குறும்பட உலகத்திலிருந்து பெரும்பட உலகமான திரையுலகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். எனவே குறும்படங்களை வெறும் படங்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. அவை மீதும் இப்போது கவனம் குவிந்து வருகிறது. அவ்வப்போது வெளியாகும் சில குறும் படங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன; கவன ஈர்ப்பையும் பெறுகின்றன.
அப்படி பேசப்பட வைக்கும் ஒரு குறும் படமாக உருவாகியுள்ளது இந்த ‘மேஜிக்.’ இது முழுக்க, முழுக்க ஒரு காதல் கதைதான். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் டி.விஜயசுந்தர். இவர் ஏற்கெனவே ‘யூ-ஏ.’ ‘ஒபாமா’ போன்ற குறும் படங்களை இயக்கியவர். வி.ஜே. சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. பி.ஹேமந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ், ஸ்ரீகாந்த் படத் தொகுப்பு செய்துள்ளனர். ஷரன் சூர்யா இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்துள்ள 90-வது குறும்படம் இது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மோசஸ்.
இதில் பாலா ஹாசன் நாயகனாக நடித்துள்ளார். திவ்யா பானுச்சந்திரன் நாயகி. இவர் ‘ஜி’ தமிழ் டிவியில் ‘கொஞ்சம் காபி நிறைய சினிமா’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவர்கள் தவிர வேறு சில பாத்திரங்களும் உண்டு. அவர்களையும் சுற்றிச் சுழல்கிறது கதை.
அப்படி என்னதான் கதை..?
ஹீரோவுக்கு ஒரு இரவு தூக்கத்தில் கனவு ஒன்று வருகிறது.
அந்தக் கனவில், ஒரு காதலர்கள் உருகி உருகி காதலிக்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவு வரச் சாத்தியமே இல்லை. அந்த அளவுக்கு அன்பும் அனுசரணையும் அவர்களுக்குள் நிரம்பி வழிகிறது.உலகில் மகிழ்ச்சியானவனாக அவன் தன்னை உணர்கிறான். அவர்களுக்குள் கோபமோ ஈகோவோ இல்லை. அப்படிப்பட்ட அந்தக் காதலிக்கு திடீரென்று வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது. அவளின் சூழல் புரிகிறது. மனதில் எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என்கிறான் காதலன்.
இப்போது ஹீரோ விழித்துக் கொள்கிறான்.
ஹீரோயினுக்கும் ஒரு கனவு வருகிறது.
உள்ளம் உருகித் ததும்பும் நேசம் நிரம்பி வழியும் அப்படி ஒரு காதலுடன் உள்ளார்கள். மதிப்பதும், மன்னிப்பதும்தான் வாழ்க்கை என்றிருக்கிறார்கள்.
இப்போது ஹீரோயின் விழித்துக் கொள்கிறாள்.
நிஜத்தில் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். அவர்கள் காதலித்து மணம் செய்தவர்கள். ஆனாலும் நாளொரு பிணக்கு, பொழுதொரு சண்டை என இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ஈகோ தலைதூக்கி சண்டையில் முடியும் சூழல் வந்து கொண்டே இருக்கிறது.
அன்றைக்கு அவர்களுக்கு வந்த கனவு அவர்களைப் புரட்டிப் போடுகிறது. சில கனவுக் காட்சிகள் நிஜத்தில் நடக்கின்றன. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? கனவு போலவே வாழ்க்கை மாறி வராதா..? என்ற கேள்விகள் அவர்களுக்குள் எழுகின்றன. முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.
இந்தப் படத்தில் காதலை மாறுபட்ட கோணத்தில் கையாண்டுள்ளார் இயக்குநர். காதலின் பல நிலைகளை இதில் காட்டியுள்ளார். கனவுக்கும், உண்மைக்குமான உளவியல் தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். இது ஒரு மாறுபட்ட முயற்சிதான். காட்சிகளை அழகுணர்ச்சியோடும், நேர்த்தியோடும் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.ஹேமந்த்.
மென்பொருள் உலகப் பின்னணியில் சென்னையில் நடக்கும் கதை இது. நாயகன், நாயகி இருவருமே பாத்திரத்துக்கேற்ற முகங்கள். நாயகனும் நாயகியும் நான்குவிதமான தோற்றங்களில் வருகிறார்கள். விறுவிறுப்பான திரைக்கதையில் விழும் எல்லா முடிச்சுகளும் க்ளைமாக்ஸில்தான் அவிழ்கின்றன.
ஒரு முழு நீள சினிமாவின் வீரியத்தோடு 50 நிமிடத்தில் இதனை குறும் படமாக்கியுள்ளனர். ‘யாரோ இவள்..? யாரோ இவள்..? உயிரோரம் வழிந்தோடும் பனிக் கூழோ இவள்? காலைவரை எந்தன் மனம் பாலைவனம்’ என்கிற ஒரு பாடலும் படத்தில் இடம் பெற்றுள்ளது. பாடலை எழுதியவர் கார்த்திக். அந்த ஒரு பாடலும் ஒரு திரைப்படப் பாடலுக்கான முழு தகுதியோடு உள்ளது.
இயக்குநர், உதவியாளர்கள் என்று இந்த படக் குழுவில் பலரும் பொறியியல் பட்டதாரிகள்தான். படித்தவர்கள் கையில் சினிமா போய்க் கொண்டிருப்பதன் அறிகுறிதான் இது. குறும்படம் தங்கள் திரைப்படக் கனவுக்கான ஒரு படிக்கட்டு என்கிற என்கிற வகையில் இதை உருவாக்கியுள்ளனர்.
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!













