‘லிங்கா’ திரைப்படத்தின் கதை திருட்டா..? கோர்ட்டில் வழக்கு..!

‘லிங்கா’ திரைப்படத்தின் கதை திருட்டா..? கோர்ட்டில் வழக்கு..!

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘லிங்கா’ திரைப்படத்தை தனது கதையைத் திருடி தயாரித்துள்ளார்கள். எனவே லிங்கா படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ரவிரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த ரவிரத்தினம் மதுரை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “நான் சின்னத்திரையில் நெடுந்தொடர்களை இயக்கி வருகிறேன். பெரிய திரையில் முதல்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்தேன். இதற்காக ‘முல்லைவனம் 999’ என்ற சினிமா கதையை தயார் செய்து, அந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளேன்.

இந்தப் படத்தின் கதையானது முல்லைப் பெரியாறு அணை, மற்றும் அந்த அணையைக் கட்டிய பென்னி குயிக் வரலாற்றை பின்னணியாக கொண்டது.

புதிய திரைப்படங்கள் தயாரிக்கப்படும்போது, அந்தப் படத்தின் கதையை வேறு யாரும் உரிமை கொண்டாடாமல் இருப்பதற்காக படத்தின் கதையை சமூக வலைத்தளமான யூ டியூப்பில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

அதன்படி, ‘முல்லைவனம் 999’ கதையை கடந்த 24.2.2013 அன்று யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். மறுநாள் முதல் ‘முல்லைவனம் 999’ கதை யூ டியூப்பில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து அன்றைய தினமே சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் ‘முல்லைவனம் 999’ படத்தின் பூஜை விழா சிறப்பாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

பூஜையை தொடர்ந்து, கடந்த 10 மாதங்களாக மதுரை, கேரளா, தேனி பகுதிகளில் படத்தின் முன்னோட்ட படப்படிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2015) ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவும், தமிழ் வருடப் பிறப்பு அன்று படத்தை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 2.5.2014 அன்று யூ டியூப்பில் எனது ‘முல்லைவனம் 999’ கதை, ‘லிங்கா’ என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ‘லிங்கா’வை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாகவும், அவரே விநியோக உரிமையை பெற்றிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘முல்லைவனம் 999’ படத்தின் கதையை யூ டியூப்பில் இருந்து திருடித்தான், ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எனது கதையை திருடியது சட்டப்படி குற்றமாகும். எனவே, ரஜினிகாந்த் மற்றும் ‘லிங்கா’ படக் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். ‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

மேலும், ‘முல்லைவனம் 999’ மற்றும் ‘லிங்கா’ படத்தின் கதைகளை ஆய்வு செய்து கதையின் உண்மையான ஆசிரியர் மற்றும் உரிமையாளர் யார் என்பதை அடுத்த மாதம்(டிசம்பர்) 12-ந்தேதிக்குள் கண்டு பிடிக்க உண்மை கண்டறியும் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “லிங்கா படத்தை ரூ.300 கோடி செலவில் தயாரித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து விநியோகஸ்தர் என்ற முறையில் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை ரூ.125 கோடி வசூல் செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டிற்கு சில நாட்களே உள்ளன. எனவே, அந்த படத்திற்கு உடனே தடை விதிக்க வேண்டும்” என வாதாடினார். அதைக் கேட்ட நீதிபதி, “எதிர்மனுதாரர்களிடம் கருத்துகளை கேட்காமல் அந்த படத்திற்கு தடை விதிக்க முடியாது” என கூறினார்.

மேலும், இந்த மனு குறித்து டி.ஜி.பி., தென் மண்டல ஐ.ஜி., மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர், லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதை ஆசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வரும் 19-ந்தேதிக்குள் இதற்கு பதிலளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Our Score