full screen background image

மாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்

மாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் அருண் விஜய்யும், பிரசன்னாவும் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக பிரியா பவானி சங்கர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜாக்ஸ் பெஜாய், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், படத் தொகுப்பு – ஶ்ரீஜித் சாரங், சண்டை இயக்கம் – டான் அசோக், கலை இயக்கம் – சிவசங்கர், பாடல்கள் – விவேக், உடைகள் வடிவமைப்பு – அசோக்குமார், விஷிவல் எஃபெக்ட்ஸ் – Knack Studios, புகைப்படங்கள் – ஜெய்குமார், விளம்பர வடிவமைப்பு – சின்னா சுரேஷ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D’one, நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜன், தயாரிப்பு – சுபாஸ்கரன், தயாரிப்பு நிறுவனம் – லைகா புரொடெக்சன்ஸ், எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.

‘துருவங்கள் 16’, ‘நரகாசுரன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் 3-வது திரைப்படம் இதுவாகும்.

ஆர்யன் என்னும் அருண் விஜய்யும், சத்யா என்னும் பிரியா பவானி ஷங்கரும் மத்திய போதை தடுப்புத் துறையில் வேலை செய்யும் துடிப்பான அதிகாரிகள்.

சென்னையில் போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபட்டிருக்கும் சின்னச் சின்ன ஆட்களைப் பிடிக்கும் இவர்களால் இவர்களின் தலைவனைப் பிடிக்க முடியவில்லை. இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் போதை தடுப்புத் துறையின் தலைமை அதிகாரியே திடீரென்று கொலை செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து அருண் விஜய்யின் குடும்ப நண்பரும் சமூக சேவகருமான தலைவாசல் விஜய்யும் கொல்லப்படுகிறார். இதன் பின்னால் பெரிய சதி வலையே இருக்கிறது என்பதை ஊகிக்கிறார் அருண் விஜய்.

இப்போதுதான் போதை மருந்து கடத்தல் கும்பலின் ஒரு தலையான டி.கே. என்னும் பிரசன்னா முகத்தைக் காட்டுகிறார். தான்தான் அவர்கள் இருவரையும் கொலை செய்ததாகச் சொல்கிறார். முடிந்தால் தன்னைப் பிடித்துக் காட்டு என்று அருண் விஜய்யிடம் சவால் விடுகிறார்.

இந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் அருண் விஜய் பிரசன்னாவையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க முயல்கிறார். அது முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் இந்த மாபியா முதல் பாகத்தின் திரைக்கதை.

மிக. மிக சிறிய கதை. அதேபோல் கதையின் மாந்தர்களும் குறைவு. 8 கதாபாத்திரங்களுக்குள் படத்தின் மொத்தக் கதையுமே அடங்கிவிட்டது. இரண்டாவது பாகத்திற்கான லீடிங் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ளதால் அதில்தான் இந்த முதல் பாகத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

அருண் விஜய்க்கு இதுவரை கிடைக்காத ஒரு ஸ்டைலான அறிமுகம் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. அவருடைய உடை வடிவமைப்பும் பெரிதும் கவர்கிறது.

அருண் விஜய் போலீஸ் அதிகாரிதான். ஆனால் அவர் என்ன பதவியில் இருக்கிறார் என்பதைச் சொல்லாமலேயே கடைசிவரையிலும் முறுக்கு சுத்தியிருக்கிறார் இயக்குநர். இவ்வளவு நிஜத்துக்கு அருகில் நடப்பது போல் எடுக்கத் தெரிந்த இயக்குநர் இதையும் கொஞ்சம் தெளிவாக்கியிருக்கலாம்.

படம் முழுவதும் ஸ்லோமோஷனில் ஓடுவது, நடப்பது, அமர்வது.. துப்பாக்கியைத் தூக்குவதுமாகவே காட்சிகளை வைத்திருப்பதால் சிறப்பான நடிப்புக்கென்று அருண் விஜய்யும் கஷ்டப்படவில்லை. இயக்குநரும் மெனக்கெடவில்லை.

கிளைமாக்ஸில் பிரசன்னாவுக்கும் மேலேயிருக்கும் டான் யார் என்பது தெரியும் காட்சிகளில்தான் அருண் விஜய் பிரகாசமாக இருக்கிறார். ஆனால் அந்த நடிப்பை இரண்டாவது பாகத்தில்தான் நாம் காண முடியும்.

‘திவாகர்’ என்னும் பிரசன்னாவுக்கு வில்லன் வேடம். வித்தியாசம் இல்லை. ‘அஞ்சாதே’ படத்திலாவது அவருக்கென்று தனியே இருந்த கேரக்டர் ஸ்கெட்ச்சினால் கவர்ந்திழுத்தார். இதில் பரவாயில்லை என்ற அளவுக்காச்சும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வில்லத்தனமான வசன உச்சரிப்பு.. வாயில் சிகரெட்.. பந்தாவான நடை.. ஸ்டைலிஸான உடைகள்.. இவைகளுடன் பிரசன்னாவின் பிரசன்ன வியூகம் அந்த வில்லத்தனத்துக்குப் போதவில்லை. இன்னும் கூடுதலாக எதையாவது செய்திருக்கலாம்.

