நேற்றைய தினம் தமிழ்த் திரைப்பட துறையை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாளாக ஆகிவிட்டது.
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தில் நடந்திருக்கும் ஊழல் மற்றும் கையாடல் பற்றிய செய்தி வெளியான நொடியில் இருந்து தமிழ்த் திரையுலகம் முழுவதும் இதுவே பேச்சாக இருந்து வருகிறது.
புகழ் பெற்ற மற்றொரு படத் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்தின் தலைவரான கருணாமூர்த்தியும் அவரது பெண் உதவியாளரான பானும் இணைந்து தங்களுடைய நிறுவனத்தில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்தும், பலவிதங்களில் நிறுவனத்திற்கு செலவுகளை வைத்து இதன் மூலம் நிறுவனத்திற்கு பெருத்த பண இழப்பை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லி அவர்கள் இருவர் மீதும் லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம், சென்னை காவல்துறையில் நேற்றைக்கு புகார் கொடுத்துள்ளது.
புகார் கொடுத்தக் கையோடு புகார் பிரதிகளையும் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது லைகா நிறுவனம்.
லைகா நிறுவனம் கருணாமூர்த்தி மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சுருக்கம் இங்கே :
லைகா நிறுவனத்தின் ஆலோசகராக ஐங்கரன் கருணாமூர்த்தி கடந்த 2014-ல் இணைந்தார். அவர் ஓர் இலங்கைத் தமிழர், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்.
ஏற்கெனவே சினிமா தயாரிப்பில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவர் மீது லைகா பெருமதிப்பும் முழு நம்பிக்கையும் கொண்டிருந்தது. லைகா நிறுவனத்துக்காக கதை கேட்பது, கதையை உறுதி செய்வது, நடிகர், நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்களை முடிவு செய்வது. அவர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது என அனைத்துப் பணிகளையும் கருணாமூர்த்தி செய்து வந்தார். அவருக்கு பானு என்பவர் உதவியாக இருந்தார்.
நிதி மேலாண்மை பொறுப்பு முழுவதுமாக நம்பிக்கையின் அடிப்படையில் கருணாமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடைய கையெழுத்து இருந்தால்தான் எந்த ஒரு காசோலையும் செல்லுபடியாகும். அந்த அளவுக்கு அவருக்கு லைகா நிறுவனம் அதிகாரம் கொடுத்திருந்தது.
ஆனால் கருணாமூர்த்தி கடந்த 2 ஆண்டுகளாகவே லைகாவின் நம்பிக்கையைச் சிதைத்து வருகிறார். சாட்டிலைட் உரிமைகளில் நிதி மோசடி, ஓவர்சீஸ் உரிமையில் மோசடி, ரொக்கப் பணம் கையாடல் என ஈடுபட்டு வந்துள்ளார். அவருடைய உதவியாளர் பானுவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
அலுவலகத்தில் கருணாமூர்த்தி இல்லாதபோது பானுதான் எல்லாம் என்ற உத்தரவை அவர் போட்டிருந்ததால் பானு, லைகா தனது சொந்த நிறுவனம் என்ற நினைப்பில் அதீத ஆதிக்கத்தினை செலுத்தியுள்ளார்.
2014-ல் ‘கத்தி’ படத்தின் சேட்டிலைட் விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் கருணாமூர்த்தி. இதேபோல் 2018-ல் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் 14 கோடி ரூபாய் அளவுக்கு லைகா நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார். ‘இந்தியன் 2’ படத்தின் மூலமாகவும் 4 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.
‘இப்படை வெல்லும்’, ‘தியா’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நிறுவனத்தின் நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் பணத்தை சூறையாடியுள்ளார். சேட்டிலைட் உரிமைகள் விற்றது, ஓவர்சீஸ் ரைட்ஸ்களை விற்ற வகையில் 90 கோடி ரூபாய்வரையிலும் லைகா நிறுவனத்தில் மோசடி செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி இது பற்றியெல்லாம் கருணாமூர்த்தியிடம் கேட்டபோது இவை அனைத்தையும் ஒத்துக் கொண்டு எழுத்துபூர்வமாக ஓர் ஒப்புதல் அளித்தார். அதில் 12 மாதங்களுக்குள் 13,51,10,800 ரூபாயை லைகா நிறுவனத்திற்கு திருப்பித் தருவதாகக் கூறினார்.
இது தவிர 2019 மார்ச் 17-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதிவரையிலும் லீலா வென்சூர்ஸ் ஓட்டலில் தங்கியதன் மூலம் 42,20,334 ரூபாயை லைகா நிறுவனத்துக்கு செலவு ஏற்படுத்தியுள்ளார். ரொக்கப் பணமாக அவ்வப்போது நிறுவனத்தில் இருந்து வாங்கிய 14,15,000 ரூபாய் மற்றும் ரூ.13,27,736 ஆகியவற்றிற்கு எந்த ரசீதும் அவர் இதுவரையிலும் அளிக்கவில்லை.
கருணாமூர்த்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இதுவரையிலும் ரூ.1,26,89,342 செலவாகியுள்ளது. எப்போதும் விமானத்தில் பிசினஸ் க்ளாஸில்தான் கருணாமூர்த்தி செல்வார். மேலும் அவருக்கு நெருக்கமான ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு 25 கோடி ரூபாயை லைகா நிறுவனத்தின் பணத்தில் இருந்து சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளார்.
மொத்தமாக ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தியும் அவரது உதவியாளர் பானுவும் இணைந்து லைகா நிறுவனத்துக்கு 120 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இவை அனைத்திற்கும் அவருடைய உதவியாளரான பானுவும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே, ஐங்கரன் கருணாமூர்த்தியையும் அவரின் உதவியாளர் பானுவையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்…”
இவ்வாறு லைகா நிறுவனம் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.
இத்தனை கோடிகள் காணாமல்போகும்வரையிலும் நிறுவனத்தினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.
லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் லண்டன் வாழ் ஈழத் தமிழர். லண்டனிலேயே வசித்து வருகிறார். அவர் நேரிடையாக சென்னை நிறுவனத்தை கவனிக்கவில்லை என்றாலும், அவருக்கு நெருக்கமானவர்களை வைத்து கண்காணித்திருக்க வேண்டும்.
துவக்கத்திலேயே இதையெல்லாம் தடுத்திருந்தால் இத்தனை கோடிகள் இழப்பு நேரிட்டிருக்காது. திருடர்களுக்கு திருடுவதற்கான அனைத்து வழி வகைகளையும் செய்து வைத்துவிட்டு.. கடைசியில் இப்படி எல்லாம் முடிந்த பின்பு வந்து அழுது என்ன புண்ணியம்..?