‘லிங்கா’ படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வலியுறுத்தி ‘லிங்கா’ படத்தினை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இணைந்து மேற்கொள்ளும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி கொடுப்பதா இல்லையா என்பது பற்றி நாளைக்குள் பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக உண்ணாவிரத அனுமதியை வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி விநியோகஸ்தர்கள் சார்பில் மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான ஆர்.சிங்காரவடிவேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா‘ படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் வெளியிடும் உரிமத்தை பெற்றேன். இந்த உரிமத்தை பெறும்போது, ‘லிங்கா’ படம் மாபெரும் வெற்றி பெறும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய்வரை வசூலித்து கொடுத்து ‘லிங்கா’ படத்தின் உரிமையைப் பெற்றோம்.
இந்த நிலையில், படம் வெளியான பின்னர், மிக குறைவான தொகையே வசூலானது. இதனால், தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் எங்களிடம் பணத்தை திருப்பித் தரும்படி பிரச்சினை செய்கின்றனர்.
இதனால் ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தையும், நடிகர் ரஜினிகாந்தையும் அணுகி ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு இழப்பீடு கேட்டோம். ஆனால், இதுவரை எந்த பதிலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதை கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தோம். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அல்லது சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 3-ம் தேதி மனு கொடுக்க சென்றோம்.
ஆனால், எங்களது மனுவைகூட போலீசார் பெறவில்லை. எனவே, வருகிற 10-ம் தேதி நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்..” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை வக்கீல்கள் எஸ்.ஜோயல், ஆர்.கே.அய்யப்பன் ஆகியோர் நேற்று தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த உண்ணாவிரதத்துக்கு அனுமதி உண்டா, இல்லையா என்பது பற்றி நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.