டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயோன்.’
இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்த ‘மாயோன்’ படத்தின் திரைக்கதையை எழுத, இசைஞானி இளையராஜா தெய்வீக பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குநரான என்.கிஷோர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்த ‘மாயோன்’ திரைப்படம் புராணக் கதைகளுடன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக் குழு ‘ஆடியோ விளக்க’ பாணியிலான திரைப்பட பதிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்த ‘மாயோன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, அதில் இடம் பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்வைத் திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் – அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல்முறையாக ‘மாயோன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது.
அதைத் தொடர்ந்து மனதை மயக்கும் இசை மெட்டுகளுடன் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன.
இதே தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ‘சைக்கோ’ திரைப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, அவர்களின் அடுத்த படமான இந்த ‘மாயோன்’ படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.
இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப் படமும் அப்படியே தணிக்கை பெற்று, பாரட்டுக்களை குவித்துள்ளது. இதற்காக மத்திய தணிக்கை வாரியத்திற்கு படக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இந்த ‘மாயோன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.










