FIRST CLAP ENTERTAINMENT நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ராஜ்குமாரும், GS ARTS நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பூக்கடை ஜி.சேட்டுவும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தில் நட்டி நட்ராஜ், லால், அனன்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆர்.எஸ்.சிவாஜி, மாரிமுத்து, அஸ்வந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – என்.சண்முகசுந்தரம், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், இசை – நவீன் ரவீந்திரன், கலை இயக்கம் – அருண் சங்கர் துரை, சண்டை இயக்கம் – பி.சி., உடைகள் வடிவமைப்பு – பாரதி, பாடல்கள் – தமிழ்மணி, விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக், புகைப்படங்கள் – எம்.தினேஷ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு – ஜி.எஸ்.ஆர்ட்ஸ், பர்ஸ்ட் கிளாப் எண்ட்டெர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் – ராஜசேகர், பூக்கடை ஜி.சேட்டு, எழுத்து, இயக்கம் – ஜெகன் ராஜசேகர்.
ஒரு சாமான்யனுக்கும், ஊருக்கே காட்பாதரான ஒரு தாதாவுக்கும் இடையில் நடக்கும் போர்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.
தன் மகனைக் காப்பாற்றுவதற்காக இன்னொரு ஏழையின் மகனைக் கொல்லத் துடிக்கும் கொலைகாரன்தான் காட்பாதரான ‘மருத சிங்கம்’ என்னும் லால். கல்யாணமாகி 13 வருடங்கள் கழித்து பிறந்த பையன் என்பதால் தனது மகன் மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருக்கிறார்.
அதே நேரம் ஊரில் அனைத்து அட்டூழியங்களையும் செய்து வருவதால் ஊர் முழுக்க விரோதிகளையும் அதிகமாகவே சம்பாதித்து வைத்திருக்கிறார் லால். இருந்தும் யாராலும் இவரை எதுவும் செய்ய முடியவில்லை. லோக்கல் போலீஸும் அண்ணாத்தையின் பாக்கெட்டில்.
இப்படியொரு சூழலில் லாலின் மகனின் இதயத்தில் சுவாசப் பிரச்சினை. சீரியஸாக இருக்கிறான். “இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே பையனைக் காப்பாற்ற ஒரே தீர்வு…” என்கிறார்கள் மருத்துவர்கள். அதுவும் ‘இந்தப் பையனுக்கு இருக்கும் அதே ரத்த வகையைச் சேர்ந்தவரிடம்தான் இதயத்தை வாங்க வேண்டும்’ என்று நிபந்தனையும் விதிக்கிறார்கள்.
லாலின் அடியாட்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக போய் அதே ரத்த வகையைச் சேர்ந்த, அதே வயதையொத்த சிறுவனைத் தேடியலைகிறார்கள். இவர்களது கண்ணில் சிக்குகிறான் ‘அர்ஜூன்’ என்னும் சிறுவன்.
இவனது அப்பாதான் ‘நட்டி’ என்னும் நடராஜன். பிளம்பிங் வேலைகளைக் குத்தகைக்கு எடுத்து செய்யும் தொழிலைச் செய்து வருகிறார். மனைவி மித்ரா, மகன் அர்ஜூனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவருக்கு, இப்போது லால் மற்றும் அவரது அடியாட்களால் உயிர் போகும் பிரச்சினை உருவாகிறது.
அர்ஜூனை உயிருடன் தூக்கி வரச் சொல்கிறார் லால். இதற்காக லாலின் அடியாட்கள் நட்டியின் வீடு தேடி வருகிறார்கள். நட்டி தவறான முகவரியைச் சொல்லி தப்பிக்கப் பார்த்தாலும் அந்தக் குடியிருப்பினை லாலின் அடியாட்கள் மொத்தமாக முற்றுகையிட்டு அர்ஜூனைத் தேடுகிறார்கள்.
இவர்களிடமிருந்து தனது மனைவியுடனும், மகனுடனும் தப்பிக்க நினைத்து போராடுகிறார் நட்டி. அவரது முயற்சி வெற்றி பெற்றதா… இல்லையா… என்பதுதான் இந்த ‘காட்பாதர்’ படத்தின் திரைக்கதை.
படம் முழுவதையும் பரபரப்பாகவே வைத்திருக்க பெரிதும் உதவியிருக்கிறார் அப்பாவாக நடித்திருக்கும் ‘நட்டி’ நட்ராஜ். அவருடைய பரபரப்பான நடவடிக்கைகளும்.. அடுத்தடுத்து எடுக்கும் ஆக்சன்களும்தான் படத்தின் திரைக்கதையையே நகர்த்துகின்றன.
