full screen background image

இயக்குநரை சிக்கலில் மாட்டிவிட்ட கவிஞர் தாமரை..!

இயக்குநரை சிக்கலில் மாட்டிவிட்ட கவிஞர் தாமரை..!

கவிப்பேரரசு வைரமுத்து போலவே குணம் கொண்டவர் கவிஞர் தாமரை. தான் ஒப்பந்தமாகும் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்று நினைப்பவர். கெளதம் வாசுதேவ் மேனன் மட்டுமே இப்படி தன் படத்தின் பாடல்கள் மொத்தத்தையும் தாமரையிடமே கொடுப்பவர்.

ஒரு பாடல், இரு பாடல்கள் என்றாலே கூட்டத்தோடு கூட்டமாக வர வேண்டுமே என்று தாமரை நினைக்கிறார் போலிருக்கிறது. ‘இரும்புக் குதிரை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசிய பேச்சுக்களைக் கேட்டால் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது..

“இந்தப் படத்தின் ஐந்து பாடல்களையும் நானே எழுதுவதாகத்தான் இருந்தது. ஆனால், கடைசியில் நான்கு பாடல்களைத்தான் கொடுத்தார்கள். ஐந்தாவது பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார். அவருடைய ‘ஹலோ பிரதர்’ பாடலையும் பார்த்தேன். கேட்டேன். ஒரு கமர்ஷியல் படத்துக்கு என்ன வேணுமோ அதைத்தான் எழுதியிருக்கிறார். பிரமாதமாக படமாக்கியிருக்கிறார்கள்.

நான் எழுதிய பாடல்களில் ‘பாண்டிச்சேரி வழியில’ இப்ப பார்த்திருப்பீங்க.. இதுவும் கமர்ஷியல் பாடல்தான்.. ஆனாலும் ‘பெண்ணே பெண்ணே’ பாடலும், அங்கே ‘இப்போ என்ன செய்கிறாய்’ பாடலும் படம் வெளிவந்தவுடன் நிச்சயம் ஹிட்டாகும்னு நம்புறேன்..” என்றார்.

தொடர்ந்து பேசும்போது, “பொதுவா பாடல் பதிவின்போது, அப்பாடலை எழுதிய பாடலாசிரியரை உடன் வைத்துக் கொண்டுதான் பாடலை பதிவு செய்ய வேண்டும்.  இது என்னுடைய கருத்து. அப்போதுதான் பாடல் சிறப்பாக இருக்கும்.  பாடும்போதே ஏதாவது மாறுதல் செய்ய தோணிச்சுன்னா உடனே செய்யலாம்.. அதுனால பாடல் பதிவு செய்யும்போது நானும்கூட இருக்கணும்னு எப்போதும் விரும்புவேன்.. ஆனா, என்ன காரண்மோ தெரியலை… இந்தப் படத்துக்கான பாடல்களை பதிவு செய்தபோது என்னை கூப்பிடலை..” என்றார் வருத்தத்துடன். தாமரை இதைச் சொல்லும்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இறுக்கமான முகத்துடன் மேடையில் அமர்ந்திருந்தார். தாமரை பேசி முடிக்கும்வரையிலும் அவர் பக்கமே திரும்பவில்லை அண்ணன்.. என்ன சண்டையோ..?

மேலும் தொடர்ந்த தாமரை, “படத்தின் முன்னோட்டத்தில், ஹீரோ அதர்வா படுவேகமாக, மிகவும் அபாயகரமாக பைக் ஓட்டுவதைப் பார்த்தேன். இன்ன்றைய இளைஞர்கள் வெளியிலும் இப்படித்தான் பைக் ஓட்டுகிறார்கள். போக்குவரத்து விதிகளை மதிக்காமல், அராஜகமாக பைக்கில் பறக்கிறார்கள். இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களில் இப்போக்கைக் கண்டித்து பத்திரிகைகள் தலையங்கம் எல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றன. சென்ற வாரத்திய ‘ஆனந்தவிகடனின்’ தலையங்கம் இதுதான்..  இயக்குநர் என்கிட்ட சொன்ன மாதிரி கதையை எடுத்திருந்தாருன்னா நிச்சயமா இந்தப் படம் ஒரு ஹாலிவுட் ஸ்டைல்ல ரசிக்கிற மாதிரியிருக்கும்..” என்று திரும்பத் திரும்ப சொல்லிவிட்டுப் போனார்.

கடைசியாக பேச வந்த இயக்குநர் யுவராஜ் போஸ், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்விதமாக, “தற்போது பைக் ரேஸ் என்ற பெயரில் இளைஞர்கள் செய்யும் அராஜகத்தை இந்த படத்தில் நாங்கள் தொடலை. அதர்வாகூட, சாலை விதிகளை மீறாமல், ஹெல்மெட் போட்டுத்தான் வண்டி ஓட்டுவார்.

மேலும், சாலை விதிகளை மீறும்போது என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் படத்தில் சொல்லி இருக்கிறோம். அப்படி ஒரேயொரு முறை சிவப்பு விளக்கு இருக்கும்போதே சிக்னலை தாண்டும் அதர்வாவுக்கு அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுதுன்றதுதான் படத்தோட கதை.. எனவே, இளைஞர்களை தவறாக வழி நடத்தும் படமாக இது நிச்சயம் இருக்காது..

தாமரை மேடத்துக்கிட்ட என்ன சொன்னனோ.. அதைத்தான் படமாக்கியிருக்கேன். அவரும் படம் பார்த்திட்டு நிச்சயம் என்னை பாராட்டுவாருன்னு நினைக்கிறேன்..” என்றார் இயக்குனர் யுவராஜ்.

இப்படி, படத்துல வேலை பார்த்திருக்கிறவங்களே படத்தைப் பத்தி நெகடிவ் கமெண்ட்ஸ் வர்ற மாதிரி பேசினால் எப்படி..?

Our Score