full screen background image

நடிகர் விஜய பாபு விவகாரம்-‘அம்மா’ அமைப்பின் விசாகா கமிட்டியில் இருந்து நடிகைகள் விலகல்..!

நடிகர் விஜய பாபு விவகாரம்-‘அம்மா’ அமைப்பின் விசாகா கமிட்டியில் இருந்து நடிகைகள் விலகல்..!

மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கினால் மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா அமைப்பில்’ புயல் வீசியுள்ளது.

அந்த அமைப்பில் பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ‘விசாகா கமிட்டி’யில் இருந்து மூன்று நடிகைகளும் விலகிவிட்டனர்.

முன்னதாக பாலியல் குற்றச்சாட்டு்க்கு உள்ளான நடிகர் விஜய் பாபு, துபாயில் இருந்து இமெயில் மூலமாக தான் அம்மா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்ட அம்மா அமைப்பு “விஜய் பாபு அம்மா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்” என்றும், அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாகவும் அறிவித்தது.

ஆனால், இதனை அந்த அமைப்பில் இருந்த விசாகா கமிட்டி உறுப்பினர்களான நடிகைகள் மாலா பார்வதி, ஸ்வேதா மேனன், குக்கூ பரமேஸ்வரன் மூவரும் ஏற்கவில்லை.

இவர்களில் மாலா பார்வதி நேற்று அந்தக் கமிட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார். அவர் இது குறித்து பத்திரிகையாளர்களிடத்தில் பேசுகையில், “எங்களது விசாகா கமிட்டி விஜய் பாபு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘அம்மா அமைப்பு’க்கு பரிந்துரை செய்தது. ஆனால், ‘அம்மா அமைப்பு’ அதைச் செய்யாமல் அவரது ராஜினாமாவை ஏற்பதாகச் சொல்லி அவரை வழியனுப்பி வைத்துள்ளது. இது தவறான முடிவு.

அவராகவே சங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். நாளை அவராகவே சங்கத்தில் மீண்டும் சேர்வதாக வந்தால் சேர்த்துக் கொள்ள முடியுமா..? இது பொது மக்களுக்கு தவறான ஒரு கருத்தைச் சொல்கிறது..” என்று நடிகை மாலா பார்வதி தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்றைக்கு அதே விசாகா கமிட்டியில் தலைவராக இருந்த ஸ்வேதா மேனனும், உறுப்பினராக இருந்த குக்கூ பரமேஸ்வரனும் தாங்களும் அந்தக் கமிட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து நடிகை குக்கூ பரமேஸ்வரன் கூறுகையில், “விசாகா கமிட்டியின் பரிந்துரைகளை ‘அம்மா அமைப்பு’ ஏற்காதது வருந்தத்தக்கது. அம்மா அமைப்பு எடு்த்த முடிவு தவறானது என்பதைக் காட்டும் அறிகுறிதான் எங்களுடைய பதவி விலகல். ‘அம்மா அமைப்பு’ இதை சரியான வழியில் சந்தித்துத் தீர்வைச் சொல்லும் என்று நான் நம்புகிறேன்…” என்றார்.

தற்போது ‘அம்மா அமைப்பின்’ ‘விசாகா கமிட்டி’ தற்போது முழுமையாக கலைந்துவிட்டதால் ‘அம்மா அமைப்பின்’ தலைவரான மோகன்லால் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை மலையாள நடிகர், நடிகைகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Our Score