ஒரு சராசரியான, குடும்பத்திற்காக உழைக்க வேண்டியிருக்கும் கணவராக.. பாசமிக்க அப்பாவாக.. தனது உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் நட்டி. பையனைக் காப்பாற்ற வேண்டி அவர் படும் துடிப்பும், செய்யும் சாகச வேலைகளும் அந்தந்த நேரத்தில் டென்ஷனை ஏற்றி படத்தினை பார்க்க வைக்கிறது.
இவருடைய மனைவியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனன்யா தமிழுக்கு வந்திருக்கிறார். மகனை மீட்கப் போராடும் காட்சியில் ஒரு தாயின் தவிப்பை தனது நடிப்பில் குறைவில்லாமல் காட்டியிருக்கிறார் அனன்யா.
‘சூப்பர் டீலக்ஸில்’ தனது துடுக்குத்தனமான கேள்விகளால் நம்மை ஈர்த்த அஸ்வந்த் இதில் சிறுவன் அர்ஜூனாகவும் கவர்கிறார்.
‘மருத சிங்க’மான லால்.. தனது வில்லத்தனத்தை ஸ்லோமோஷனிலும் காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். தான் பெற்ற மகன் மீது பாசத்தைக் கொட்டும் காட்சிகளிலும் இந்த இரும்பு மனிதனுக்குள் இப்படியொரு ஈரமா என்று கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.
தன் மகனுக்காக இன்னொருவரின் மகனது உயிரைக் கேட்கும் காட்சியில் எந்தவித பாவ உணர்ச்சியும் இல்லாமல் அவர் பேசும் காட்சியே, இந்த வில்லத்தனத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கிறது.
மற்றும் மாரிமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி போன்று பலரும் இருந்தும் லாஜிக் மிஸ்டேக்கால் நம்மைக் கவரவில்லை.
ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கின்றன. அபார்ட்மெண்ட்டில் பல இடங்களையும் படம் பிடித்திருப்பதால் மிகக் கடினமான வேலையை ஒளிப்பதிவு டிபார்ட்மெண்ட் செய்திருக்கிறது என்பது தெரிகிறது. பாராட்டுக்கள்.
கலை இயக்குநருக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். ஒரு அபார்ட்மெண்ட் போலவே செட் போட்டு அதில் கேமிரா நகரும் அளவுக்கான இடமெல்லாம் கொடுத்து அத்தனையையும் உண்மையான இடம் போல காட்சியளிக்க வைத்திருப்பதற்கு பெரிய திறமை வேண்டும். கலை இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!
பாடல் காட்சிகளிலும் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். அதனால் பாடல்களை ரசிக்க முடியவில்லை. ஆனால் பின்னணி இசை கொஞ்சம் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறது. லாலிற்காக ஒலிக்கும் ‘காட் பாதரின்’ தீம் இசையும், பரபர காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இசையும் கவர்ந்திருக்கிறது..!
படத்தை இன்னும் கொஞ்ச நேரம் கூட்டியிருக்கலாம். நேரம் இருக்கிறது. விரிவான காட்சிகளை வைக்கத் தெரியாமல் முடித்துவிட்டார்கள் போலும். அதிலும் கிளைமாக்ஸ் சுத்தமாக இங்கே தமிழகத்தில் எடுபடாது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்கூட “இது என்னப்பா முடிவு..?” என்று முணுமுணுப்பார்கள்.
இப்படியொரு முடிவை தயாரிப்பாளர் எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. வழக்கமாக பேய்ப் படங்களில்தான் இப்படியொரு முடிவு இருக்கும். இது போன்ற நல்லவன் யார்.. கெட்டவன் யார் என்ற படங்களுக்கு இது போன்ற முடிவு தேவைதானா..? இயக்குநர் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
அதேபோல் கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத அளவுக்கு அபார்ட்மெண்ட்டில் யாருமே உதவிக்கு வர மாட்டார்கள். லோக்கல் போலீஸ் உதவிக்கு வரவே வராது என்பதுபோல இந்த 2020-ம் ஆண்டுக்கு ஒத்தே வராத கான்செப்ட்டில் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். இதெல்லாம் இப்போதையக் காலக்கட்டத்தில் முடியாத காரியம்..
சத்தமில்லாமல் மருத்துவமனைக்கு வரவழைத்து வேண்டுமானால் முடிக்கலாம். அல்லது சாகப் போகிறவரை சீக்கிரமாக சாகடித்து பெறலாம். இப்படி வீடு தேடி வந்து சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்து இதயத்தை மாற்றுவது என்பது இயக்குநரின் உச்சப்பட்சமான கற்பனை..!
‘காட் பாதர்’ என்ற பொருத்தமில்லாத தலைப்புக்கு பொருத்தமில்லாத கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இன்னும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய திரைப்படம். அவ்வளவுதான் சொல்ல முடியும்..!