‘நேற்று இன்று’, ‘இரவும் பகலும்’ உள்ளிட்ட படங்களை பெரியளவில் வெளியிட்ட நிறுவனம் S.தணிகைவேல் அவர்களின் RSSS PICTURES. இந்த நிறுவனம் தற்போது ‘மதுரை மாவேந்தர்கள்’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தில் அஜய், அர்ச்சனா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். மேலும் அப்புக்குட்டி, ‘காதல்’ சுகுமார், தேவதர்ஷினி, விஜய் ஆனந்த், P. பாண்டு, ‘பூ விலங்கு’ மோகன், ‘நெல்லை’ சிவா, ‘மேனேஜர்’கிருஷ்ணமூர்த்தி, வெங்கல் ராவ், சபர்ணா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் – S. கார்த்தி , எடிட்டிங் – A.L. ரமேஷ், கலை – J.P., இசை – பைஜீ ஜாக்கப், தயாரிப்பு – S. தணிகைவேல், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – -V.K. விஜய் கண்ணா
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது மகளின் திருமணத்திற்காக வீட்டை விற்று வைத்திருந்த பணத்தை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்து ஏமாந்து விடுகின்றார்கள். அந்த பணத்தை கதாநாயகனும் அவனது நண்பர்களும் எப்படி மீட்டெடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம். இதற்கான திரைக்கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் எழுதி படமாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் கோவளம் கடற்கரையில் உள்ள ஒரு சிறு மணல் தீவில் படமாக்கப்பட்டது. படக் குழுவினர் அந்தத் தீவிற்கு படகில் செல்லும்போது இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுக்கடலில் தத்தளித்திருக்கிறது. அலையின் வேகத்துக்கு படகு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட படகில் இருந்த அனைவரும் பதறியடித்திருக்கின்றனர். இந்தக் களேபரத்தில் கதாநாயகி பயந்துபோய் மயங்கி விழுந்துவிட்டாராம். அதன் பின் கடலோர மீட்புக் குழுவினர் விரைந்து வந்து படகை சரி செய்து அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த நிகழ்வை இப்போதும் ‘திடுக்’கென்ற உணர்வோடு விவரிக்கிறார்கள் படக் குழுவினர்.