பிரியா பவானி ஷங்கர் இதில் துப்பாக்கியைத் தூக்கியிருப்பது அவருக்கே கிடைத்த ஒரு சிறப்புதான். நடிப்பை வெளிப்படுத்தும் அளவுக்கான அழுத்தமான காட்சிகள் இல்லையென்பதால் அடுத்த பாகத்தில் இவருக்காகவும் காத்திருக்கலாம்.

தலைவாசல் விஜய்யின் அனுபவ நடிப்பு மட்டுமே அவருடைய கதாபாத்திரத்தின் மீது கவனம் வரும் அளவுக்கு ஈர்க்கிறது. மற்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி.. அருண் விஜய்யின் அப்பா என்று சிலரும் தங்களது கேரக்டருக்கான நடிப்பைக் குறைவில்லாமல் காண்பித்திருக்கிறார்கள்.

படத்தில் மிகப் பெரிய ஏமாற்றம் ஆக்சன் காட்சிகள்தான். ஆக்சன் காட்சிகளே ஸ்லோமோஷனோ என்று சொல்லும் அளவுக்குக் காட்சிகளை வைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஹோட்டலில் அருண் விஜய் சண்டையிடும் காட்சிகளை நிச்சயமாக மன்னிக்க முடியாதது.. மிக சுமாராக அமைந்துவிட்டது..!

ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகளில் தேவையே இல்லாமல் கிரேடிங் செய்திருக்கிறார்கள் போலும். அத்தனையும் சிவப்பாகவே ஜொலிக்கின்றன. இருந்தாலும் ஒருவித போதையை இந்தப் படத்தின் ஒளிப்பதிவும் சேர்ந்தளிக்கிறது. போதை மருந்து தயாரிக்கும் இடத்தின் பின்னணியைக் காட்டும்போது கலை இயக்குநர் சிவசங்கரின் பங்களிப்பு தெரிகிறது. அவருக்கு நமது வாழ்த்துகள்.

ஜேக்ஸ் பிஜாயின் இசையில் ஒரேயொரு பாடல் ஒலித்திருக்கிறது. பின்னணி இசையில் வில்லத்தனத்துக்கான தீம் இசை மட்டுமே கேட்கும் ரகம். மற்றவைகள் காதைக் கிழித்தது. அவ்வளவுதான்..!

NetFlix-ல் கொடி கட்டிப் பறக்கும் ‘நார்க்கோஸ்’ வெப் சீரீஸின் படிமம் இந்தப் படத்தில் சில இடங்களில் தெரிகிறது. அருண் விஜய்க்கான தீம் இசையாகவும் இதே ‘நார்க்கோஸ்’ இசை ஒலிக்கிறது. 

படத்தில் போதை மருந்து பயன்படுத்துவோர் அடுத்தடுத்து என்னென்னெ செய்வார்கள்.. அவர்களுடைய ரெகுலர் நடவடிக்கைகள் என்ன.. போதை மருந்துகளின் தன்ணைகள்.. வகைகள்… கடத்தல்காரர்களின் நெட்வொர்க் செயல்பாடுகள் என அந்த இருட்டு உலகத்தின் இன்னொரு பக்கத்தையும் நமக்குக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.  

தொடர்ந்து நடக்கும் கொலைகள், அதன் புதிர் பின்னணி, அதை அருண் விஜய் புலனாயும் விதம் என ஆரம்பக் காட்சிகள் நமக்குள் மிகப் பெரிய ஆர்வத்தை உண்டாக்குகின்றன. ஆனால் போகப் போக சுவாரஸ்யம் குன்றி சவலைப் பிள்ளையாகிவிட்டது.

படத்தில் அருண் விஜய்யின் பெயர் ‘ஆரியன்’. வில்லனான பிரசன்னாவின் பெயர் ‘டி.கே.’ நடுவில் ஒரு ‘எம்’ சேர்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதேபோல் பிரிய பவானி சங்கரின் பெயர் ‘சத்யா’. இன்னொரு உதவியாளரின் பெயர் ‘வருண்’. ‘ஆரியனுக்கு’த் துணை ‘சத்தியமும்’, ‘மழை’யும் என்பது போல பெயரிலேயே பொருத்தத்தைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர்.

இது போலவே திரைக்கதைக்காகவும் நிறையவே யோசித்திருக்கலாம். அதற்கான ஸ்கோப்புகள் கதையில் நிறைய இருக்கின்றன. அதை பாலோ செய்திருந்தாலே போதும். படத் தொகுப்பாளருக்கு வேலை வைக்கும் அளவுக்குக் காட்சிகளை நறுக்கிக் கொடுத்திருக்கலாம். போதும் என்று இயக்குநர் நினைத்தது நமக்கு போதாததுபோல் தோன்றுகிறது.

‘துருவங்கள் 16’ இயக்குநரின் அடுத்த படம் என்ற நம்பிக்கையோடு உள்ளே வந்தவர்களை கொஞ்சம் ஏமாற்றத்தோடு திருப்பியனுப்பியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். அவசர யுகத்தில் படங்களை இயக்கச் செய்தால் அது இப்படித்தான் இருக்கும்.

ஆகவே, இயக்குநர் கார்த்திக் நரேன், அடுத்த பாகத்தில் முதல் பாகத்திற்கும் சேர்த்து வைத்து நம்மை பரவசப்படுத்துவார் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்..!

Our Score