KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார்.
முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.
இந்த படம் ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கும் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும்விதமாகவும், அப்படி ஒரு போராட்டாம் மீண்டும் எழுந்தால்தான் மதுவில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும் என்பது குறித்தும் விவசாயிகள் படும் துயரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கு இந்தப் படம் திரையிட்டு காட்டப்பட்டது.
படத்தை பார்த்துவிட்டு நடிகர் ராதாரவி பேசும்போது, “மதுவை ஒழிப்போம்.. மக்களை காப்பாற்றுவோம்.. விவசாயிகளை காப்பாற்றுவோம்.. பெண்களை காப்பாற்றுவோம் என ஒரு நல்ல கருத்தை இதில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்க்கும்போது இது நான் நடித்த படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மாறுதலாக இருக்கிறது.
தண்ணீர் எவ்வளவு நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல என்பதைதான் இதில் காட்டியிருக்கிறார்கள்.. இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்” என்றார்.