளுக்கு நடுவில் சூரியின் படகு கடந்து செல்லும் என்ற காட்சியை மயிர் கூச்செறியும் அளவிற்கு மிக அழகாக கத்தரித்துக் கொடுத்திருக்கிறார் இதற்காகவே படத் தொகுப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.
கலை இயக்குநர் கிரண் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ தெரியவில்லை?! ஆனால் அவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
அந்த ஊர் மக்களின் வாழ்வியல் சம்பந்தமான இடங்களும், பொருட்களும் அப்படியே காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது கலை இயக்குநரின் வேலையிலேயே தெரிகிறது.
பாய்மரப் படகு போட்டிகளில் அந்தப் படகுகளை வழிநடத்திச் செல்லும் தலைவனின் பெயர்தான் ‘மண்டாடி’. அதனால் இந்தப் படத்தின் தலைப்பு இந்தக் கதைக்குக் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
ஒரு கிராமத்து மீனவர் கதையில், அவருக்கு இருக்கும் காதல், அவர்களுக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, நட்பு, துரோகம் இதையெல்லாம் சரியானவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
சும்மா வெறுமனே பாய்மர படகு போட்டி என்று மட்டும் சொல்லி விடாமல், அந்தப் படகுகளை எப்படி உருவாக்குகிறார்கள்? எப்படி போட்டிக்கு தயார் செய்கிறார்கள்? படகுகளின் உள்ளே இருக்கின்ற அமைப்புகளுக்கு தனித்தனி பெயர் என்ன? அவைகளின் வேலைகள் என்ன? அலையடிக்கும் பொழுதும் கடலில் திடீரென்று சுழல் உண்டானால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பது பற்றியும் கிட்டத்தட்ட ஒரு பெரிய ஆராய்ச்சியை செய்து இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
அந்த வகையில் கதை, திரைக்கதை, வசனத்தில் இயக்குநருடன் கை கொடுத்து உழைத்திருக்கும் குழுவினருக்கும், இயக்குநர் குழுவுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அதிகப்பட்சம் யாரும் லாஜிக் என்கின்ற விஷயத்தை தொடக் கூடாது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான வழிகளை எல்லாம் அடைத்துவிட்டுத்தான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர்.
கடினமான உழைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம்.
RATING : 4 / 5








